நீண்ட இழுபறிக்குப் பின், தி.மு.க., கூட்டணியில், ம.தி.மு.க.,வுக்கு, ஆறு தொகுதிகள் ஒதுக்க சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனி சின்னத்தில் போட்டி என்ற முடிவை கைவிட்டு, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட தயார் என, ம.தி.மு.க., அறிவித்துள்ளது. காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கான பங்கீட்டில், உடன்பாடு எட்டாததால், இழுபறி நீடிக்கிறது.சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், தனிச் சின்னத்தில் போட்டியிட விரும்பி, ம.தி.மு.க., 12 தொகுதிகள் கேட்டது.
தனி சின்னம் என்றால், வெறும் நான்கு தொகுதிகள் தான் கிடைக்கும் என்றும், அதுவே உதயசூரியனில் போட்டி என்றால், ஆறு தொகுதிகள் தரப்படும் என்றும், தி.மு.க., குழு திட்டவட்டமாக தெரிவித்தது. இதையடுத்து, ஆறு தொகுதிகளை பெறுவதற்காக, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட, ம.தி.மு.க., முன்வந்தது. சென்னை அறிவாலயத்தில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தலைமையிலான குழுவும், வைகோ தலைமையிலான குழுவும், நேற்று நடத்திய பேச்சில் உடன்பாடு ஏற்பட்டது.
ம.தி.மு.க.,வுக்கு, ஆறு தொகுதிகள் ஒதுக்க, தி.மு.க., சம்மதம் தெரிவித்தது.இதற்கான ஒப்பந்தத்தில், ஸ்டாலின், வைகோ கையெழுத்திட்டனர்.
பின், நிருபர்களிடம், வைகோ கூறியதாவது:
'ஸ்டாலினுக்கு பக்கபலமாக இருப்பேன்' என, கருணாநிதியிடம், ஏற்கனவே உறுதி அளித்திருந்தேன். திராவிட இயக்கத்தை பாதுகாக்கவே, தி.மு.க., ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம். தனிச் சின்னத்தில் போட்டியிட, ஒரு கட்சிக்கு, 12 தொகுதிகள் தேவை. ஓட்டு சேகரிக்க, குறைந்த நாட்கள் உள்ளதால், ஆறு தொகுதிகளிலும், உதயசூரியன் சின்னத்தில், ம.தி.மு.க., போட்டியிடும்.இவ்வாறு, வைகோ கூறினார்.
இதற்கிடையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயற்குழுக் கூட்டம், நேற்று மாலை, சென்னையில் நடந்தது. அதில், 'தி.மு.க.,விடம் கடைசி வரை போராடி, 7 தொகுதிகளாவது பெற வேண்டும்' என தீர்மானிக்கப்பட்டது. அந்த தகவலை, தி.மு.க., தலைமைக்கு தெரிவித்து, அழைப்புக்காக காத்திருந்தது. ஆனால், தி.மு.க., தரப்பில் இருந்து, அழைப்பு வரவில்லை.
அதேபோல், காங்கிரஸ் கட்சியும், தி.மு.க., வழங்கவுள்ள, 24 தொகுதிகளுக்கு உடன்படாமல், ராகுலின் சம்மதத்திற்காக காத்திருக்கிறது. இதனால், காங்., மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் உடன்பாடு ஏற்படாமல், இழுபறி நீடிக்கிறது. திருச்சியில், 'விடியலுக்கான முழக்கம்' எனும் தலைப்பில், தி.மு.க., தேர்தல் பொதுக்கூட்டம் நடைபெறுவதால், இன்றும் அழைப்பு வர வாய்ப்பில்லை. நாளை, மீண்டும் தி.மு.க., குழுவிடம், காங்., மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குழுக்கள் பேச்சு நடத்த உள்ளன. அதன்பின், உடன்பாடு ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
No comments:
Post a Comment