Wednesday, October 14, 2020

ராஜ்யசபாவில் உயர்கிறது பா.ஜ.,பலம்.

 ராஜ்யசபாவின், 11 இடங்களுக்கு, வெகு விரைவில் நடைபெறவுள்ள தேர்தலுக்குப் பின், அங்கு பா.ஜ.,வின் பலம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

லோக்சபாவைப் போலவே, பெரும்பான்மை பலத்தை நோக்கி, ராஜ்யசபாவிலும் பா.ஜ., முன்னேறுவதால், தேசிய அரசியலில் பல்வேறு திருப்பங்கள் காத்திருப்பதாக கூறப்படுகிறது.உத்தர பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களை சேர்ந்த, 11 ராஜ்யசபா எம்.பி.,க்களின் பதவி காலம், அடுத்த மாதம், 25ல் நிறைவடைகிறது. காலியாகப்போகும் இடங்களை நிரப்புவதற்காக, அடுத்த மாதம், 9ல், தேர்தல் நடைபெறவுள்ளது.

ராஜ்யசபாவிலும் உயர்கிறது பா.ஜ., பலம்


இதில், 10 எம்.பி.,க்கள் உ.பி.,யில் இருந்தும், ஒரு எம்.பி., உத்தரகண்டில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இந்த இரண்டு மாநிலங்களிலுமே, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. எனவே, உ.பி., சட்டசபையில், பா.ஜ.,வுக்கு உள்ள எம்.எல்.ஏ.,க்கள் பலத்தின் அடிப்படையில், மொத்தமுள்ள, 10 இடங்களில், எட்டு இடங்களை, பா.ஜ., எளிதில் பிடித்துவிட முடியும்.முக்கிய எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சியால், யாருடைய தயவும் இன்றி, ஒரு எம்.பி.,யை தேர்ந்தெடுத்து விட முடியும். தற்போது காலியாகும் இடங்களின்படி, அக்கட்சியின் மூத்த தலைவரான ராம்கோபால் யாதவின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது.'ராஜ்யசபாவில், இவரது பங்களிப்பு தொடர்ந்து தேவை' என, அகிலேஷ் கருதுவதால், ராம்கோபால் யாதவ், மீண்டும் அந்த இடத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். தவிர, மீதமுள்ள, இன்னொரு இடத்தையும், எதிர்க்கட்சிகளால் கைப்பற்ற முடியும்.


பிராமண ஓட்டு வங்கி



அதற்கு, பிற கட்சிகளின் கூடுதல் ஓட்டுகளை பெற்றோ அல்லது பொது வேட்பாளரை நிறுத்தியோ வெற்றி பெறலாம். பகுஜன் சமாஜ், தன் வேட்பாளரை நிறுத்தினால், அவருக்கு, காங்கிரஸ், சமாஜ்வாதி மற்றும் சிறு கட்சிகளிடமிருந்து, கூடுதல் ஓட்டுகளை கேட்டுப் பெற வேண்டும்.அதற்கு, அக்கட்சிகள் சம்மதிக்குமா என, தெரியவில்லை. எனவே, பகுஜன் சமாஜ் ஒதுங்கிக் கொள்ளும் என்றே தெரிகிறது. இதை வைத்து, காங்கிரசும் ஒரு கணக்கு போடுகிறது.
அதாவது, பிராமண ஓட்டு வங்கி அரசியல், அம்மாநிலத்தில் தீவிரம் பெற்று இருப்பதால், அந்த சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளராக அறிவிக்க, காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. ஆக, அந்த ஒரே ஒரு எம்.பி., 'சீட்'டுக்கு, இவ்வளவு குழப்பங்களையும், சிக்கல்களையும் தாண்ட வேண்டியுள்ளது.

