எதனாலெல்லாம் மயக்கம் வரும்? அந்தக் காரணத்தைக் கண்டறிந்து குணப்படுத்துவது எப்படி?
காலை எழுந்ததும் தலை சுற்றுகிறது. உட்கார்ந்து எழுந்ததும் தலை சுற்றுகிறது. அதிகச் சத்தம் கேட்டால் தலை சுற்றுகிறது. ஏதேனும் புதிய வாசனையை நுகர்ந்தால் தலை சுற்றுகிறது. ரத்தத்தைப் பார்த்தவுடன் தலை சுற்றுகிறது. நேரத்துக்குச் சாப்பிடவில்லை என்றால் தலை சுற்றுகிறது என எப்போதும் நம் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கும் வார்த்தை தலைச்சுற்றல், மயக்கம்.
மயக்கம் பல காரணங்களால் வரக்கூடும். ‘எனக்கு அடிக்கடி மயக்கம் வரும்’ என்று சர்வ சாதாரணமாகச் சொல்வார்கள். உண்மையில், மயக்கம் அப்படி சாதாரணமாகக் கருதக்கூடிய விஷயமல்ல... அது ஏதோ ஒரு பெரிய பிரச்னைக்கான அறிகுறி.
*எதனாலெல்லாம் மயக்கம் வரும்? அந்தக் காரணத்தைக் கண்டறிந்து குணப்படுத்துவது எப்படி?*
நரம்பியல் மற்றும் வலிப்பு நோய் சிறப்பு மருத்துவர் தினேஷ் நாயக்கிடம் கேட்டோம்.
*மயக்கம் ஏன்?*
`ரத்த ஓட்டம் குறையும்போதோ, மூளையின் செயல்பாட்டுக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்காதபோதோ ஏற்படும் தற்காலிக நினைவிழப்பே மயக்கம் எனப்படுகிறது. ஒருவருக்கு மயக்கம் வந்தால், அதற்கு முன் உள்ள சில நிமிடங்களில் நடந்த சம்பவங்களும் மயக்கம் அடைந்த பிறகு நடக்கும் சம்பவங்களும் நினைவில் தங்காது. .
தலைசுற்றித் தடுமாறி விழுதல், நெஞ்சுப் படபடப்பு ஏற்பட்டு நினைவாற்றல் இழத்தல், ரத்த அழுத்தம் திடீரென உயர்வதால் அல்லது குறைவதால் ஏற்படும் தலைச்சுற்றல், சீரற்ற ரத்த ஓட்டத்தால் நினைவாற்றல் இழத்தல், மூளைக்குத் தேவையான ஆக்சிஜன் அளவு கிடைக்காது போவதால் ஏற்படும் தலைச்சுற்றல், வலிப்புக் காரணமாக நினைவாற்றல் இழத்தல், உணர்ச்சி மிகுதியால் ஏற்படும் தலைச்சுற்றல், காலை உணவைத் தவிர்ப்பதால் ஏற்படும் உடல் சோர்வுடன் கூடிய தலைச்சுற்றல், அதீத வியர்வையால் ஏற்படும் தலைச்சுற்றல் போன்றவற்றை நாம் மயக்கமாகக் கருதுகிறோம். உண்மையில் மயக்கமும் தலைச்சுற்றலும் வேறுவேறு.
*மயக்கத்தை மூன்று வகையாகப் பிரிக்கலாம்*.
மூளை மற்றும் நரம்பு சார்ந்தவை;
இதயம் தொடர்பானவை;
மன நலம் சார்ந்தவை.
மூளை மற்றும் நரம்பு மண்டலம் தொடர்பாக வரும் மயக்கம்
வலிப்பினால் வரும் மயக்கம், ஏதேனும் ஒருவித வாசனையால் அல்லது பூக்களின் மணத்தால் உண்டாகும் மயக்கம், பக்கவாதம், சளி, காய்ச்சல் போன்றவற்றால் மூளை நரம்புகளில் ஏற்படும் வீக்கம் காரணமாக வரும் மயக்கம், மூளையில் உள்ள ரத்தக் குழாய்களில் அடைப்புக் காரணமாக ஏற்படும் மயக்கம் போன்றவை நரம்பு மண்டலம் தொடர்பான மயக்கங்களாகும்.
*வலிப்பினால் ஏற்படும் மயக்கம்*
வலிப்பினால் ஏற்படும் மயக்கத்தின்போது, உடல் மிகவும் இறுக்கமாகிவிடும். கை கால்கள் இறுக்கமாகி மற்றவர்களால் கட்டுப்படுத்த முடியாத நிலைக்குச் சென்றுவிடும். வாயில் இருந்து வெள்ளை நிறத் திரவம் வெளியேறும். வலிப்பின்போது ஏற்படும் மயக்கத்தில் கண்கள் திறந்த நிலையில் இருக்கும். ஆனால், வலிப்பு வந்தவருக்கு நினைவு இருக்காது.
*முதலுதவி*
* வலிப்பினால் மயக்கம் அடைந்தவரைக் கைகளால் அழுத்திப் பிடித்துக் கட்டுப்படுத்தக் கூடாது.
* வலிப்பு வந்தவர் மயக்கம் அடையும்வரை அவரை ஃப்ரீயாக விட்டுவிட வேண்டும். அவரைச் சுற்றிக் கூட்டமாக நிற்கக் கூடாது.
* வலிப்பு வந்தவர் மயக்கத்தில் இருக்கும்போது வாய்வழியாகச் சாப்பிட எதுவும் கொடுக்கக் கூடாது.
* கைகள், கால்கள் அசைவது நின்றவுடன் சில நிமிடங்கள் இடது புறமாகப் படுக்க வைப்பது நல்லது.
* வாயிலிருந்து வடியும் திரவத்தை முழுவதுமாக வெளியேற்றிவிட வேண்டும்.
* மூன்று முதல் ஐந்து நிமிடங்களில் வலிப்பு நிற்காத பட்சத்தில் மருத்துவரின் உதவியை நாட வேண்டும்.
*சிகிச்சை*
முதலுதவியின்போது வாயிலுள்ள திரவம் வெளியேற்றப்படாமல் இருக்கும் பட்சத்தில், அதை உடனடியாக வெளியேற்றுவார்கள். பின்னர், வலிப்பு குறைவதற்கென மருந்துகள் கொடுக்கப்படும். பக்கவாதத்தால் மயக்கம் ஏற்பட்டால், உடனடியாக எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க வேண்டும். பிறகு பரிசோதனையின் அடிப்படையில் சிகிச்சை மேற்கொள்ளப்படும்.
*மன நலம் சார்ந்து வரும் மயக்கம்*
பயம், கோபம், மகிழ்ச்சி, ஆச்சர்யம் போன்ற உணர்ச்சிவசப்படுதல், மன உளைச்சல், மன அழுத்தம், ஒரே விஷயத்தைத் தொடர்ந்து சிந்திப்பது போன்ற காரணங்களால் வரும் மயக்கம், மன நலம் தொடர்பானவை. பொதுவாக மனம் சார்ந்த காரணங்களுக்காகப் பெண்களும் குழந்தைகளுமே அதிக அளவில் மயக்கம் அடைகிறார்கள். கவலை, இழப்பு, இறப்பு, சோகம், அச்சம், அதிர்ச்சி போன்ற உளவியல் காரணங் களால், பெண்கள் மயக்கமடைகிறார்கள். படிப்பின் மீதான பயம், ஆசிரியர் மீதான பயம், பதற்றம், மன அழுத்தம் போன்ற காரணங்களாலும் குழந்தைகளுக்கு மயக்கம் ஏற்படுகிறது.
*முதலுதவி*
* மயக்கம் அடைந்தவரைத் தரையில் படுக்க வைக்க வேண்டும்.
* தண்ணீர் தெளித்து எழுப்ப முயலலாம்.
* மயக்க நிலையிலிருக்கும்போது வாய் வழியாக உண்ண எதுவும் கொடுக்கக் கூடாது.
* 10 நிமிடங்களுக்குமேல் மயக்க நிலையில் இருந்தால், உடனடியாக மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.
