குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் ஊரின் ஈசான்ய திசையில் மகாமாரியம்மன் அமைந்துள்ளது. வளம் கொழிக்கும் ஊர் வலங்கைமானில், வருவோருக்கெல்லாம் வளங்கள் பல தந்து அருளாட்சி செய்கிறார் அம்மன்.
நீர் நிலையும் கோயிலுமாக அமைந்து, அழகு மிளிர அமைந்துள்ளது வலங்கைமான். சாலையோரம் அமைந்துள்ள கோயிலின் தெய்வீக சக்தி பொங்கிப் பிரவாகிக்க, இந்த ஈசானிய திசையும் ஒரு காரணம் என்கிறார்கள் ஊர்க்காரர்கள்.
என்னை நாடிவரும் பக்தர்கள், உயிர் போகும் தருணத்தில் வந்தாலும், அவர்களைக் காத்தருள்வேன் என்று கூறியருளினாளாம் அன்னை. அதன்படி, உயிர்போகும் நிலையில் டாக்டரால் கைவிடப்பட்டோர் கூட, அம்மனை வேண்டிக் கொள்கின்றனர். தீராத நோயில் இருந்து அம்மனின் அருளால் மீண்டு வந்தவர்கள், பாடைக்காவடி எடுத்து நேர்த்திக்கடன் செய்கிறார்கள். இந்தப் பாடைக்காவடி வழிபாடு, வேறு எங்கும் இல்லை என்பது ஆச்சரிய விஷயம்.
ஒவ்வொரு திருத்தலத்துக்கும் ஒவ்வொரு மகிமை உண்டு. வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலின் மகிமையே பாடைக்காவடி திருவிழாதான். அம்மை கண்டவர்கள் எந்த மருத்துவரையும் தேடிப் போவதில்லை. மாரியம்மன் ஆலயத்தில் தங்கியிருந்து அம்மனை நினைத்து வழிபடுகின்றனர். கோயிலில் அமைந்துள்ள தேவி குணமாக்கி பக்தர்களை நலமுடன் அனுப்பி வைப்பாள். இப்படித்தான் இந்த ஆலயம் பிராபல்யமாயிற்று என்கிறார்கள் சோழ தேசக்காரர்கள்.
மருத்துவரால் கைவிடப்பட்டு “எந்தப்பக்தன் அம்பாளிடம் எனக்கு உயிர்ப்பிச்சை தா! உனக்குப்பாடைக்காவடி எடுக்கிறேன்” என்று வேண்டிக் கொள்கிறானோ, அவனுக்கு உயிர்ப்பிச்சை தந்து நல்வழியில் வாழ வைக்கிறாள் அன்னை. வேண்டுதல் நிறைவேறிய பிறகு பக்தர்கள் பாடைக்காவடி எடுத்து தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.
திருவிழாக் காலங்களில், வலங்கைமான் மாரியம்மன் கோயிலைச் சுற்றிலும் ஏராளமான பாடைகளைப் பார்க்கலாம். கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பாடைகள் இருக்கும். அம்மனின் அருளால் உயிர் பிழைத்தவர்கள் அப்போது பாடைக்காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தும் காட்சி சிலிர்க்க வைக்கும்.
பாடைகளில் படுத்து, வாயைக் கட்டி உடலில் கயிறு கட்டி பாடைகாவடி எடுக்கும் பக்தர்களைப் பார்க்கும் போது, அன்னையின் அருளாட்சி மட்டும் அல்ல… கடைசியில் நாம் இப்படித்தான் என்பதை உணர்த்தி, கர்வத்தைத் தொலைக்கச் செய்யும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
மனிதர்கள் மட்டுமல்லாது ஆடு மாடுகளும் நோய் வாய்பட்டுவிட்டால் மாரியம்மனை நினைத்து விபூதி பூசி வேண்டிக்கொண்டு அவை நலமான பிறகு ஆடு மாடுகளை அன்னைக்குக் காணிக்கையாக செலுத்துகின்றனர்.
அந்தக் காலத்தில், ஆங்கிலேயர் ஒருவர் வலங்கைமான் பகுதியில், காவல்துறை இன்ஸ்பெக்டராகப் பனியாற்றினார். அவர் அம்பாளின் மகிமை தெரியாமல் இந்தக் கோயில் திருவிழாவைத் தடைசெய்யக் கட்டளையிட்டார்.
அன்றிரவே அவருக்கு அம்மை நோய் வந்தது. அருகில் இருந்தவர்கள் அம்மனின் விளையாடலைச் சொல்லி புரியவைத்தார்கள். தன் தவறை உணர்ந்தார் ஆங்கிலேய துரை.
அம்மனின் சந்நிதிக்கு வந்து தன்னை காத்தருளும்படி வேண்டினார். உடனே குணமானார். அம்மனின் மகிமையை உணர்ந்தேன். இனி திருவிழாவின் முதல் நாள் எங்கள் காவல்துறையின் சார்பில் மண்டகப்படியும் நிகழ்ச்சியும் நடக்கும் என அறிவித்தார். அன்று துவங்கி இன்று வரை… விழாவின் முதல் நாள் காவல்துறையினரின் மண்டகப்படி விமரிசையாக நடைபெறுகிறது.
வருடந்தோறும் ஆவணி, பங்குனி மாதங்களில், திருவிழா நடைபெறுகிறது. பங்குனித்திருவிழாவும் இங்கு பிரசித்தம். பங்குனி முதல் ஞாயிற்றுக்கிழமையன்று தொடங்குகிறது. அன்று இரவு அம்பாளுக்கும் பூசாரிக்கும் காப்பு கட்டப்படுகிறது. காப்பு கட்டிய பின் விழா முடிந்து காப்பவிழ்க்கும் வரை அவ்வூர் மக்கள் வெளியூர் செல்லக்கூடாது என்பது மரபு. 8-ஆம் நாளில் நடைபெறுகிறது பாடைக்காவடித் திருவிழா.
பாடைக்காவடியுடன் ரதக்காவடி, அலகுக்காவடி, பக்க அலகுக்காவடி, பால் அலகுக்காவடி என ஊரே அமர்க்களப்படும். மாலை செடல் சுற்றும் நிகழ்ச்சியும் நடைபெறும்.
ஆடி மாதத்தில் செவ்வாய், வெள்ளி என்றில்லாமல் எல்லா நாளும் அம்மனைத் தரிசிக்க, எங்கிருந்தெல்லாமோ வந்து பிரார்த்திப்பார்கள் பக்தர்கள். ஒரேயொரு முறை அம்மனை கண்ணாரத் தரிசித்து, மனதாரப் பிரார்த்தித்தால் தீராத நோயையும் தீர்த்தருள்வாள் பாடகட்டி மாரியம்மன்!
No comments:
Post a Comment