விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டசபை தொகுதி வாக்காளர்கள், நேற்று சுறுசுறுப்பாக ஓட்டளித்தனர். இரு தொகுதிகளிலும் நடந்த இடைத்தேர்தல், அசம்பாவிதம் ஏதுமின்றி அமைதியாக முடிந்தது. விக்கிரவாண்டியில், 84.36 சதவீதம், நாங்குநேரியில், 66.10 சதவீதம் ஓட்டுப்பதிவு நடந்துள்ளது.
தமிழகத்தில் காலியாக இருந்த, விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டசபை தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள காமராஜ் நகர் சட்டசபை தொகுதிக்கும், நேற்று இடைத்தேர்தல் நடந்தது.விக்கிரவாண்டி தொகுதியில், 2.23 லட்சம் வாக்காளர்கள் ஓட்டளிக்க வசதியாக, 139 இடங்களில், 275 ஓட்டுச்சாவடிகள்; நாங்குநேரி தொகுதியில், 2.57 லட்சம் வாக்காளர்கள் ஓட்டளிக்க, 170 இடங்களில், 299 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
கண்காணிப்பு
இரு தொகுதிகளிலும், தேர்தல் அமைதியாக நடக்க, அனைத்து ஏற்பாடுகளையும், தேர்தல் ஆணையம் செய்திருந்தது.விக்கிரவாண்டி தொகுதியில், 275 ஓட்டுச் சாவடிகளிலும், நாங்குநேரியில், 295 ஓட்டுச் சாவடிகளிலும், 'வெப் கேமரா' பொருத்தப்பட்டு, ஓட்டுப்பதிவு கண்காணிக்கப்பட்டது.இரு தொகுதிகளிலும், தி.மு.க., - அ.தி.மு.க., மற்றும் காங்கிரஸ் தரப்பில், வாக்காளர்களுக்கு பணத்தை வாரி இறைத்திருந்தனர்.ஓட்டுக்கு, 2,000 ரூபாய் வரை வழங்கப்பட்டதாக தெரிகிறது. எனவே, ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. இடைத்தேர்தல் தொகுதிகளில், நேற்று காலை, 7:00 மணிக்கு, ஓட்டுப்பதிவு துவங்கியது.ஓட்டுச்சாவடிகளில், காலை முதல் வரிசையில் நின்று, வாக்காளர்கள் சுறுசுறுப்புடனும், ஆர்வமுடனும் ஓட்டளித்தனர்.காலை, 9:00 மணிக்கு, விக்கிரவாண்டியில், 12.84 சதவீதம், நாங்குநேரியில், 18.41 சதவீதம் ஓட்டுகள் பதிவாகின.
நிறைவடைந்தது
காலை, 11:00 மணிக்கு, விக்கிரவாண்டியில், 32.54 சதவீதம்; நாங்குநேரியில், 23.89 சதவீதம்; பகல், 1:00 மணிக்கு, விக்கிரவாண்டியில், 54.17; நாங்குநேரியில், 41.35; மாலை, 3:00 மணிக்கு, விக்கிரவாண்டியில், 65.79; நாங்குநேரியில், 52.18 சதவீத ஓட்டுகள் பதிவாகின.மாலை, 5:00 மணிக்கு, விக்கிரவாண்டியில், 76.41 சதவீதம், நாங்குநேரியில், 62.32 சதவீதம் ஓட்டுகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது. மாலை, 6:00 மணிக்கு, ஓட்டுப்பதிவு நிறைவடைந்தது.அதன் பின்னரும், சில ஓட்டுச்சாவடிகளில், மக்கள் வரிசையில் நின்றனர். அவர்கள் ஓட்டுப் போட வசதியாக, 'டோக்கன்' வழங்கப்பட்டு, கதவுகள் மூடப்பட்டன. அதன்பின், யாரும் அனுமதிக்கப்படவில்லை.
24-ல் எண்ணிக்கை
புதுச்சேரி காமராஜ் நகரில், மொத்தம், 69.44 சதவீதம் ஓட்டுகள் பதிவாகின. விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதியில், மாலை, 6:00 மணிக்கு மேல், டோக்கன் வழங்கப்பட்டவர்கள் மட்டும், ஓட்டளிக்க அனுமதிக்கப்பட்டனர். ஓட்டுப்பதிவு நிறைவடைந்ததும். ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 'சீல்' வைக்கப்பட்டு, ஓட்டு எண்ணும் மையத்திற்கு, பாதுகாப்பாக எடுத்து செல்லப்பட்டன. ஓட்டு எண்ணிக்கை, வரும், 24ம் தேதி நடக்க உள்ளது.இடைத்தேர்தல் குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹு கூறியதாவது:
விக்கிரவாண்டியில், 84.36 சதவீதம், நாங்குநேரியில், 66.10 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி உள்ளன. 2016 சட்டசபை தேர்தலில், விக்கிரவாண்டியில், 81.28 சதவீதம், நாங்குநேரியில், 71.92 சதவீதம் ஓட்டுகள் பதிவாகின.விக்கிரவாண்டியில், கடந்த முறையை விட, இம்முறை ஓட்டுப்பதிவு அதிகரித்துள்ளது; நாங்குநேரியில் குறைந்துள்ளது. நேற்று பயன்படுத்தப்பட்ட, ஓட்டுப்பதிவு இயந்திரங்களில், 4 சதவீதம் பழுது ஏற்பட்டது; அவையும் உடனுக்குடன் சரி செய்யப்பட்டன.
வழக்கு
தேர்தல் விதிகளை மீறி, தொகுதிக்குள் வந்ததால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், இந்திய தண்டனை சட்டம் ஆகியவற்றின் கீழ், வசந்தகுமார் எம்.பி., மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஓட்டுப்பதிவு சுதந்திரமாக, நேர்மையாக நடக்க, தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தோம். ஓட்டு எண்ணிக்கை வரை, ஓட்டுப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைக்க, அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment