Friday, June 9, 2017

ஒரு தி.மு.க. பிரமுகர் வீட்டில் எம்.ஜி.ஆரின் கார் எப்படி வந்தது?

ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், ஈரோடு மேற்கு தொகுதி வேட்பாளராகவும் இருப்பவர் சு.முத்துசாமி. இவருடைய வீட்டில் வெளிர் நீல நிறத்தில் ஒரு பழைய அம்பாசிடர் கார் பராமரிக்கப்பட்டு வருகிறது. யாரும் இதில் பயணம் செய்வது இல்லை என்றாலும் புதுப்பொலிவுடன் காரை வைத்து இருக்கிறார்கள். காரின் பதிவு எண் எம்.ஜி.ஆர்.4777 என்பதாகும்.
இது எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்தபோது பயன்படுத்திய கார் ஆகும். ஒரு தி.மு.க. பிரமுகர் வீட்டில் எம்.ஜி.ஆரின் கார் எப்படி வந்தது?
எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சராகவும், எம்.ஜி.ஆரின் நெருங்கிய நட்பு வட்டத்துக்குள்ளும் இருந்த சு.முத்துசாமி இதுபற்றி கூறியதாவது:-
1986 அல்லது 87 என்று நினைக்கிறேன். ஒருநாள் நானும் எம்.ஜி.ஆரும் பேசிக்கொண்டு இருந்தோம். அப்போது ஒரு வாரப்பத்திரிகையில் பெட்டி செய்தியாக ஒரு தகவல் வந்திருந்தது. இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர் பயன்படுத்தி வரும் பியட் காருக்கு எம்.எஸ்.வி. என்று பதிவு எண் பெற்று ஓட்டி வருவது அந்த செய்தியில் கூறப்பட்டு இருந்தது. அதைப்படித்த எம்.ஜி.ஆர். அப்படியே என்னிடம் காட்டினார். ஆனால் அதைப்பற்றி எதுவும் பேசவில்லை.
Image may contain: car
அப்போது எம்.ஜி.ஆரிடம் எம்.எஸ்.ஆர். 4777, எம்.எஸ்.கியூ.4777 என்று 2 கார்கள் இருந்தன. எனக்கு எம்.ஜி.ஆர். என்று பதிவு செய்யப்பட்ட கார் வாங்கி அதில் அவர் பயணம் செய்ய வேண்டும் என்று விருப்பம். இதற்காக எம்.ஜி.ஆர். என்கிற பதிவு எங்கே உள்ளது என்று விசாரித்தபோது மராட்டிய மாநிலத்தில் இருப்பதாக தெரியவந்தது. உடனடியாக எனது உறவினரை அனுப்பி, 4777 என்ற எண் பதிவு செய்ய முடியுமா? என்று விசாரித்து பார்த்தபோது அதிர்ஷ்டவசமாக அதே எண் கிடைத்தது.
உடனடியாக உறவினர் பெயரில் கார் வாங்கி, அதில் எம்.ஜி.ஆர். 4777 என்ற பதிவு எண்ணை பெற்று சென்னைக்கு கொண்டு வந்து எம்.ஜி.ஆர். முன் நிறுத்தினோம். அவரும் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தார். அதன்பின்னர் இந்த 3 கார்களிலும் அவர் பயணம் செய்வது வழக்கம். அவரது மறைவுக்கு பின்னர் அவருடைய வீட்டில்தான் 3 கார்களும் இருந்தன. ஒரு காரை ஜானகி அம்மையார் பயன்படுத்தி வந்தார். ஒரு கார் நினைவு இல்லத்தில் பொதுமக்கள் பார்வைக்காக நிறுத்தப்பட்டு உள்ளது.
இந்த காரை என்னிடம் எடுத்துச்செல்லும்படி ஜானகி அம்மையார் வற்புறுத்தியதால் ஈரோடு கொண்டு வந்தேன். எம்.ஜி.ஆர். பயணம் செய்த அந்த காரில் நாங்கள் பயணம் செய்வதில்லை. அவரது நினைவாக பராமரித்து வருகிறோம்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...