காஷ்மீரில் நிலவும் சூழ்நிலையை பார்வையிட சென்ற ராகுல் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள், ஸ்ரீநகரில் இருந்து டில்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
காஷ்மீரில் 370 பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு பல இடங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. காங்., எம்.பி., ராகுல், குலாம் நபி ஆசாத், டி.ராஜா, திருச்சி சிவா, சரத் யாதவ், மனோஜ் ஜா, உள்ளிட்ட 12 பேர் அடங்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் குழு, இன்று (ஆக.,24) காஷ்மீர் செல்ல உள்ளதாக அறிவித்தனர். காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நேரில் ஆய்வு செய்வதுடன், அம்மாநில மக்களை நேரில் சந்திக்க உள்ளதாகவும் அவர்கள் கூறி இருந்தனர்.
கோரிக்கை
அரசியல் கட்சி தலைவர்கள் யாரும் காஷ்மீருக்கு வர வேண்டாம் என அம்மாநில அரசு கேட்டுக் கொண்டிருந்தது. காஷ்மீரில் சில இடங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் அரசியல் கட்சி தலைவர்களின் வருகை காஷ்மீரில் உள்ள அமைதியையும், இயல்பு வாழ்க்கையையும் சீர்குலைக்கும் எனவும் காஷ்மீர் அரசு தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சி தலைவர்கள் வருகையை தொடர்ந்து, ஸ்ரீநகர் விமான நிலையத்தில் துணை ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர்.
திருப்பி அனுப்பல்
தொடர்ந்து, எதிர்க்கட்சி தலைவர்கள் விமானம் மூலம் ஸ்ரீநகர் விமான நிலையம் வந்தனர். ஆனால், விமான நிலையத்தை விட்டு வெளியே வர காஷ்மீர் நிர்வாகம் அனுமதிக்கவில்லை. அங்கிருந்தே, டில்லிக்கு விமானம் மூலம் திருப்பி அனுப்பப்பட்டனர்.
No comments:
Post a Comment