Sunday, August 27, 2017

நல்லது நடந்தால் அரசியல்வாதிகளுக்கு பிடிக்காது .

🌺🌺 
*ஈகோ யுத்தத்தில் ஜெயித்த செங்கோட்டையன்! பழைய நிலைக்கே திரும்பும் கல்வித்துறை?*-
கடந்த மூன்று மாதங்களாகப் பள்ளி கல்வித்துறை செயலாளருக்கும், கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையே பனிப்போர் நீடித்தது. உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் அதிகாரியை இடம் மாற்றம் செய்து, அவரது அதிகாரத்தைக் குறைத்ததன் மூலம் பள்ளிக்கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் ஜெயித்துவிட்டார். ஆனால், உதயச்சந்திரன் ஆரம்பித்து வைத்த கல்வித்துறையின் சீர்திருத்தங்கள் தொடக்கநிலையிலேயே இருக்கின்றன. இனி சீர்திருத்தங்கள் நடக்குமா? பள்ளிக்கல்வியில் மாற்றங்கள் நடக்குமா? மாணவர்களின் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
ஆரம்பத்தில் ஜெயலலிதாவின் தேர்தல் பணியின் சாரதியாகவும், இரண்டாம் நிலை தலைவராகவும், அதிமுக கட்சி தலைமை நிலைய செயலாளராகவும் இருந்து பவர்புல் மனிதராகச் செயல்பட்டு வந்தார் செங்கோட்டையன். 2011-ம் ஆண்டு ஆட்சி ஜெயலலிதா ஆட்சி அமைத்த போது வேளாண்துறை அமைச்சராகப் பதவி ஏற்றார். வேளாண் துறை சரியான பசையில்லாத துறையாக இருக்கிறது என்று வருத்தப்பட்ட போது வணிகவரித் துறை அமைச்சராக மாற்றப்பட்டார். ஆனால், செங்கோட்டையன் மீது அவரது மனைவியும், மகனும் நேரிடையாக ஜெயலலிதாவுடன் புகார் தெரிவிக்க, ஆறு மாத கால அளவில் முழுமையாக மாறி வர வேண்டும் என கண்டித்து அனுப்பி வைத்தார் ஜெயலலிதா. ஆனால், அவரது நடவடிக்கையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்று மீண்டும் ஜெயலலிதாவிடம் புகார் தெரிவிக்க, அமைச்சர் பதவியில் இருந்தும், தலைமை நிலைய செயலாளர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார் செங்கோட்டையன். அதன்பின்பு கட்சி பணியில் பெரிய அளவில் தலைகாட்டாமல் இருந்து வந்தார். இந்த நிலையில், ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின்பு, எடப்பாடி பழனிசாமியின் அமைச்சரவையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ஆனார்.
இவர் பதவியேற்றவுடன் தன்னுடைய பெயரை நிலைநிறுத்தும் வகையில், ஏற்கெனவே தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் மாற்றங்களைக் கொண்டுவந்த பெயர்பெற்ற உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்.,-ஐ பள்ளி கல்வித்துறையின் செயலாளராகக் கொண்டு வந்தார். கடந்த ஆறு மாதங்களாக தமிழ்நாட்டில் மற்ற துறையில் பெரிய அளவில் எந்தவிதமான செயல்பாடும் இல்லாதபோது பள்ளி கல்வித்துறையின் சார்பில் பலவிதமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வெளிச்சம் பாய்ச்சி வந்தார்கள். பள்ளிக்கல்விதுறையில் பல மாற்றங்களுக்கு உதயச்சந்திரன் பின்னணியில் செயல்பட, மக்களிடையே அறிவிப்பை வெளியிட்டு தனது பெயருக்கு பின் உள்ள களங்கத்தை துடைக்கும் முயற்சியில் வெற்றிபெற்றார் செங்கோட்டையன்.
உதயச்சந்திரன் பள்ளி ஆசிரியர்களிடம் பேசும்போது “கோட்டையில் இருந்து இரண்டு கண்கள் உங்களைக் கண்காணித்து வருகின்றன. ஆகையால், உங்களுக்கு எந்த பிரச்னை என்றாலும் என்னிடம் தயங்காமல் தெரிவியுங்கள்” என்று தெரிவித்து இருக்கிறார். இது ஆசிரியர்களிடையே புது உத்வேகத்தைக் கொடுத்தது. உதயச்சந்திரனின் செயல்பாடுகள் பள்ளி ஆசிரியர்களைத் தவிர, பொதுமக்களிடையேயும், எதிர்க்கட்சியினரிடையேயும் பாராட்டைப் பெற்றன. இந்தப் பாராட்டுகள் அமைச்சர் செங்கோட்டையன் மனதில் ஈகோவை உருவாக்கியது.
