கன்னியாகுமரி லோக்சபா தொகுதி இடைத்தேர்தலுக்கு முன், கூட்டணியில் இருந்து காங்கிரசை கழற்றி விடுவதற்காக, ஐ.டி., மற்றும் அமலாக்க துறையின் அதிரடி சோதனை வாயிலாக, பா.ஜ., தரப்பில், தி.மு.க.,வுக்கு, 'செக்' வைக்கப்படுவதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கன்னியாகுமரி தொகுதி, காங்கிரஸ் எம்.பி., வசந்தகுமார் மறைவுக்கு பின், அத்தொகுதிக்கு இடைத்தேர்தல், அடுத்த ஆண்டு பிப்., மாதம் நடத்தப்பட உள்ளது. அந்த இடைத்தேர்தலில், அ.தி.மு.க., - தி.மு.க., - பா.ஜ., - காங்கிரஸ் என, நான்கு முனைப் போட்டி உருவானால், தங்களால் சுலபமாக வெற்றி பெற முடியும் என, பா.ஜ., கருதுகிறது. கடந்த, 2014ல் நடந்த லோக்சபா தேர்தலில், நான்கு முனைப் போட்டியில், பா.ஜ., வெற்றி பெற்றது. எனவே, வரும் இடைத்தேர்தலிலும் அதே, 'பார்முலா'வை பா.ஜ., விரும்புகிறது.
இடைத்தேர்தலில், பா.ஜ.,வின் வெற்றியை வெள்ளோட்டமாக பாவித்து, சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்தோ அல்லது புதிய அணி அமைத்தோ போட்டியிட்டு, சட்டசபையில் கணிசமான பிரதிநிதித்துவம் பெறலாம் என, பா.ஜ., கருதுகிறது.அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்கும் பட்சத்தில், 60 தொகுதிகளை, பா.ஜ., எதிர்பார்க்கிறது. ஆனால், 30தொகுதிகளை மட்டும், அ.தி.மு.க., ஒதுக்க முன்வருமானால், கூட்டணி முடிவை, பா.ஜ., பரிசீலனை செய்யவும் வாய்ப்பு உள்ளது.
அதனால் தான், அ.தி.மு.க.,விடம் கூடுதல் தொகுதிகளை பெறுவதற்காகவும், தி.மு.க., கூட்டணியில் இருந்து, காங்கிரஸ் கட்சியை கழற்றி விடுவதற்காகவும், தி.மு.க., முன்னாள் மந்திரிகள் மீது, வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத் துறையின் பார்வை திரும்பி உள்ளது. அதிரடி சோதனை, சொத்துக்கள் முடக்கம் போன்ற பல நடவடிக்கைகள் பாய்ந்து வருகின்றன.
இது குறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:கன்னியாகுமரி இடைத்தேர்தலில், பா.ஜ., வெற்றி பெறுமானால், மத்திய அமைச்சரவையில், முக்கிய இலாகா வழங்க வாய்ப்பு உள்ளது. சட்டசபை தேர்தலுக்கு முன், மத்திய அமைச்சரின் வாயிலாக, மக்கள் நல திட்டங்கள் முடுக்கி விடப்பட்டு, ஆதரவு பலத்தை பெருக்கவும் திட்டமிட்டுள்ளது.
கன்னியாகுமரி இடைத்தேர்தலுக்கு முன், காங்கிரசை தி.மு.க., கழற்றி விட வேண்டும் அல்லது தேர்தல் பணிகளில் தீவிரம்காட்டாமல் இருக்க வேண்டும் என, பா.ஜ., மேலிடம் எதிர்பார்க்கிறது. இதற்காக, தி.மு.க.,வுக்கு நெருக்கடி தரும் வகையில், '௨ ஜி' வழக்கு விசாரணை, தற்போது வேகமெடுத்துள்ளது.ஜெகத்ரட்சகன் எம்.பி., சொத்துக்கள் முடக்கம், முன்னாள் அமைச்சர் பொன்முடி மகன் கவுதம் சிகாமணி எம்.பி., சொத்துக்கள் முடக்கம் போன்ற அதிரடி நடவடிக்கைகளையும், மத்திய அமலாக்கத் துறை எடுத்து வருகிறது.
மேலும், தி.மு.க.,வை சேர்ந்த, சில முன்னணி பிரமுகர்களுக்கு சொந்தமான இடங்களில், விரைவில் வருமான வரித் துறையினர்சோதனை நடத்தவும் தயாராகி வருகின்றனர். இவ்வாறு, அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
No comments:
Post a Comment