Saturday, March 6, 2021

தீர்க்க_சுமங்கலி_பாக்கியம்.

 இந்து சமுதாயத்தில் திருமணமான பெண்களுக்கும், அவர்கள் அணிந்து இருக்கும் திருமாங்கல்யத்திற்கும் தனி மரியாதை உண்டு.

திருமணமாகி 60 ஆண்டுக்கு மேல் வாழ்ந்து பேரன் - பேத்திகள் பார்த்தவர்களின் சுமங்கலித்துவத்திற்கு சிறப்பு கவுரவமும் உண்டு.
திருமாங்கல்யமானது ஒரு பெண்ணின் கழுத்தில் எப்போதும் இருப்பதால், அது அவளது சுமங்கலித்துவத்தைக் கட்டிக்காக்கும். பெண்களுக்கு திருமாங்கல்யமே ‘பிரம்ம முடிச்சு’ ஆகும்.
திருமணமான அனைத்து பெண்களும், தங்கள் ஆயுள் முழுவதும் தீர்க்க சுமங்கலியாக வாழவே விரும்புவார்கள்.
அதனால்தான் பெண்களுக்கு ஆசி வழங்கும் பெரியவர்கள் “தீர்க்க சுமங்கலி பவா” என்று வாழ்த்துவார்கள்.
பெண்களின் சுமங்கலி பாக்கியத்தில் தான் கணவரின் ஆயுள் அடங்கியுள்ளது என்பதே இதன் சூட்சுமம் .
பெண்கள் தங்களின் சுமங்கலி பாக்கியத்தை வலுப்படுத்தவும், கணவரின் ஆயுளை அதிகரிக்கவும் ‘வெள்ளிக்கிழமை விரதம்’, ‘வரலட்சுமி விரதம்’, ‘கேதார கவுரி நோன்பு’ போன்ற விரதங்களை கடைப்பிடிக்கிறார்கள்.
இதையே நமது முன்னோர்கள் ஆண்களின் 60 வயதில் ‘சஷ்டியப்த பூர்த்தி’, 70 வயதில் ‘பீமரத சாந்தி’, 80 வயது சதாபிஷேம், 96 வயதில் ‘கனகாபிஷேகம்’ போன்ற மணவிழா சடங்குகளை செய்து ஆயுள் நீட்டிப்பு பெற்றார்கள்.
ஜனன கால ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானம் எனும் ஐந்தாமிடமும், பாக்கிய ஸ்தானம் எனும் ஒன்பதாம் இடமும் பலம் பெற்றவர்களுக்கு இந்த மணவிழாக்களைக் காணும் பாக்கியம் அமைகிறது.
பொதுவாக ஆயுள் விருத்தியைப் பிரதானமாகக் கொண்டு செய்யப்படும் இந்த சடங்குகளில், சகல தேவர்களையும் மகிழ்விக்கும் வேத பாராயணங்களும், ஹோமங்களும் நடைபெறுகின்றன.
ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 8-ம் இடமும், 8-ம் அதிபதியும், 8-ல் நின்ற கிரகமுமே ஆயுள், மாங்கல்ய பலத்தை தீர்மானிக்கும்.
8-ம் அதிபதி சுப கிரக சம்பந்தத்துடன் வலுப்பெற்று விட்டால், அந்தப் பெண் தன் கணவனுடன் தீர்க்க சுமங்கலியாக தனது சொந்த பந்தங்களுடன் நீண்ட நெடுங்காலம் வாழ்வார்.
அத்துடன் செவ்வாயும், சுக்ரனும் பலம் பெற்றால், லட்சுமி கடாட்சம் நிறைந்த தீர்க்க சுமங்கலியாக அவர் இருப்பார்.
இத்தகைய அம்சம் நிறைந்த சுமங்கலிகள் ஆசி வழங்கினால் எத்தகைய திருமணத் தடையாக இருந்தாலும் அது அகன்றுவிடும்.
நமது முன்னோர்கள் மாங்கல்ய கயிற்றைதான், சுமங்கலித்துவம் நிறைந்த மங்களப் பொருளாகக் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
அதில் பஞ்சபூத சக்திகள் நிறைந்து இருப்பதால் சுமங்கலித்துவம் அதிகரிக்கும்.
அதிலும் பருத்தி இழைகளால் ஆன மாங்கல்ய கயிற்றிற்கு பஞ்ச பூத தெய்வீக சக்தி களை ஈர்த்து, சுமங்கலித்துவ சக்தியாக மாற்றக்கூடிய அருட்சக்தி அதிகம்.
அதனால்தான் நமது முன்னோர்கள் மாங்கல்யத்தை மாங்கல்யச் சரடில் கோர்த்து பயன்படுத்தினார்கள்.
