Monday, October 21, 2019

" மருதமலை "

கோயமுத்தூர் நகரில், மேற்குத் தொடர்ச்சி மலையின் சரிவில் மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. மருதமரங்கள் மிகுதியாக காணப்படுவதன் காரணமாக இந்த பகுதி மருதமலை என்று அழைக்கப்படுகிறது. 1200 ஆண்டுகள் பழமைவாய்ந்த இத்திருக்கோயில் முருகப்பெருமானின் ஏழாம் படை வீடாகக் கருதப்படுகிறது. பேரூர் புராணம், திருப்புகழ் மற்றும் காஞ்சிப் புராணங்களில் மருதமலை சிறப்பித்து கூறப்பட்டுள்ளது. மருதமலை சுப்பிரமணிய சுவாமி மருதாசலபதி, மருதப்பன், மருதமலையான், மருதமலை முருகன், மருதாசலமூர்த்தி என பல பெயர்களால் போற்றித் துதிக்கப்படுகிறார். முன்னொரு காலத்தில் முருக பக்தரான சித்தர் ஒருவர் இப்பகுதிக்கு வருகை தந்தார். அவர் களைப்பாலும், தாகத்தாலும் சோர்வடைந்து அங்கிருந்த மருத
மரம் ஒன்றின் கீழ் அமர்ந்து இளைப்பாறினார். அச்சமயத்தில் மருதமரத்தின் கீழ்ப்பகுதியில் ஊற்று நீர் பீறிட்டது.
இதைக்கண்ட சித்தர் இது முருகப்பெருமானின் அருளே என்று வியந்து முருகப்பெருமானை ‘மருதம் சலம் ஆகியவற்றின் தலைவா’ என்று வாழ்த்திப் பாடியதாகவும், அதுவே பின்னர் மருதாசலபதி என்று மருவி அழைக்கப்படுவதாகவும் செவிவழிச் செய்தி நிலவுகிறது. மலையடிவாரத்தின் படிக்கட்டுப் பாதை தொடக்கத்தில் தான்தோன்றி விநாயகர் சந்நதி அமைந்துள்ளது. இந்த விநாயகரின் அமைப்பு மிகவும் வித்தியாசமானது மற்றும் அழகானது. இதுபோன்ற விநாயகப்பெருமானை வேறு எந்த தலத்திலும் தரிசிக்க இயலாது. தான்தோன்றி விநாயகரை வழிபட்டு மலையேறினால் 18 படிகளைக் கொண்ட ‘பதினெட்டு படி’ உள்ளது. சபரிமலைக்குச் சென்று அய்யப்பனை வழிபட இயலாதவர்கள் இந்த பதினெட்டாம் படிக்கு வந்து வணங்குகிறார்கள். மருதமலை முருகன் கோயிலுக்குப் படிக்கட்டுகளின் வழியாகச் செல்லும்போது இடும்பனுக்கென அமைந்துள்ள தனி சந்நதியைக் காணலாம்.
இந்த இடும்பனை வணங்கினால் குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். ஒரே பிராகாரத்துடன் அமைந்துள்ள இத்திருக்கோயிலில் மகாமண்டபம், அர்த்தமண்டபம், கருவறை என முறைப்படி அமைந்துள்ளன. கருவறையில் அழகே வடிவாக முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்புரிகிறார். கருவறைக்கு முன்னால் முருகப்பெருமானை நோக்கியவண்ணம் அவருடைய வாகனம் மயில் நின்றிருக்கிறது. அதற்குப் பின்னால் பலிபீடமும் கொடிமரமும் அமைந்துள்ளன. இதன் அருகே தனி சந்நதியில் வலம்புரி விநாயகர் அருட்பாலிக்கிறார். மருதமலை கோயிலில் ஆதிமூலஸ்தானம் அமைந்துள்ளது. இங்கு வள்ளிதெய்வானையோடு அருள்புரியும் முருகப்பெருமானை முதலில் வழிபட்டு பின்னர் பஞ்சமுக விநாயகரை தரிசித்து அதன் பிறகு மூலவரை வணங்க வேண்டும்; பின்னர் பட்டீஸ்வரர், மரகதாம்பிகை, வரதராஜப் பெருமாள், நவகிரக சந்நதி என வழிபட வேண்டும்;
இதைத் தொடர்ந்து பாம்பாட்டி சித்தர் சந்நதிக்குச் சென்று அவரை வணங்கிவிட்டு பின்பு சப்தகன்னியரை வழிபட வேண்டும் என்பது மரபு. மருதமலைக் கோயிலின் தென்புறத்தில் அமைந்துள்ள படிக்கட்டுகள் வழியாக கீழே இறங்கி கிழக்கு திசை நோக்கிச் சென்றால் அப்பகுதியில் பாம்பாட்டி சித்தர் சந்நதியைக் காணலாம். இத்திருக்கோயிலில் அமைந்துள்ள சப்தகன்னியர் சந்நதிக்குப் பின்புறம் வற்றாத ஊற்று ஒன்று அமைந்துள்ளது. எப்போதும் நீர் சுரந்து கொண்டேயிருக்கும் இந்த ஊற்றுத் தண்ணீரைக் கொண்டு தான் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. மருதமலை முருகன் கோயிலில் உள்ள விநாயகர் சந்நதியின் பின்புறத்தில் ஒன்றாக பின்னிப் பிணைந்தபடி பழமையான ஐந்து மரங்களைக் காணலாம். இதனை ‘பஞ்ச விருட்சம்’ என்றழைக்கிறார்கள். அதிசயமான இந்த மரத்தில் குழந்தை வரத்துக்காக வேண்டிக்கொள்ளும் பெண்கள் தொட்டில் கட்டுகின்றனர். இத்திருக்கோயிலில் பதினாறரை அடி உயரம் கொண்ட தங்கத்தேர் உள்ளது. தினமும் மாலை ஆறு மணிக்கு கோயிலில் இந்தத் தங்கத்தேர் புறப்பாடு நடைபெறுகிறது.
