‘போராட்டங்களுக்கும், விளம்பரங்களுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு’ என்கிறது ரஷ்யப் பழமொழி. நாம் நம் உரிமைக்காகப் போராட வேண்டும்; இதில் வன்முறைக்கோ, உள்நோக்கத்துடன் கூடிய போலி விளம்பரங்களுக்கோ இடமில்லை. முன்பெல்லாம் போராட்டங்கள் என்றால் வன்முறை நிறைந்ததாக இருக்கும். அடிதடி, ரத்தம், உயிர்ப்பலி, துப்பாக்கிச் சூடு போன்றவை இருக்கும். இப்போது போராட்ட வடிவங்கள் மாறியுள்ளன. இரு நாடுகளுக்கு இடையேயான போராட்டமாக இருந்தாலும் சரி, அரசாங்கத்தை எதிர்த்து நடைபெறும் போராட்டமாக இருந்தாலும் சரி.. இப்போதெல்லாம் அமைதியான முறையில்தான் நடக்கிறது என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?
ஆம்...தமிழகத்தில் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி போராடிய இளைஞர்கள் முதல், இன்று நீட் தேர்வை ரத்து செய்யக்கோரும் மருத்துவர்கள் போராட்டம் வரை நூதனமான முறையில்தான் அவை நடைபெறுகின்றன. குறிப்பாக, இவர்கள் மேற்கொள்ளும் போராட்டங்களில் அரசியலும் இல்லை; அரசியல்வாதிகளும் இல்லை.
ஜல்லிக்கட்டுப் போராட்டம்
மெரினா போராட்டம்!
ஜல்லிக்கட்டு என்பது கிராம விளையாட்டு. அது விவசாயிகள், தமிழர்களின் வீர விளையாட்டு என்று இருந்த நிலையில், அதன் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி சென்னையில் இளைஞர்கள் போராட்டத்தைத் தொடங்கினர். போராட்டம் எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம் என்று இருந்த நிலையில், இப்படியும் நடக்கும் என்பதற்குச் சாட்சியாக அமைந்தது மெரினாவில் நிகழ்ந்த அறவழிப் போரட்டம். பத்து நாட்களாக நடந்த இந்தப் போராட்டத்தில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் எந்தவொரு பிரச்னையும் ஏற்படாமல், அவர்களை தங்கள் குடும்பத்தில் ஒருவராக நினைத்து, அனைவரும் பாதுகாப்புடன் இருக்க உதவி செய்தனர் இளைஞர்கள். மேலும், யாருக்கும் உணவு இல்லை என்ற பேச்சுக்கே இடமளிக்காமல், போதும் போதுமென்ற அளவுக்கு உணவையும், தண்ணீரையும் வாரி இறைப்பதற்கென்றே ஒரு குழு செயல்பட்டது. இதுபோன்றதொரு போராட்டத்தை மெரினா கடற்கரை இதுவரை சந்தித்தது கிடையாது. இளைஞர்களின் இந்த அறவழிப் போரட்டம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் ஜல்லிக்கட்டுக்கான போராட்டங்கள் நடைபெற்றன. இறுதியில் ஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்கு வெற்றியும் கிடைத்தது.
டெல்லியில் விவசாயிகள்
டெல்லி போராட்டம்
டெல்லி ஜந்தர் மந்தரில், 40 நாள்களுக்கும் மேலாக தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளின் கடன் தள்ளுபடி, நதிகள் இணைப்பு, காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் நடைபெற்றது. ஒவ்வொரு நாளும் அவர்களின் போராட்டம் வலுவடைந்ததோடு, பல்வேறு வடிவங்களில் வித்தியாசமான போராட்டமாகவும் அது அமைந்தது. எலிக்கறி சாப்பிடுதல், மொட்டை அடித்தல், பிச்சை எடுத்தல், குட்டிக்கர்ணம் அடித்தல், நிர்வாணமாக போராட்டம் நடத்துதல் என விதவிதமாக தங்கள் எதிர்ப்புகளை விவசாயிகள் பதிவு செய்தனர். பிரதமரைச் சந்தித்து தங்களது கோரிக்கைகளை தெரிவிக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் முக்கிய நோக்கமாக இருந்தது. ஆனால், கடைசிவரை அவர்கள் நினைத்தது நடக்கவில்லை. இருந்தாலும், அவர்களின் போராட்டத்தை இந்தியா மட்டுமல்லாமல் உலகமே திரும்பிப் பார்த்தது.
போராட்டத்தில் மருத்துவ மாணவர்கள்
டாக்டர்கள் போராட்டம்
மருத்துவப் பட்ட மேற்படிப்புகளில், அரசுப் பணியில் இருக்கும் மருத்துவர்களுக்கு தற்போது 50 சதவிகிதம் இடக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த இடஒதுக்கீட்டு முறையை ரத்து செய்து இந்திய மருத்துவக் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. இனி நீட் தேர்வு மூலமே மருத்துவப் பட்ட மேற்படிப்புகளுக்கான இடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், 50 சதவிகித இட ஒதுக்கீட்டை ரத்து செய்யக்கூடாது என்று வலியுறுத்தியும் கடந்த 10 நாள்களாக அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்தப் போராட்டம், சென்னையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனைளிலும் நெல்லை, திருச்சி, மதுரை உள்ளிட்ட இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் நடைபெற்றது. சென்னை தேனாம்பேட்டை மருத்துவக்கல்வி இயக்குனரக வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்தின்போது, மருத்துவர் ஒருவரை உயிருடன் சமாதி கட்டுவதுபோன்ற போராட்டமும் அடங்கும். உண்ணாவிரதத்தில் தொடங்கிய மருத்துவர்களின் போராட்டம், பின்னர் சிகிச்சைக்கு வருபவர்களுக்கு மருத்துவம் பார்க்காமல் புறக்கணிப்பதாக உருமாறியது. அறவழியிலான போராட்டம் என்றாலும் உடல்நலக் குறைவுடன் சிகிச்சைக்காக வரும் நோயாளிகள், சிகிச்சை கிடைக்காமல் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் செயலாளருடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின் மருத்துவர்கள் தங்களின் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
வன்முறையாகவும், உயிர்ப் பலிகளாகவும் நடைபெற்ற போராட்டங்கள், சமீபகாலமாக அமைதியான முறையிலும், யாருக்கும் எவ்விதப் பாதிப்பும் இல்லாமலும் நடைபெறுவது வரவேற்கத்தக்கதே. இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது, மாகாத்மா காந்தி பின்பற்றிய சத்தியாக்கிரக போராட்டமும் இதுபோன்ற அறவழியிலானதுதான். காந்தி எதிர்பார்த்த... அவர் பின்பற்றிய அமைதி வழியிலான போராட்டம்தான், இப்போது பல்வேறு இடங்களிலும் நடைபெறத் தொடங்கியுள்ளது. அமைதியான இந்தியாவைக் காண நினைத்த மகாத்மாவின் கனவு விரைவில் முழுமையாக நிறைவேறும் என்பதற்கான அறிகுறிதான் இத்தகைய அறவழிப் போராட்டங்கள். நாட்டுக்குள் நடக்கும் இதுபோன்ற அறவழிப் போராட்டங்கள் போன்று உலகம் முழுவதும் நடைபெறுமானால், அனைத்து நாடுகளிலும் வாழும் மக்கள், ஒருவருக்கு ஒருவர் அன்பு செலுத்தி, மகிழ்ச்சியில் திளைப்பார்கள். தனி நபர்களுக்கான சண்டையாக இருந்தாலும் சரி, இரு நாடுகளுக்கு இடையிலான சண்டையாக இருந்தாலும் சரி... பிரச்னைகளை சரியான முறையில் பேசித் தீர்த்துக் கொள்வதுடன் அன்பால் இணைவோம்!
No comments:
Post a Comment