*சிகிச்சை*
மன நல மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும். ஒவ்வொருவரின் பிரச்னைகளைப் பொறுத்து மருந்துகள் பரிந்துரைக்கப்படும்
*மயக்கம் உண்மையா, நடிப்பா?*
மயக்கம் அடைந்தவரின் கண்களின் இமைகளை மேல்நோக்கி இழுத்தால் கண்கள் அசையாமல் இருக்கும். மயக்கம் அடைந்தவர்போல் நடிப்பவரின் கண் இமைகளை மேல்நோக்கி இழுக்கும்போது கண்கள் அசையும், மேலும் இமையை மேல்நோக்கி இழுக்கவிட மாட்டார்கள். கண்களைத் திறக்கவிட மாட்டார்கள். உண்மையாக மயக்கம் அடைந்தவரின் விழிகள் சுழலாது. மயக்கம் அடைந்ததுபோல் நடிப்பவர்களின் இமையைத் திறந்தால், விழிகள் சுழலும்.
*வெர்டிகோ*
உட்கார்ந்து இருப்பவர் திடீரெனப் படுத்தாலோ, படுத்திருப்பவர் திடீரென எழுந்து அமர்ந்தாலோ அவரும் அவரைச் சுற்றியுள்ள பொருள்களும் சுற்றுவதுபோலத் தோன்றும். சில விநாடிகள் எழுந்து செல்ல முடியாத அளவுக்குத் தலைவலி அல்லது தலைபாரத்துடன் தலை சுற்றும். மயக்கம் வருவதைப்போன்ற உணர்வு ஏற்படும். சிலருக்கு நடந்துகொண்டிருக்கும்போது தடுமாற்ற உணர்வு ஏற்படும். காது கேட்காது. உடம்பு சோர்வாகி விடும். இந்த நிலைக்கு ‘வெர்டிகோ’ என்று பெயர்.
*சிகிச்சை*
வெர்டிகோ தலைச்சுற்றலுக்கென்று மருந்து மாத்திரைகள் கிடையாது. உடற்பயிற்சிகள் மற்றும் யோகாசனங்கள் மூலம் சரி செய்யலாம்.
மன அழுத்தம், மன உளைச்சல் காரணமாக ஏற்படும் மயக்கம்போலவே இதயம் தொடர்பான பிரச்னைகளாலும் சீரற்ற ரத்த ஓட்டத்தாலும் மயக்கம் ஏற்படும். இதுபற்றி இதய நோய் சிறப்பு நிபுணர் மற்றும் எலக்ட்ரோ பிசியோதெரபிஸ்ட் கார்த்திகேசன் விளக்குகிறார்.
*இதயம் தொடர்பாக வரும் மயக்கம்*
இதயத்துடிப்பில் ஏற்படும் மாற்றம், திடீரென இதயத்துடிப்பு நின்றுபோதல், இதயப் படபடப்பு, இதய வால்வுகளில் ஏற்படும் அடைப்பு போன்ற காரணங்களால் வரக்கூடிய மயக்கம், இதயம் தொடர்பாக வரும் மயக்கங்களாகும். இதயத்துக்கு ரத்தம் மற்றும் ஆக்சிஜன் போதிய அளவு கிடைக்காமல் போவது, இதய ரத்தக் குழாய் அடைப்பு, வால்வுகளில் ஏற்படும் அடைப்புக் காரணமாக ரத்த ஓட்டம் குறைந்துபோவது போன்ற காரணங்களால் மயக்கம் உண்டாகும்.
*முதலுதவி*
* மயக்கம் அடைபவரின் செயல்களை நன்றாகப் பார்த்துப் புரிந்துகொள்ள வேண்டும். அவர் நெஞ்சுப்பகுதியில் கைகளை வைத்தபடி மயங்கி விழுகிறாரா எனக் கவனிக்க வேண்டும். அவ்வாறு நெஞ்சில் கைவைத்து மயக்கம் அடைந்தால், கீழ்வரும் முதலுதவிகளைச் செய்யலாம்.
* தரையில் படுக்க வைப்பதுடன், தலையை ஒருபக்கமாகச் சாய்த்து வைக்க வேண்டும்.