இத்தலத்தின் தீர்த்தம் மருதத்தீர்த்தம், தலவிருட்சம் மருத மரம். நீண்டகாலமாக திருமணம் கைகூடாமல் இருப்பவர்கள் இத்திருக்கோயிலுக்கு வந்து சுவாமிக்கு பொட்டுத்தாலி, வஸ்திரம் போன்றவற்றை சமர்ப்பித்து கல்யாண உற்சவத்தை நடத்தினால் விரைவில் முருகப்பெருமான் அருளால் திருமணம் கைகூடும். மேலும் குழந்தைப் பேறு இல்லாதவர்கள் தம்பதி சமேதராய் இக்கோயிலுக்கு தொடர்ந்து ஐந்து வெள்ளிக்கிழமைகள் வந்து வழிபாடு செய்தால் குழந்தைப் பேறு வாய்க்கும் என்பதும் பக்தர்களின் அனுபவ உண்மை. இத்திருத்தலத்தில் தினசரி காலை ஐந்து மணிக்கு கோ பூஜை, பிறகு 5.30 மணிக்கு நடைத்திறப்பு. காலை 6.00 மணிக்கு இரண்டாம் கால பூஜை, 8.30 முதல் 9.00 மணி வரை காலசந்தி பூஜை, 11.30 முதல் 12.00 மணி வரை உச்சிக்கால பூஜை, மாலை 4.30 முதல் 5.00 மணி வரை சாயரட்சை பூஜை, இரவு 8.00 மணி முதல் 8.30 மணி வரை இராக்கால பூஜை என நடைபெறுகின்றன.
ஆண்டு முழுவதும் முருகப்பெருமானுக்குரிய விழாக்கள் இத்திருக்கோயிலில் வெகுசிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. சித்திரை மாதத்தில் தமிழ் வருடப் பிறப்பு, வைகாசி மாதத்தில் வைகாசி விசாகம், ஆடி மாதத்தில் ஆடிக்கிருத்திகை மற்றும் ஆடி பதினெட்டு, ஆவணியில் விநாயக சதுர்த்தி, புரட்டாசியில் நவராத்திரி, ஐப்பசியில் கந்தசஷ்டி, சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாணம் என விழாக்கள் வெகுசிறப்பாக நடைபெறுகின்றன. கார்த்திகை தீபம், ஆங்கிலப் புத்தாண்டு, தைப்பூச விழா, வள்ளிதெய்வானை திருக்கல்யாணம் மற்றும் பங்குனி உத்திரம் போன்ற நிகழ்ச்சிகளும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. இத்திருக்கோயில் காலை ஐந்தரை மணிமுதல் இரவு ஒன்பது மணி வரை திறந்திருக்கும்.
மதியம் ஒரு மணி முதல் இரண்டு மணி வரை நடை சாத்தப்படுகிறது. கிருத்திகை மற்றும் முக்கியமான விழா நாட்களில் கோயில் காலை முதல் இரவுவரை தொடர்ந்து திறந்திருக்கும். கோவையிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் மருதமலை அமைந்துள்ளது. கோவை காந்திபுரம் பேருந்து நிலையம். உக்கடம், டவுன்ஹால், சிங்காநல்லூர், ஈச்சனாரி போன்ற பல பகுதியிலிருந்தும் மருதமலைக்கு நகரப் பேருந்துகளும், மலை அடிவாரத்திலிருந்து மேலே கோயிலை அடைய கோயில் நிர்வாகம் சார்பில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. படிக்கட்டுகள் ஏறியும் மலைக்கோயிலை அடையலாம். மலைப்பாதையில் ஏறிச் செல்லுவோர் இளைப்பாறுவதற்காக வழியில் மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...