இன்றும் பலர் திருமாங்கல்யத்தை மாங்கல்ய கயிற்றில் பூட்டியே அணிகிறார்கள்.
இந்த நவீன காலத்தில் நாகரிகமாக திருமாங்கல்யத்தை தங்கச்சங்கிலியில் சேர்த்து அணிபவர்களே அதிகமாக இருக்கிறார்கள்.
“தங்கத்தில் திருமாங்கல்யம் அணிபவர்களுக்கு சுமங்கலித்துவம் குறைவாகவும், கயிற்றில் சரடினால் திருமாங்கல்யம் அணிபவர்களுக்கு சுமங்கலித்துவம் அதிகமாகவும் இருக்குமா?” என்ற சந்தேகம் பலருக்கும் வரலாம்.
மஞ்சள் கயிற்றிற்கு நேர்மறை சக்தி அதிகம் என்பதால் தீவினை தோஷங்கள் எளிதில் அண்டாது.
கர்ம வினைகளின் தாக்கம் குறையும்.
திருமாங்கல்யத்திற்கு இவ்வளவு மகத்துவம் இருந்தும், பல பெண்கள் தொழில், உத்தியோகம் மற்றும் கணவனுடன் ஏற்படும் கருத்து வேறுபாடு காரணமாக திருமாங்கல்யம் அணியாமலும் இருக்கிறார்கள்.
திருமாங்கல்யம் என்பது ஒரு மங்கலப் பொருள்.
அதனால் அதை அணிகலன்களைப் போல் தினமும் கழற்றி வைப்பது, தேவைப்படும்போது அணிந்து கொள்வது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும்.
பல பெண்கள் கோபத்தில் டி.வி. சீரியல் நடிகை போல் தாலியை கழட்டி வீசுவார்கள்.
இப்படிச் செய்வதால், அந்தப் பெண்களின் பெண் பிள்ளைகளுக்கு மாங்கல்ய தோஷம் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே மனக் கட்டுப்பாடு மிகவும் அவசியம்.
சுமங்கலித்துவத்தை அதிகரிக்கச் செய்யும் பரிகாரங்களை இங்கே பார்க்கலாம்..
ஜனன ஜாதகத்தில் 8-ம் அதிபதி, அசுப கிரக சம்பந்தம் பெற்றவர்களும் செவ்வாய் பலம் இழந்தவர்களுமே மாங்கல்யத்திற்கு தகுந்த மரியாதை தராமல் இருப்பார்கள்.
அந்தப் பெண்கள், 60 வயதிற்கு மேற்பட்ட சுவாசினிகளிடம் வெள்ளிக்கிழமைகளில் நல் ஆசி பெற வேண்டும்.
ரெடிமேடாக தங்கச் சங்கிலி கிடைப்பதால் நேரம் கிடைத்த நேரத்தில் தங்க சங்கிலி வாங்கி திருமாங்கல்யத்தில் சேர்க்க கூடாது.
நேரம், பணம் இருக்கும் போது சங்கிலி வாங்கினாலும், பெண்ணின் ஜாதகத்தின் அடிப்படையில் சுபயோக தினத்தில்தான் அதைச் செய்ய வேண்டும்.
இதன் மூலம் சுமங்கலித்துவம் அதிகரிக்கும்.
கணவருக்கு உடல் ஆரோக்கிய குறைபாடு இருந்தாலும் அது சீராகிவிடும்.
கணவன் - மனைவிக்கு இடையே உள்ள சண்டை சச்சரவுகள், கருத்து வேறுபாடுகள் நீங்கும். பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று கூடுவர்.
திருமாங்கல்யம், நெற்றி, முன் வகிடு மத்தி ஆகிய மூன்று இடங்களில் எப்பொழுதும் குங்குமம் இட, அது சுமங்கலித் தன்மையை பெற்றுத் தரும்.
தினமும் காலையில் ஆதித்திய ஹிருதயம் கேட்பதாலும், சுமங்கலி பாக்கியம் அதிகரிக்கும்.
ஆதித்திய ஹிருதயத்தின் 5-வது வரியை 9 முறை உச்சரிக்கும்போது, சுமங்கலி பாக்கியத்தோடு, சகல சவுபாக்கியங்களும் சேரும்.
பாவங்கள் நீங்கும். சிந்தையில் உள்ள கவலை நீங்கி, ஆயுள் அதிகரிக்கும்.
May be an image of 2 people

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...