*குறை சொல்தல் வேண்டாமே*
*குறை சொல்லுதல் சர்வதேச கெட்ட குணம்.*
*சிலர் மனிதர்களைக் குறி வைத்து குறை சொல்வார்கள்.*
*சிலர் மனிதர்கள் என்றில்லை, தெய்வங்கள், அஃறிணைப் பொருட்கள் என எல்லாவற்றையும் குறை சொல்வார்கள்.*
*இதொன்றும் இன்று நேற்று தோன்றிய சமாச்சாரமல்ல.*
*நம்முடைய ஒரு நாள் வாழ்க்கையைக் கொஞ்சம் புரட்டிப் பார்ப்போம்.*
*காலையில் எழும்பி அலுவலகத்துக்குப் புறப் படும் அந்த சின்ன இடை வெளியிலேயே குற்றம் சொல்ல ஆரம்பிக்கிறோம்.*
*பின் அலுவலகம், போகும் வழி, வரும் வழி என எல்லா இடங்களிலும் அந்த குறை சொல்தல் தொடர் கதையாகிறது.*
*“குறை சொல்வதால் மனதுக்கு ஒரு இனம்புரியாத திருப்தி கிடைக்கிறது.*
*அதனால் தான் பலரும் குறை சொல்கிறார்கள்” என்கிறது உளவியல்.*
*குறை சொல்லுதல் மனதுக்கு தற்காலிகமான ஒரு இளைப்பாறுதலைத் தருகிறது.*
*அதே வேளையில் பலரைக் காயப் படுத்துகிறது.*
*எதையாவது அடைய வேண்டுமென முயல்கிறோம்.*
*தொடர்ந்து அதை நோக்கிப் பயணிக்கிறோம்.*
*ஆனால் முடியவில்லை.*
*நமது இயலாமையை ஒப்புக் கொள்ள நமது ஈகோ இடம் கொடுக்காது.*
*சட்டென பழியைத் தூக்கி இன்னொருத்தன் தலையிலே போட்டு விட்டால் வேலை முடிந்தது !*
*அப்படிச் சொல்வதால் உண்மையான தோல்வியின் காரணங்கள் பிடிபடுவதே இல்லை.*
*தோல்விக்கான காரணமே தெரியாவிடில் வெற்றிக்கான பாதையை எப்படித் தேர்வு செய்வது ?*
*குறை சொல்வது மனிதனுடைய குறைபாடு !*
*அடுத்தவர்களை மட்டம் தட்டுவதன் மூலம் தனது உயரத்தை அதிகரிக்கச் செய்யும் முயற்சி இது.*
*ஆழ்மனதில் உறைந்து கிடக்கும் நமது விரோதத்தின் வேர்களே இந்த குறையெனும் முட்களை விளைவிக்கின்றன.*
*பிடிக்காதவர்கள் மீது தான் குறையும், குற்றமும், விமர்சனமும் போர்த்தப் படுகிறது.*
*"உன் மேல எனக்கு அன்பு ரொம்ப ஜாஸ்தி, அதனால எப்போதும் குறை சொல்வேன்” என்று யாரும் சொல்வதில்லை.*
*அடுத்தவருடைய வளர்ச்சியோ, நிம்மதியோ, புகழோ, அழகோ மனசுக்குள் விதைக்கும் பொறாமை விதைகள் தான் பெரும்பாலும் குறைகளாய் முளை விடும்.*
*தன்னிடம் இல்லாத ஒன்றின் பள்ளத்தாக்கை நிரப்ப முயலும் மனதின் விகார முயற்சிகளில் இதுவும் ஒன்று.*
*குறை சொல்லுதல் பயத்தின் வேர்களிலிருந்தும் முளைப்பதுண்டு.*
*குறிப்பாக அலுவலக சூழல்களில் தனது வேலையைத் தக்க வைத்துக் கொள்ளவும் , தங்களுடைய புரமோஷன், வளர்ச்சி போன்ற விஷயங்களுக்கும் அடுத்தவர்களை அழிக்கும் விமர்சனங்கள் எழுவதுண்டு.*
*நம்முடைய பொறுப்புகளை தட்டிக் கழிக்க விரும்பும் போதும் முன்னே வருவது இந்தக் குறை சொல்தலும், சாக்குப் போக்கும் தான்.*
*“வயிறு வலிக்குது… நான் ஸ்கூலுக்குப் போகல” என சிணுங்கும் சின்ன வயதுப் பையன் ஞாபகத்துக்கு வருகிறானா ?*
*ஈகோ எனும் ஆலமரத்தின் கிளைகள் இந்தக் குறை எனும் விழுதுகள்.*
