மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ஒரு மகத்தான மனிதர். என் மீது எப்போதுமே அவருக்குத் தனி பிரியம் உண்டு. கால்ஷீட் பிரச்னை காரணமாக, எம்.ஜி.ஆர் படங்களில் ஷூட்டிங்குகளுக்கு நான் கால தாமதமாகச் சென்றது உண்டு. அது போன்ற சமயங்களில், என் இக்கட்டைப் புரிந்துகொண்டு, டைரக்டரிடம், 'மற்ற காட்சிகளை எடுத்துக்கொண்டு இருங்கள். நாகேஷ் வந்தவுடன், அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்துக் கொள்ளலாம்' என்று சொல்லிவிடுவார். ஆகவே, நான் தாமதமாகப் போனாலும் எம்.ஜி.ஆர் படங்களைப் பொருத்தவரையில் ஷூட்டிங் தடைபடாது.
எம்.ஜி.ஆரின் தாராளமான உதவும் மனப்பான்மையால், நானும் கூட பயனடைந்திருக்கிறேன். சிவாஜி நடிக்க அவரது ஆடிட்டர்கள் (என்ற நினைவு) 'சித்ரா பௌர்ணமி' என்று ஒரு படம் எடுத்தார்கள். படத்தின் ஷூட்டிங்கை காஷ்மீரில் வைத்துக் கொண்டார்கள். படத்தில் ஒரு ஸ்பெஷல் குதிரை வரும். அதைகூட காஷ்மீருக்கு அழைத்துக்கொண்டு வந்தார்கள்.
காஷ்மீருக்கு ஷூட்டிங்குக்குப் போய் விட்டார்களே ஒழிய, பணத் தட்டுப்பாடு ஏற்பட்டது. சாதாரண ஹோட்டலில்தான் எங்களையெல்லாம் தங்க வைத்தார்கள். கிடைத்ததைச் சாப்பிட்டுக்கொண்டு, அட்ஜஸ்ட் செய்துகொண்டு, ஒத்துழைப்புத் தரும்படி கேட்டுக்கொண்டார்கள் படப் பிடிப்பு வேகமாக நடைபெற முடியாதபடிக்கு இயற்கைகூட சதி செய்தது.
எந்த இடம் என்று முன்கூட்டியே திட்டமிட்டுக்கொண்டு, படப்பிடிப்புக் குழுவினர் போய் இறங்குவார்கள். ஆனால், அங்கே பனி பொழிந்து, போதிய வெளிச்சம் இல்லாமல் படப்பிடிப்புக்குத் தடங்கல் ஏற்படும். இப்படியே நாள்கள் நகர்ந்து கொண்டிருந்தன.
அந்தச் சமயத்தில், வேறு ஒரு தமிழ்ப் படத்தின் ஷூட்டிங்கும் காஷ்மீரில் நடந்தது. படத்தின் ஹீரோ எம்.ஜி.ஆர். எங்கள் படத்தின் நிலைமைக்கு நேர் எதிரான சூழ்நிலை அங்கே நிலவியது. எம்.ஜி.ஆர் படத்தின் ஷூட்டிங் லொகேஷன்களில் எந்த பிரச்சனையும் கிடையாது. மடமடவென்று ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தது. யூனிட்டில் அனைவருக்கும் வாய்க்கு ருசியாக சாப்பாடு, குளிருக்குப் போட்டுக்கொள்ள, எம்.ஜி.ஆர் தமது சொந்தச் செலவில் எல்லோருக்கும் வாங்கிக் கொடுத்த ஸ்வெட்டர், ஷூ என்று ஒரே அமர்க்களம்தான்!
இந்தத் தகவல்களை எல்லாம் கேள்விப்பட்ட எங்கள் யூனிட் ஆட்கள் விட்ட ஏக்கப் பெருமூச்சில், காஷ்மீர் பனியே கரைந்திருக்கும்.
ஒருநாள் காலை, நான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு ஒரு பெரிய கார் வந்தது. அதிலிருந்து இறங்கியவர் யார் தெரியுமா? சாட்சாத் எம்.ஜி.ஆரே தான். ரிசப்ஷனில் விசாரித்துக்கொண்டு, நேரே என் ரூமுக்கே வந்து விட்டார். எனக்கு இனிய அதிர்ச்சி!
எம்.ஜி.ஆரே 'இங்க நிலைமை கொஞ்சம் சரியில்லைன்னு கேள்விப்பட்டேன். உங்க வேலை முடிந்தவுடன், உடனடியாக ஊருக்குப் புறப்பட்டு விடுங்க! செலவுக்கு இதை வைத்துக் கொள்ளுங்க!' என்று பையிலிருந்து சில ருபாய் நோட்டுக்கட்டுகளை எடுத்து என் கையில் திணித்தார்.
எம்.ஜி.ஆரின் திடீர் வருகையால் ஏற்பட்ட இன்ப அதிர்ச்சியிலிருந்தே மீள முடியாமல் இருந்த எனக்கு அவரது இந்தச் செயல், பேரதிர்ச்சியையும், அதே நேரம் பெரும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.
எம்.ஜி.ஆர் விடைப்பெற்றுக்கொண்டு புறப்பட்டுப் போன பிறகு, அவர் என்னுடைய கைகளில் திணித்த ருபாய் நோட்டுக்களைப் பார்த்தேன். நூறு ரூபாய்க் கட்டுக்கள் மூன்று இருந்தன. அடேயப்பா! முப்பதாயிரம் ருபாய்!
நான், எம்.ஜி.ஆர் சம்பந்தப்படாத ஒரு படத்துக்காக, காஷ்மீருக்குப் போயிருக்கிறேன். என்னைத் தேடி வந்து எனக்குப் பணம் கொடுத்து உதவி செய்ய வேண்டும் என்கிற அவசியம் என்ன அவருக்கு! ஆனாலும், எனக்கு உதவி செய்தார் என்றால், அதற்க்கு அவரது தங்க மனதும் என் மீது அவர்கொண்டிருந்த அன்பும் தானே காரணம்?
- ' நான் நாகேஷ் ' என்ற நடிகர் நாகேஷ் எழுதிய
நூலிலிருந்து .
நூலிலிருந்து .
No comments:
Post a Comment