பரம்பரை பரம்பரையாக சைவ சமயத்தில் ஒழுக்கம் பிறழாது வாழ்ந்து வந்த குடும்பத்தில் பிறந்து இருந்த மருள் நீக்கியார் சமண மதம் மாறியபோது சைவர்கள் , , அவரது தமக்கையார் திலகவதி அம்மையார் தவிர , யாதொரு எதிர்வினை செய்ததாக பதிவு இல்லை .
ஆனால் அவரே தம் தமக்கையாரின் இடைவிடாத பிரார்த்தனைக்குப் பலனாய் மீண்டும் சைவ சமயம் வந்த போது சமண மதத்தவர் கொதித்து எழுந்தனர்.சொல்லொண்ணா துயர் கொடுத்தனர்.பெரும் யானை கொண்டு மிதிக்கச் சொன்னது , சுண்ணாம்பு நீற்று அறையில் அடைத்தது , பெருங்கல்லை க்கட்டி கடலில் வீசியது எனத் தொடர்ந்து இன்னல்கள் கொடுக்க சிவத்தின் பெருங்கருணையால் அத்தனை இன்னல்களில் இருந்தும் தப்பித்தார்.
அப்படியாக மகேந்திரவர்ம பல்லவ மன்னர், திருநாவுக்கரசர் என்னும் அப்பர் அடிகளாரை கருங்கல்லில் கட்டி கடலில் வீசிய சமயம் பாடிய நமச்சிவாய பதிகத்தின் முதல் பாடல்.
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே.
. அக்கல்லையே தெப்பமாக கொண்டு அப்பர் கரை சேர்ந்தார். அந்த இடம் தான் கடலூர் முதுநகர் அருகே, புதுவண்டி பாளையத்தில் உள்ள கரையேறவிட்ட குப்பம் என்று அழைக்கப்பட்டுகிறது. அப்பர் கரையேறிய இடத்தில் அவருக்கு தனியாக கோயில் அமைக்கப்பட்டு உள்ளது.
சிவஞான சுவாமிகள் திருநாவுக்கரசு நாயனார் கடலினின்றும் கரையேறிய திருப்பாதிரிப்புலியூரில் யாத்திரையாக எழுந்தருளியிருக்கும் காலத்திலே சிவாலயத்தின் கண்ணே, சில வித்துவான்களும் பிரபுக்களும் கூடிய சபையில் ஒரு பிரபு, நூறு பொன்னைக் கிழியாகக் கட்டி வைத்து, "கரையேற விட்ட முதல்வா உன்னை அன்றியும் ஓர் கதி உண்டாமோ' என்று ஈற்றடி எடுத்துக் கொடுத்துச் "செய்யுளைப் பூர்த்தி செய்பவர் இப்பொற்கிழியை எடுத்துக் கொள்ளலாம்' என்று சொன்னார்.
அந்நிகழ்ச்சியைச் சுவாமி தரிசனத்தின் பொருட்டுச் சிவாலயத்துக்கு எழுந்தருளிய சுவாமிகள் அறிந்து, ஒரு ஏழைப் பிராமணனை நோக்கி அப்பொற்கிழியை எடுத்துக் கொள்ளும்படி கட்டளையிட்டு,
வரையேற விட்டமுதம் சேந்தனிட அருந்தினைவல் லினம் என்றாலும்
உரையேற விட்டமுத லாகுமோ எனைச் சித்தென்று உரைக்கில் என்னாம்
நரையேற விட்டமுத னாளவனாக் கொண்டுநறும் புலிசை மேவும்
கரையேற விட்ட முதல்வா உன்னை அன்றியுமோர் கதியுண் டாமோ
என்று செய்யுளைப் பூர்த்தி செய்தருளினார்.
முதல் வரி :
வரையேற விட்டமுதம் சேந்தனிட அருந்தினை..
இது தில்லையில் சேந்தனார் தவிட்டுக் களி படையல் நடராஜரை வழிபட்ட சரித்திரத்தை சொல்லுகிறது.
இரண்டாவது வரி :
வல் லினம் என்றாலும்
உரையேற விட்டமுத லாகுமோ எனைச் சித்தென்று உரைக்கில் என்னாம்
வல்லின எழுத்துக்கள் க,ச,ட,த.ப,ற , என ஆறு எழுத்துக்கள் இருப்பினும் ' ட' வும் , ' ற' வும் மொழிக்கு முதலில் வரத் தகுதி இல்லை.அது போல நான் அறிவு உடையவன் என்பதனாலேயே என்னை சித்து என்று அழைக்க முடியுமா என்கிறார்.