இதற்கிடையே பள்ளிக்கல்வித் துறையில் ஆசிரியர்கள் இடமாற்றத்தில் சில வழிமுறைகளைக் கொண்டு வந்தார் உதயச்சந்திரன். இந்த வழிமுறைகளின் அடிப்படையில் மட்டுமே ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்கப்பட்டது. நீண்டகாலமாக பணம் கைமாறுதல் மூலம் ஆசிரியர் இடமாறுதல் நிகழ்ந்து வந்தது. இதில் பெருந்தொகை கைமாறி எல்லாம் மட்டத்திலும் பாய்ந்து வந்தது. உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ். கல்வித்துறைக்கு வந்தபின்பு பணம் பாய்ச்சலில் தடை ஏற்பட்டது. கிடைத்தவரை லாபம் என்கிற நிலையில் தடையாக உள்ள உதயச்சந்திரனை துறையை மாற்றிட முடிவில் என்ற முனைப்பில் இருந்தார் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.
உதயச்சந்திரனை இரவோடு இரவாகத் துறையை மாற்றி விடலாம் என்று இட மாற்றக் கடிதத்தை தயார் செய்ய, இந்த விஷயம் கல்வித்துறையில் உள்ள இதர அதிகாரிகளுக்குத் தெரியவந்திருக்கிறது. இவர்கள் உடனே அமைச்சரைச் சந்தித்து உதயச்சந்திரனை இடம் மாற்றம் செய்ய வேண்டாம் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இதனால் இடமாற்றக் கடிதம் தயாராகியும் கிடப்பில் போடப்பட்டது. இந்த விஷயம் வெளியே கசிந்தவுடன் உதயச்சந்திரன் இடமாற்றம் செய்யக்கூடாது என்று அறிக்கை வெளியிட்டார் அன்புமணி ராமதாஸ். கூடவே, இரண்டு முறை செங்கோட்டையனை கல்வித்துறை மாற்றங்கள் குறித்து விவாதிக்க பொதுமேடைக்கு அழைப்பு விடுத்தார்.
காஞ்சிபுரம் ராமலிங்கம் ‘உயர்நீதிமன்றத்தில் பாடத்திட்டத்தை மாற்றி அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணியினை மேற்கொள்ளும் வரை இந்தக் குழுவில் இருந்து யாரையும் இடமாற்றம் செய்யக்கூடாது என்று உத்தரவிட வேண்டும்’ என்று வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் ‘பாடத்திட்டங்கள் வடிவமைக்கும் குழுவில் இருந்து யாரையும் மாற்றம் செய்யக்கூடாது’ என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்தத் தீர்ப்பில் பாடத்திட்டங்களை வடிவமைக்கும் குழுவில் யாரையும் மாற்றி அமைக்கக்கூடாது என்ற தீர்ப்பு அமைச்சருக்குத் சாதகமாய் அமைந்துவிட்டது. அந்தக் குழுவின் செயலாளராக உதயச்சந்திரனை நியமித்துவிட்டு பள்ளிக்கல்வி செயலாளர் பதவியில் மாற்றி இருக்கிறார்கள்.
கடந்த வாரம் பள்ளிக்கல்வி துறை சார்பில் பதினொன்றாம் வகுப்புக்கான மாதிரி வினாத்தாள் வெளியிட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் செங்கோட்டையனிடம் உதயச்சந்திரன் குறித்து கேள்விகேட்டபோது உடனே நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி விட்டார் செங்கோட்டையன். அந்தளவுக்கு வெறுப்பில் இருந்தவர் தகுந்த நேரத்துக்காகக் காத்துக்கொண்டிருந்திருக்கிறார்.
மூன்றுநாள்கள் விடுமுறை வருவதை முன்னிட்டு நள்ளிரவு நேரத்தில் அதிகாரகுறைப்புக்கான ஆணையைப் பிறப்பித்து இருக்கிறார்கள். இதன்மூலம் உச்சநீதிமன்றத்தை நாடவும் முடியாது. ஆசிரியர்கள் போராடவும் முடியாது. அமைச்சர் திட்டத்தை அறிவிப்பது எளிது. ஆனால், அதைச் செயல்படுத்தக்கூடிய செயலாளர் இருக்க வேண்டும். ஆனால் உதயச்சந்திரன் தலைமை அதிகாரியாக இருந்தவரைப் பாடத்திட்டங்கள் வடிமைப்புக்கு என்று எந்தவிதமான நிதியையும், அதிகாரத்தையும் கையாள முடியாத அதிகாரி நிலையான பணியை வழங்கி இருக்கிறார் செங்கோட்டையன்.
இரண்டு பேருக்கும் இடையே உள்ள ஈகோ யுத்தத்தில் செங்கோட்டையன் ஜெயித்து இருக்கிறார். மாற்றமே இல்லாமல் இருந்த பழைய நிலைக்கே திரும்புகிறது கல்வித்துறை. தற்போது விரக்தி நிலையில் இருக்கும் உதயச்சந்திரன் விடுமுறைக்குச் செல்ல விரும்புவதாக தலைமைச் செயலக அதிகாரிகள் தகவல் தெரிந்து இருக்கிறார்கள்.
நல்லது நடந்தால் அரசியல்வாதிகளுக்கு பிடிக்காது என்பதற்கு இதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும்.🎯

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...