*ஈகோ இருக்கும் மனிதர்கள் மனிதர்கள் பிறரிடமுள்ள குறைகளை பூதக் கண்ணாடி கொண்டு பார்த்துத் திரிவார்கள்.*
*இல்லாததை இருப்பது போலச் சோடித்து மகிழ்வார்கள்.*
*ஈகோவை விலக்க வேண்டுமென முடிவெடுத்தால் இந்த கெட்ட பழக்கம் உங்களை விட்டுப் போய் விடும்.*
*பிறருடைய கவனத்தை ஈர்ப்பதற்காகவும் சிலர் குற்றம் குறைகளை அள்ளி விடுவதுண்டு.*
*பிறர் தன்னைக் கவனிக்க வேண்டும் எனும் ஆர்வம் அவர்களுக்கு.*
*உளவியல் இதை, தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடு என்கிறது.*
*தன்னைப் புத்திசாலியாய்க் காட்டிக் கொள்ளவும் சிலர் குறை சொல்வதைக் கையில் எடுப்பதுண்டு.*
*அடுத்தவர்களையோ, அவர்களுடைய செயல்களையோ விமர்சித்து, குறை சொல்லும் போது தன் தலைக்கு மேல் ஒரு ஒளி வட்டம் உருவாவது போல் கர்வம் அவர்களுக்குள் நுழையும்.*
*இப்படி குறை சொல்வது நமது வாழ்வின் ஒரு பகுதியாகவே மாறி விட்டிருக்கிறது.*
*ஒரு டிராபிக் சிக்னலில் கூட குறை சொல்லாமல் நம்மால் இருக்க முடிவதில்லை.*
*ஹோட்டலில் வெயிட்டர் பத்து நிமிடங்கள் நமது டேபிளுக்கு வரவில்லையேல் குறையும், குற்றமும் சொல்ல வாய் துறு துறுக்கிறது.*
*வாய்ப்பு வந்து வாசல் கதவைத் தட்டும் போது கூட சத்தமா இருக்கே என்று குறை சொல்பவர்கள் இருக்கிறார்கள் என்கிறார் ஆஸ்கர் வைல்ட்.*
*குறை சொல்வது நமது வளர்ச்சியை நாமே குழி தோண்டிப் புதைக்கும் செயல்.*
*குறை சொல்வதை விட்டு வெளியே வர வேண்டுமெனில் முதலில் நாம் குறை சொல்லும் பார்ட்டிகள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.*
*உங்கள் வாழ்க்கைத் துணையிடம் கேளுங்கள் நீங்கள் குறை சொல்லும் பார்ட்டியா என உண்மையான பதில் கிடைக்கும்.*
*இல்லையேல் நெருங்கிய நண்பர்களிடம் கேளுங்கள்.*
*குறை சொல்வது உங்களுக்கு எந்த நன்மையையும் தந்து விடப் போவதில்லை.*
*இந்தப் பழக்கத்தால் என்ன நன்மை ஏற்பட்டது என்பதை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.*
*பெரும்பாலும் உங்களுடைய நேரமும், உங்கள் நண்பர்களுடைய நேரமும் வெட்டியாய் செலவானது தானே மிச்சம் ?*
*உங்களை யாராவது குறை சொன்னாலோ, நேர்மையற்று விமர்சித்தாலோ நீங்கள் அதைக் கை தட்டி ரசிப்பீர்களா என்பதை ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள்.*
*இல்லை என்பது தானே உங்கள் பதில் ?.*
*அதே மன நிலை தான் உங்களால் கிண்டலடிக்கப் படும் நபருக்கும் இருக்கும் என்பதை உணருங்கள்.*
*பிறரை ஏற்றுக் கொள்ளும் மனம் இருந்தால் குறை சொல்தல் விலகி விடும்.*
*பிறரை ஏற்றுக் கொள்ளும் மனம் வேண்டுமெனில் முதலில் நம்மை நாமே ஏற்றுக் கொள்ள வேண்டும்.*
*எனவே முதலில் உங்களை உங்கள் இயல்புகளோடே ஏற்றுக் கொள்ளும் தன்னம்பிக்கையைக் கொண்டிருங்கள்.*
*குறை சொல்தல் உறவுகளிடையேயான பிணைப்பை உடைத்து விடும்.*
*பல விவாகரத்துகளுக்கே இந்தக் குறை சொல்தல் காரணமாகி விடுகிறது.*
