திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே கரூர் பைபாஸ் சாலையில் பிரபல நகைக்கடையான லலிதா ஜூவல்லரி உள்ளது. நேற்றிரவு பணி முடிந்ததும் ஊழியர்கள் கடையை அடைத்துவிட்டு சென்றனர்.
இதன்பின்னர் இரவு காவலாளிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இன்று காலை பணிக்கு வந்த ஊழியர்கள் கடையின் ஷட்டரை திறந்து உள்ளே சென்றனர்.
அப்போது அவர்கள் கண்ட காட்சி அதிர்ச்சியடைய செய்தது. கடையின் கீழ்தளத்தில் வைக்கப்பட்டிருந்த அனைத்து நகைகளும் கொள்ளை போயிருந்தது.
ரேக்குகளில் அடுக்கி வைத்திருந்த நகைகள் அனைத்தும் துடைத்து வைத்தது போல் ஒரு நகை கூட இல்லாமல் மாயமாகி இருந்தது.
இதுகுறித்து கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அமல் ராஜ், துணை கமிஷனர் மயில்வாகனன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
கடையின் கீழ் தளத்தில் இடதுபுறத்தில் ஒரு நபர் நுழையும் அளவுக்கு துளையிடப்பட்டு இருந்தது. நேற்று இரவு ஊழியர்கள் கடையை பூட்டி விட்டு சென்றதும் மர்ம நபர்கள் சுவரில் துளை போட்டு நுழைந்து நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. கைரேகை நிபுணர்கள் கைரேகைகள் மற்றும் தடயங்களை பதிவு செய்தனர்.
கீழ்தளத்தில் இருந்த 100 கிலோ எடையுள்ள தங்கம், வெள்ளி மற்றும் வைர நகைகள் அனைத்தும் கொள்ளை போயிருந்தது. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.50 கோடிக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.
தொடர்ந்து கொள்ளை போன நகைகள் குறித்து கடை ஊழியர்கள் மூலம் கணக்கெடுக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.
லலிதா ஜூவல்லரி அமைந்துள்ள இடம் எப்போதும் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாகும். 24 மணி நேரமும் அங்கு ஆட்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும். அருகில் ஏராளமான வணிக நிறுவனங்கள், நகைக்கடைகள் இயங்கி வருகின்றன. அங்கும் இரவு நேர காவலாளிகள் பணியில் இருந்து வருகிறார்கள்.
அப்படி இருந்தும் நள்ளிரவில் மர்ம நபர்கள் சுவரில் துளையிட்டு நகைக்கடைக்குள் புகுந்து தங்களது கொள்ளையை கச்சிதமாக அரங்கேற்றி உள்ளனர்.
இந்த கொள்ளையில் நகைக்கடை ஊழியர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நேற்று இரவு அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலாளிகளிடம் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
ஒட்டுமொத்தமாக நகைகளை கொள்ளையடித்து சென்றதால் கைதேர்ந்த வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அவர்களை பிடிக்க மாநிலம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.
கடையில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளும், அருகிலுள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராக்களில் பதிவான காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
கொள்ளை சம்பவம் குறித்து திருச்சி மாவட்ட எஸ்.பி. ஜியாவுல் ஹக் கூறியதாவது:-
கடந்த ஆண்டு திருச்சி நெ.1 டோல்கேட் பகுதியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் மர்ம நபர்கள் சுவரில் துளை போட்டு லாக்கரில் இருந்த ரூ.5 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
அந்த சம்பவமும், லலிதா ஜூவல்லரியில் நடந்த சம்பவமும் ஒத்துப்போகும் வகையில் உள்ளது. எனவே அதில் ஈடுபட்ட நபர்கள் இந்த கொள்ளையிலும் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகப்படுகிறோம். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில் கொள்ளையர்களை பிடித்து விடுவோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment