ஹ்யூமர் சென்ஸ் எப்போதாவது ஒருவரிடம் வெளிப்படலாம். ஆனால் பால்யம் துவங்கி இறுதிக் காலம் வரை மூச்சைப் போல ஒருவரிடம் இது கலந்திருக்க முடியுமா என்றுகேட்டால் துக்ளக் சோ-வை ஓர் உதாரணமாக சொல்லலாம்.
சிறுவயதில் ஆரம்பித்த அந்த அபூர்வ இயல்பு கடைசிவரை மாறவே இல்லை. அவருடைய பேச்சு, நாடகம், சினிமா, எழுத்து எல்லாவற்றிலும் அதுதான் அவருடைய டிரேட் மார்க்.
அவருடன் பழகியவர்கள் பலருக்கு சிறு மின்னலைப் போல அவ்வப்போது பளிச்சிடும் சட்டையருக்கு முன்னால் சிரித்த ஞாபகங்கள் நிரம்பியிருக்கும்.
அவருடைய கேலிக்கு அவரே தப்பியதில்லை.
திருமணம் முடிந்து நான் மதுரைக்கு வந்த சமயத்தில் வீட்டுக்கு நண்பர்களுடன் வந்திருந்தார் சோ. வீட்டில் அவர் இருந்த சுமார் மூன்று மணி நேரமும் ஒரே கலாட்டா தான்.
அவர் வந்திருக்கிற செய்தி பரவியதில் தெருவில் இருந்த பலர் வீட்டுக்குள் வந்து விட்டார்கள். பத்து வயதான சிறுமி சோவிடம் நெருங்கி வந்து அவருடைய கையில் ஒரு எலுமிச்சம் பழத்தைக் கொடுத்தாலும் கொடுத்தார்.
உடனே சோவிடமிருந்து ஒரு கமெண்ட்..
'பாருங்க... இங்கே எத்தனை பேர் இருக்கீங்க. கரெக்டா என்னைப் பார்த்து இந்தப் பொண்ணு எலுமிச்சம்பழம் கொடுக்குதுன்னா என்ன அர்த்தம்? இவன் தலையிலே தேய்ச்சுக்கட்டும்னு நினைச்சுத்தான் கொடுத்துருக்கும். ஆமாம், எலுமிச்சம் பழத்தை இந்தத் தலையில் தேய்க்க முடியுமா? சொல்லுங்க முடியுமா?'
தன்னுடைய தலையில் கை வைத்தபடி சொல்லி விட்டு ஒரு முழி முழித்துக் கலாய்க்க, எலுமிச்சை கொடுத்த சிறுமிக்கு ஏகத்துக்கு வெட்கமாகிவிட்டது.
சோ மதிக்கக்கூடிய மனிதர்களில் ஒருவர் அப்போது ஜனதா கட்சியில் இருந்த நெல்லை ஜெபமணி.
(இவரது மகன் Jebamani Mohanraj நம் நட்பு வட்டத்தில் உள்ளார்.)
வெளியூரில் அவருடன் கூட்டம் ஒன்றில் பேச வந்திருந்தார் சோ. அவர் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் ஒரே தொண்டர்கள் கூட்டம்.
அதில் கதர் அணியாமல் வந்திருந்த ஒரு தொண்டரைப் பார்த்து நெல்லை ஜெபமணி கிண்டலாகச் சொன்னார்.
'கதர் அணியாதவன் கழுதை'..
'கதர் அணியாதவன் கழுதை'..
அவர் சொல்லி முடிப்பதற்குள் பாத்ரூமிலிருந்து வெளிவந்த சோ, சட்டென்று சொன்னார்."அப்ப நானும் ஒரு கழுதைதான்'..
ஜெபமணிக்குத் தர்மசங்கடமாகி விட்டது. நெளிந்தார்.
'நான் உங்களை சொல்லலை என்றார் ..
'நான் உங்களை சொல்லலை என்றார் ..
'ஏன் சார்... நானும்ந்தான் கதர் போடலை... அப்போ நானும் கழுதைதானே! துக்ளக்கில் நானும் அட்டையில் அடிக்கடி கழுதை கார்ட்டூன்களைப் போடுறேன்... இல்லையா? அதனாலே நீங்க சொல்றது பொருத்தம்னு.'தலையில் கை வைத்துக் கொண்டார் ஜெபமணி.
ஜனதாவில் கொஞ்ச காலம் இருந்துவிட்டு விலகியபோது அது குறித்துக் கேட்டபோது சோ சொன்ன பதில் இன்னும் தமாஷ் ரகம்!
'கட்சியில் சேர்ந்துட்டாபோதும் போலிருக்கு எதிலேயும் பிரைவஸி இல்லை. சாப்பிட்டா, தூங்கினா எப்பவும் சுத்திலும் ஒரு கூட்டம் நம்மைச் சுத்தி உட்கார்ந்து பார்த்துக்கிட்டே இருக்கு. படுக்கையில் படுக்கலாம்னு பார்த்தாக கூட பெட்லே நாலைந்து பேர் உட்கார்ந்து உத்துப் பார்த்துக்கிட்டே இருக்காங்க. அரசியல்வாதிகள் எப்படித்தான் இதை எல்லா தாங்கிக்கிறாங்களோ, பாத்ரூமுக்குப் போறப்ப மட்டும்தான் என் கூட யாரும் கூட வர்றதில்லை என்னாட இப்படியொரு இம்சைன்னு கட்சியை அத்தோட விட்டுட்டேன் என்றார்.
இறுதிக் காலத்தில் தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த போது துக்ளக்கிற்காக கேள்வி-பதில்களை அவர் டிக்டேட் பண்ணுவார். அப்போதுகூட பதில் சொல்லும்போது வழக்கமான அவருடைய கிண்டல் தொனி மாறாது.
சுமார் நாற்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக நீண்டிருக்கிற துக்ளக் கேள்வி பதிலில் அவருடைய சாதுர்யம், சாமர்த்தியம், டைமிங் சென்ஸ் எல்லாம் தெரியும்.
அந்த மாதிரியான சில நறுக் ரக கேள்வி-பதில்கள் மட்டும் சாம்பிளுக்கு இங்கே..
கே: மிருகங்களின் கேள்விக்கு நீங்கள் பதில் அளிப்பீர்களா?
ப: சும்மா கேளுங்க சார்.
கே: உங்களால் இந்த உலகத்தில் யாருக்கு என்ன பயன்?
பதி: பல தற்கொலைகளை நான் தடுத்திருக்கிறேன். தற்கொலை செய்யத் தீர்மானித்த சிலர் என்னைப் பார்த்துவிட்டு இவனே வாழ்கிறானே நாம் ஏன் வாழக் கூடாது என்று நினைத்து அந்த எண்ணத்தையே கைவிட்டு விட்டதாகக் கேள்வி.
கே: தகுதியற்றவர்கள் எல்லாம் நம் நாட்டில் பத்திரிகை ஆசிரியர்கள் ஆகி விடுகின்றனரே! அவர்களுக்கு என்ன தண்டனை கிடைக்கும் தெரியுமா?
ப: தெரியும். இந்த மாதிரியான அசட்டுத்தனமான கேள்விகள் வரும்.
கே: துக்ளக்கை வாங்கிப் படித்ததிலிருந்து என் மூளை பாதிக்கப் பட்டிருக்கிறது. இதற்கு என்ன காரணம்?
ப: வேலையே செய்யாமல் இருந்த அந்த அவயவம் வேலை செய்ய ஆரம்பித்திருக்கிறது வேறொன்றுமில்லை.
கே: உன் கண்ணில் நீர் வழிந்தால்?
ப:நானேதான் துடைத்துக் கொள்ள வேண்டும்.
கே: கடவுள் உங்களைப் படைத்ததற்காக நான் வருந்துகிறேன்?
ப: உமக்காக கடவுள் வருந்துவார்.
கே: லஞ்சம் என்றால் என்ன?
ப: உங்கள் வீட்டில் யாருமே மருத்துவக் கல்லூரியில் சேர முயற்சிக்கவில்லை போலிருக்கிறது.
கே: ஒரு மனிதன் வாழ்க்கை முழுவதும் உண்மையே பேசிக் கொண்டிருந்தால்?
ப: ஓட்டுப்போடுகிறவனாகவே இருப்பான். ஓட்டுப் பெறுகிறவனாக மாறவே முடியாது.
கே: தமிழகப் பசு அம்மா என்று அழைக்கிறதே! தாய்லாந்து பசு எவ்வாறு அழைக்கும்?
ப: சித்தப்பா என்று அழைக்கும். தாய்லாந்து போனால் கட்டாயம் தெரிந்து வந்து சொல்கிறேன் .
கே: தே.மு.தி.க. கரைந்து வருவது நாட்டுக்க நல்லதா?
ப: ரொம்பக் கெடுதல், இப்படி அந்தக் கட்சி கரைந்து போய்க் கொண்டிருந்தால், நாட்டின் கதி என்ன ஆவது? ஒருபுறம் பாகிஸ்தான், மற்றொரு புறம் சீனா, மற்றொருபுறம் பொருளாதார விவகாரங்கள். என்றெல்லாம் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பிரச்னைகள் பரவிக் கிடக்கும் நிலையில், இந்தக் கட்சி கரைவது ரொம்பவும் துரதிர்ஷ்டவசமான விஷயம். திருப்தியா?
கே: உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்தால், மக்களுக்கு என்ன மாதிரியான நன்மைகள் உண்டாகும்?
ப: சோஷியலிஸம்' உயர்மட்டத்தில்தான் ஊழல் என்றில்லாமல், கீழ்மட்டங்களிலும்கூட ஊழல், பரவி சோஷியலிஸம் ஸ்தாபிக்கப்படும். மக்கள் இன்புறலாம்...
கே: மீண்டும் தி.மு.க. ஆட்சி வந்துவிடக்கூடாது என்று தாங்கள் கூறுவதை, துக்ளக் வாசகர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள் என் நினைக்கிறீர்களா?
ப: இல்லை. துக்ளக், விவாதங்களின் முடிவு அல்ல. விவாதங்களின் ஆரம்பம், என் கருத்தை நான் சொல்கிறேன். வாசகர்கள்அதைத் தங்கள் மனதில் நினைத்துப் பார்த்து ஒரு முடிவுக்கு வருவார்கள். ஒவ்வொரு முறையும் இப்படித்தான் நடக்கிறது.
சில சமயங்களில் என் கருத்து ஏற்கப்படும். வேறு சமயங்களில் அது நிராகரிக்கப்படும். சுத்த ஜனநாயகம்.
No comments:
Post a Comment