எனவே, அந்த ஒரு இடத்தையும் விட்டு வைக்காமல், அதையும் சேர்த்து, உ.பி.,யில், ஒன்பது இடங்களாக, பா.ஜ., கைப்பற்றும் சூழல் உருவாகி உள்ளது.உத்தரகண்டில், ஒரே ஒரு இடத்திற்கு தான் தேர்தல். அங்குள்ள சட்டசபை நிலவரப்படி, பா.ஜ., நிறுத்தும் வேட்பாளரால் மட்டுமே வெற்றி பெற முடியும். எனவே, அந்த இடமும் பா.ஜ.,வுக்குத் தான் என்பது, இப்போதே உறுதியாகிவிட்டது.எனவே, இந்த இரு மாநிலங்களில் நடைபெறும் ராஜ்யசபா தேர்தலில், 11 இடங்களில், 10ஐ பிடித்து, பா.ஜ., அசத்தப்போகிறது. தற்போது பதவியிலிருந்து வெளியேறுகிறவர்களில், மூன்று பேர் பா.ஜ.,வினர் என்றால், உள்ளே வரப்போகிறவர்கள், 10 பேர்.ஆக, ராஜ்யசபாவில், ஏழு எம்.பி.,க்கள் பா.ஜ.,வுக்கு கூடுதலாக கிடைக்கவுள்ளனர். சமாஜ்வாதிக்கு, நான்கு எம்.பி.,க்களும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு வெறும் இரண்டு எம்.பி.,க்களும் தான், சபைக்குள் இருக்கப் போகின்றனர்.


தனிப்பெரும்பான்மை



முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரசின் பலமோ, 38 ஆக குறையப்போகிறது. ஆனால், பா.ஜ.,வின் எம்.பி.,க்கள் பலமோ, 93 ஆக உயரப்போகிறது. ராஜ்யசபாவில் மொத்த பலம், 245; பெரும்பான்மை பலம், 123.ராஜ்யசபாவில் பா.ஜ.,வுக்கு பெரும்பான்மை பலம் இல்லாததால், முக்கிய மசோதாக்களை நிறைவேற்றுவதில் அதிக சிரமம் இருந்து வருகிறது.

ஒவ்வொரு பிரச்னைகளின் போதும், தோழமைக் கட்சிகளான அ.தி.மு.க., தெலுங்குதேசம், பிஜு ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர்.,காங்., ஆகியவற்றின் தயவை நாடும் நிலையிலேயே, பா.ஜ., உள்ளது.இந்நிலையில், புதிய வரவாக, ஏழு எம்.பி.,க்கள் கிடைக்கப்போவதால், ராஜ்யசபாவிலும், தனிப்பெரும்பான்மை பலத்தைப் பெறும் வகையில், கொஞ்சம் கொஞ்சமாக பா.ஜ., முன்னேறி வருகிறது.'ஏற்கனவே லோக்சபாவில் பெரும்பான்மை உள்ள நிலையில், ராஜ்யசபாவிலும் பா.ஜ., பெரும்பான்மை பெற்றால், அது தேசிய அரசியலில், பல்வேறு திருப்பங்களுக்கு அடித்தளமிடலாம்' என, டில்லியில் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


குளிர்கால கூட்டத்தொடர் ரத்தாகுமா?



பார்லிமென்டின் மழைக்கால கூட்டத் தொடர், சமீபத்தில் நடந்து முடிந்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, திட்டமிட்டதற்கு எட்டு வேலை நாட்களுக்கு முன்னரே, சபைகள் ஒத்திவைக்கப்பட்டன.இந்நிலையில், பார்லி.,யின் குளிர்கால கூட்டத் தொடர், அடுத்த மாதம், மூன்றாவது வாரத்தில் துவங்கி, டிசம்பர் மூன்றாவது வாரத்தில் முடிவடைவது வழக்கம்.
பார்லி., மழைக்கால கூட்டத் தொடருக்கு பின், ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு, கொரோனா தொற்று உறுதியானது. மேலும், மூத்த அதிகாரிகள் உட்பட, 200க்கும் மேற்பட்ட பார்லி., ஊழியர்கள், தொற்றுக்கு ஆளாகினர். இரண்டு எம்.பி.,க்கள், ஒரு மத்திய அமைச்சர் உயிரிழந்தனர்.

எனவே, தொற்று ஆபத்தை மனதில் கொண்டு, குளிர்கால கூட்டத் தொடரை ரத்து செய்துவிட்டு, நேரடியாக ஜனவரி இறுதியில், பட்ஜெட் கூட்டத் தொடரை கூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.'வரும், 22ல் நடைபெறும், பார்லி., கமிட்டி கூட்டத்தில், இது குறித்து அதிகாரப்பூர்வமான முடிவு எடுக்கப்பட்டு, முறையான அறிவிப்பு வெளியாகும்' என, டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...