மூன்றாவது வரி:
நரையேற விட்டமுத னாளவனாக் கொண்டு
நரையேறு எனில் வெள்ளை எருது .சிவம் திருமாலை எருது வாகனமாக சுமந்து கொண்ட வரலாறு சொல்லுகிறார்.அவிட்ட நட்சத்திரத்துக்கு முதல் நட்சத்திரம் திருவோணம.அதற்கு முதல்வர் திருமால்.அப் புராணத்தைச் சொல்கிறார்.
நான்காவது வரி:
நறும் புலிசை மேவும் கரையேற விட்ட முதல்வா உன்னை அன்றியுமோர் கதியுண் டாமோ
திருப்பாதிரி புலியூர் குடிகொண்ட முதல்வா..நீ எம்மை கரை சேர்த்தாய்..என்கிறார்.
நான்காவது வரி ஒன்றை வைத்துக் கொண்டு மூன்ற வரிகள் கொண்டு செய்யுளை இறுதி செய்த மாணபினைப்
பார்த்தோம் எனில் , முதல் வரியில் சேந்தனார் சரித்திரம் , இரண்டாம் வரியில் தமிழ் இலக்கணம், சைவ சித்தாந்தம் , மூன்றாம் வரியில் திருமால் புராணம்,கடைசி வரியில் இறைவழிபாடு என் முடித்தது கொண்டு அவர் தமிழின் பால் கொண்ட ஆழ்ந்த அறிவு இவை விளங்கும்.
பாவநாசம் என்னும் திருப்பதியைச் சார்ந்த விக்கிரமசிங்கபுரத்திலே, சிவபத்தி அடியார் ஆனந்தக் கூத்தர் என்பவருக்கும் மயிலம்மையார் என்று எவராலும் சிறப்பித்துச் சொல்லப்படுபவர் ஆகிய மங்கைக்கும் கருவில் திருகொண்ட குழந்தையாக அவதரித்தார்.முக்களாலிங்கர் என அழைக்கப்பட்ட சிவஞான சுவாமிகள் ஆவார்.இவர்தம் வரலாற்றை நாம் விரிவாக ஏற்கனவே ஒரு பதிவில் சிந்தித்து இருக்கிறோம்.
திருவாவடுதுறை ஆதீனத்தின் சிறப்பு வாய்ந்த தம்பிரானாகவும் இருந்து தமிழுக்கு எனவே வாழ்ந்து தமது 32 வது வயதில் மறைந்த அருளாளர்.
இயற்றிய நூல்கள் :
தொல்காப்பிய பாயிர விருத்தி
மாபாடியம்
திருத்தொண்டர் திருநாமக்கோவை
திருமுல்லைவாயில் அந்தாதி - 100 பாடல்களைக் கொண்ட நூல்
குளத்தூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி
சோமேசர் முதுமொழி வெண்பா
இளசைப் பதிற்றுப்பத்தந்தாதி
திருவேகம்பரந்தாதி
கச்சி ஆனந்த ருத்திரேசர் பதிகம்
ஆனந்தக் களிப்பு
காஞ்சி புராணம்
முதற்காண்டம்
கலைசைப் பதிற்றுப்பத்தாந்தாதி
கலைசைப் செங்கழுநீர்
விநாயகர் பிள்ளைத் தமிழ்
அமுதாம்பிகைப் பிள்ளைத் தமிழ்
அகிலாண்டேசுவரர் பதிகம்
சித்தாங்க பிரகாசிகை
சுலோக பஞ்சகம்
தருக்க சங்கிரகம்
சிவதத்துவ விவேகம்
கற்பனை செய்ய முடிகிறதா...இந்த்தனை அரிய நூல்களை தமது சிறு வாழ்க்கையினுள் படைத்து இருக்கிறார்.எந்நேரமும் தமிழ் மொழி சிந்தனைதான்.சமையல்காரர் ' அய்யா..இன்று என்ன சமைக்க வேண்டும்...?' எனக் கேட்கிறார்.வெண்பாவில் பதில் சொல்கிறார்.
சற்றே துவையல் அரை தம்பி ஒரு பச்சடிவை
வற்றல் ஏதேனும் வறுத்துவை - குற்றம்இலை
காயம்இட்டுக் கீரைகடை கம்மெனவே மிளகுக்
காய் அரைத்து வைப்பாய் கறி
சிவஞானபோதம் என்னும் அரிய சாத்திர நூலுக்கு திராவிட மாபாடியம நூல் அருளிச் சென்ற தமிழ்ப் பெரியார் இவர் என்பதை நாம் மிக்க நன்றியுடன் நினைவு கொள்ளல் வேண்டும்.
No comments:
Post a Comment