Tuesday, August 27, 2019

ஏ.டி.எம்.,மில் 2 வது முறை பணம் எடுக்க வருகிறது... கட்டுப்பாடு?

வங்கி, ஏ.டி.எம்.,களில் நடைபெறும் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், அதை தடுப்பதற்காக, பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்துவது குறித்து, வங்கி அதிகாரிகள் மும்முரமாக ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். ஏ.டி.எம்.,களில், ஒரு முறை பணம் எடுத்த பிறகு, அடுத்த முறை பணம் எடுப்பதற்கு, 6 - 12 மணி நேர இடைவெளியை நிர்ணயிப்பது, 'ஒன் டைம் பாஸ்வேர்டு' அனுப்புவது போன்ற கட்டுப்பாடுகளை நிர்ணயிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும், ஏ.டி.எம்.,களில் மோசடி நடப்பது அதிகரித்து வருகிறது. புதிய வகை சாதனங்கள் மூலம், ஒருவர் பயன்படுத்திய, ஏ.டி.எம்., கார்டை போல, போலி கார்டுகளை தயாரித்து மோசடி செய்வது அதிகம் நடக்கிறது. இந்தக் குற்றத்தில், வெளிநாடுகளைச் சேர்ந்தோர், இங்கு வந்து ஈடுபடுகின்றனர்.ஏ.டி.எம்.,களில் மோசடி நடப்பது தொடர்பாக, 2018 - 19 நிதியாண்டில், 980 புகார்கள் வங்கிகளுக்கு வந்துள்ளன. இது, முந்தைய ஆண்டில், 911 ஆக இருந்தது. 


முதலிடம்


கடந்த, 2018 - 19 நிதியாண்டில், 233 புகார்களுடன், மஹாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. மொத்தம், 179, ஏ.டி.எம்., மோசடிகளுடன், தேசிய தலைநகர் டில்லி, இரண்டாவது இடத்தில் உள்ளது.இந்த, ஏ.டி.எம். மோசடிகளை தடுப்பது குறித்து, வங்கிகள், அவ்வப்போது ஆலோசனை நடத்தி, புதிய நடைமுறைகளை அறிமுகம் செய்து வருகின்றன.வழக்கமாக, வங்கிகளின் உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தி, பரிந்துரை அளிப்பர். 

ஆனால், கீழ் நிலையில் இருந்து மேல் நிலைக்கு ஆலோசனைகள், பரிந்துரைகள் அளிக்கும் வகையில், மாநில அளவில், வங்கி அதிகாரிகள் கூட்டங்கள் நடத்த, மத்திய நிதிச் சேவை துறை கூறியுள்ளது.அதன்படி, டில்லி மாநில வங்கியாளர்கள் குழுவின் கூட்டம், சமீபத்தில் நடந்தது. இதில், 18 வங்கிகளைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் பல்வேறு ஆலோசனைகளை, வங்கி அதிகாரிகள் அளித்துஉள்ளனர்.

இது குறித்து, கூட்டத்தில் பங்கேற்ற, வங்கி அதிகாரிகள் கூறியதாவது:ஏ.டி.எம்., மோசடிகளை தடுப்பது குறித்து, இந்தக் கூட்டத்தில் அதிகாரிகள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி உள்ளனர். பெரும்பாலான, ஏ.டி.எம்.,களில், நள்ளிரவு முதல் அதிகாலை நேரங்களில் தான், அதிக அளவு மோசடி நடக்கிறது. தற்போது, ஒரு முறை, அதிகபட்சம், 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடு உள்ளது. 


போலி கார்டு


அதனால், போலி கார்டுகள் மூலம் பணத்தை திருடுவோர், கார்டை பலமுறை பயன்படுத்தி, பணத்தை அள்ளி சென்று விடுகின்றனர். அதை தடுக்கும் வகையில், ஒருமுறை, ஏ.டி.எம்., கார்டை பயன்படுத்தினால், மற்றொரு முறை பயன்படுத்துவதற்கு, கால இடைவெளியை நிர்ணயிக்க வேண்டும். இந்த இடைவெளியை, ஆறு அல்லது, 12 மணி நேரமாக நிர்ணயிப்பது குறித்து பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தற்போது, 'டெபிட்' அல்லது 'கிரெடிட்' கார்டுகள் மூலம், இணையதள பரிவர்த்தனை செய்யும் போது, 'ஒன் டைம் பாஸ்வேர்டு' எனப்படும், ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் ரகசிய குறியீடு, வங்கியில் கணக்கு வைத்துள்ளவரின், மொபைல்போனுக்கு அனுப்பப்படுகிறது. அந்த எண்ணை பதிவிட்டே, அந்த பரிவர்த்தனையை அவர் செய்ய முடியும். இது போன்ற வசதியை, ஏ.டி.எம்., பரிவர்த்தனைக்கும் அறிமுகம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதைத் தவிர, ஏ.டி.எம்., மையங்கள் கண்காணிப்பை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. ஏ.டி.எம்., மையங்களில், சி.சி.டி.வி., கேமராக்களுடன், வாடிக்கையாளர் களுக்கு உத்தரவுகளை பிறப்பிக்கும், 'மைக்' வசதியும் செய்ய வேண்டும்.



கண்காணிப்பு



இதன் மூலம், ஒருவர், ஹெல்மெட்டுடன் உள்ளே வந்தால், அதை கழற்றும்படி உத்தரவிட முடியும். ஏ.டி.எம்., மையத்தின் காவலாளிகள் இல்லாதபோது அல்லது உறங்கிவிட்டாலும், அந்த மையத்தை கண்காணிக்க முடியும். மேலும், அனைத்து ஏ.டி.எம்., மையங்களையும், வங்கியின் தலைமை அலுவலகத்தில் இருந்து கண்காணிக்கும் வசதியும் ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு கண்காணிப்பு அதிகரித்தால், காவலாளிகளின் தேவை குறையும். இதற்காகும் செலவை, வங்கிகள் சேமிக்க முடியும். அதைத் தவிர, மோசடிகளையும் தவிர்க்க முடியும். இந்தக் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்த இறுதி முடிவை, ரிசர்வ் வங்கியுடன் இணைந்து, மத்திய நிதி அமைச்சகம் எடுக்கும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...