*அன்பு உருவாகும் இடத்தில் குறை சொல்வது இருப்பதில்லை.*
*ஆத்மார்த்தமான அன்பை உள்ளத்தில் தேக்குங்கள்.*
*அடுத்தவர்களைக் குறை சொல்லும் பழக்கம் ஓடியே போய் விடும்.*
*குறையைப் பற்றி பேசிக் கொண்டே இருப்பவர்கள் அந்த குறைகளைப் போக்கும் வழியைப் பற்றிச் சிந்திக்க மறந்து போய் விடுகிறார்கள்.*
*இருட்டைப் பற்றியே குற்றம் சொல்லிக் கொண்டு இருக்காமல் ஒரு மெழுகுவர்த்தியைக் கொளுத்தும் வழியைப் பாருங்கள் என்கிறார் கன்ஃபூஷியஸ்.*
*இருப்பதை வைத்து மகிழ்வாக வாழும் மனநிலை உடையவர்கள் பெரும்பாலும் குறை சொல்வதில்லை.*
*அவர்கள் மகிழ்வாக வாழும் வழியை யோசிப்பார்கள்.*
*எதைத் தேடுகிறோமோ அதுமட்டுமே நமக்குக் கிடைக்கும் !*
*கடின உழைப்பாளிகள் குறை சொல்வதில் தங்கள் நேரத்தை வீணடிப்பதில்லை.*
*சோம்பேறிகள், கடின உழைப்பைத் தவிர்ப்பதற்காக குறை சொல்லும் பாணியைக் கையாள்கிறார்கள்.*
*குறை சொல்வது எதிர் மறை சக்தி. அதன் விளைவுகள் எதிர்மறையாகவே இருக்கும்.*
*தான் சரி என நிரூபிக்க மற்றவை எல்லாம் தவறு என மதிப்பிடும் மன நிலை மனதின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு எதிரி.*
*குறை சொல்வதிலிருந்து வெளியே வர விரும்பினால் பாராட்டப் பழகுங்கள்.*
*ஒரு நாளைக்கு ஐந்து பேரையாவது பாராட்டுவேன் என முடிவெடுங்கள்.*
*ஒரு நபரிடமிருக்கும் குறைகளைத் தாண்டி நிறைகளைக் கண்டு பிடிப்பீர்கள்.*
*அதே போல, குறை சொல்லும் நண்பர் கூட்டத்திலிருந்து வெளியே வாருங்கள்.*
*குறைந்த பட்சம் குறை சொல்லும் பேச்சை ஆதரிக்காமல் இருங்கள்.*
*குறை சொல்வது உங்களுக்குப் பிடிக்காது என்பது உங்கள் நண்பர்களுக்குப் புரிந்து விடும்.*
*அது உங்களுக்கு மரியாதையையும் பெற்றுத் தரும்.*
*எதையும் மாற்ற முடியாது என்று தெரிந்தால் கூட “ என்னய்யா வெயில் மண்டையைப் பொளக்குது, என்னய்யா மழை படுத்துது, இதென்ன ஒரே தூசு மண்டலமா இருக்கு” என எடுத்ததுக்கெல்லாம் சலித்துக் கொள்ளும் மனிதர்கள் வாழ்வின் ஆனந்த தருணங்களை இழந்து விடுகிறார்கள்.*
*இன்றிலிருந்து ஒரு மாதம் குறையே சொல்ல மாட்டேன், நல்ல விஷயங்களைப் பாராட்டுவேன் என முடிவெடுத்துப் பாருங்கள்.*
*இந்த போட்டியில் ஜெயித்து விட்டால் உங்களுடைய அடிப்படை இயல்பே மாறி விடும்.*
*ஒரு வேளை தோற்று விட்டால், அந்த நாளிலிருந்து அடுத்த ஒரு மாதம் முயற்சி பண்ணுங்கள். !*
*குற்றம் சொல்வதை நீங்கள் நிறுத்தும் வினாடியில் உலகம் உங்கள் கண்ணுக்கு முன்பாக அழகாகத் தெரியும்.*
*உங்கள் உறவுகள் அழகாகத் தெரிவார்கள்.*
*உங்களுக்குக் கிடைத்திருக்கும் வாழ்க்கை ஆனந்தமயமாக மாறும்.*
*செடியில் இருக்கும் முட்களைத் தாண்டி, முட்களிடையே இருக்கும் ரோஜா கண்களில் தெரியும்.*
*வாழ்க்கை ஆனந்தமாய் மாறும்.*
No comments:
Post a Comment