* மயக்கம் அடைந்தவரின் நாடித்துடிப்பைக் கவனிக்க வேண்டும்.
* மயக்கம் அடைந்தவரின் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்ப முயலலாம். சுளீரெனத் தண்ணீர் தெளித்தால், முகத்தில் உள்ள நரம்புகள் தூண்டப்படும். இது மயக்கம் தெளிய உதவும்.
* ஐந்து நிமிடங்களுக்கு மேல் மயக்கம் தெளியாமல் இருந்தாலோ, மயக்கம் அடைந்தவரின் இதயத் துடிப்பு குறைந்தாலோ உடனடியாக மருத்துவரின் உதவியை நாட வேண்டும்.
*சிகிச்சை*
உடனடியாக ஈ.சி.ஜி மற்றும் எக்கோ பரிசோதனைகள் செய்யப்படும். பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்படும். இதயத் துடிப்பைச் சீராக்க ‘பேஸ் மேக்கர்’ கருவி பொருத்தப்படும்.
சீரற்ற ரத்த ஓட்டத்தால் ஏற்படும் மயக்கம்
உடலில் ஆற்றல் குறைவது, மாதவிலக்கின்போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கு, காயத்தால் ஏற்படும் ரத்த இழப்பு, கடுமையான காய்ச்சல், சிரமப்பட்டு மலத்தை வெளியேற்றுவது, ரத்தத்தில் தடை ஏற்படும்போது மூளையில் ஆக்சிஜன் குறைவது போன்ற காரணங்களால் மயக்கம் உண்டாகும்.
*முதலுதவி*
* மயக்கம் அடைந்தவரைத் தரையில் மல்லாந்து படுக்க வைக்க வேண்டும்.
* மயக்கநிலையில் இருக்கும்போது அவருக்கு வாய் வழியாக எந்த உணவுப் பொருளையும் கொடுக்கக் கூடாது.
* மயக்கம் அடைந்தவரின் காலைத் தரையிலிருந்து சற்று உயர்த்தி வைக்கலாம்.
* தண்ணீர் தெளித்து எழுப்பலாம். ஆனால், குடிக்கத் தண்ணீர் கொடுக்கக் கூடாது.
* முற்றிலும் மயக்கம் தெளிந்தபிறகு, ஏதேனும் சாப்பிடக் கொடுக்கலாம்.
* சில நிமிடங்களுக்கு மேல் ஆகியும் மயக்கம் தெளியவில்லை என்றால், உடனடியாக மருத்துவரின் உதவியை நாடுவது நல்லது.
*சிகிச்சை*
இதற்கு முதலுதவியே போதுமானது. உடலுக்கு எனர்ஜி அளிக்க குளுக்கோஸ் மற்றும் ஊட்டச்சத்து மாத்திரைகள் வழங்கப்படும்.
*அடிக்கடி மயக்கம் ஏற்பட்டால்?*
அடிக்கடி மயக்கம் ஏற்படுபவர்கள் முழு உடல் பரிசோதனை செய்து அதற்கான காரணங்களைக் கண்டறிந்து அதைச் சரிசெய்ய வேண்டும். உளவியல் காரணங்களால் மயக்கம் அடைபவர்கள், தியானம், யோகா போன்றவற்றைச் செய்யலாம். உணவைத் தவிர்க்கக் கூடாது. வெயிலில் செல்லும்போது அரைமணி நேரத்துக்கு ஒருமுறை தண்ணீர் குடிக்க வேண்டும்.
*அதிக பாதிப்பு வயதானவர்களுக்கு..!*
வயதானவர்களே மயக்கத்தின்போதும், மயக்கம் தெளிந்தபிறகும் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். மயங்கிக் கீழே விழுவதால் எலும்பு முறிவு, உடலில் அடி படுதல் போன்ற பல பிரச்னைகள் ஏற்படும். சில சமயங்களில் உயிரிழப்புகூட ஏற்படலாம். ஆகவே, முதியவர்கள் மீது எப்போதும் கூடுதல் கவனம் செலுத்துவதும், கண்காணிப்பதும் அவசியம்.
No comments:
Post a Comment