Tuesday, October 1, 2019

எல்லாம்_அறிந்தவன் ..

கோயிலுக்கு சென்றிருந்தனர் குருவும் சிஷ்யனும்.
இறைவனை வழிபட்டுவிட்டு, கோயிலை வலம் வந்து, அதன் பின்னர் கொடிமரத்தை சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிட்டு, சம்பிரதாயப்படி கோயில் பிரகாரத்தில் சற்று நேரம் அமர்ந்திருந்தனர்.
“இறைவனிடம் என்ன வேண்டிக்கொண்டாய்?” என்று சிஷ்யனிடம் கேட்டார் குரு.
“நீங்கள் நலமாக இருக்க வேண்டும்.. நான் நலமாக இருக்க வேண்டும்.. இந்த உலகம் நலமாக இருக்க வேண்டும்.. இதைத்தான் வேண்டிக்கொண்டேன் குருவே..” என்றான் சிஷ்யன்.
“அப்படியா..” என குரு சொல்லிக்கொண்டிருந்தபோதே, ஒரு வயதானவரும் ஓர் இளைஞனும் அவர்களுக்குள் ஏதோ பேசியபடியே அருகே வந்து அமர்ந்தார்கள்.
குருவுக்கும் சீடனுக்கும் நடந்த உரையாடல் தடைபட்டது. இருவரும், வந்தமர்ந்த நபர்களின் உரையாடலை கவனிக்கத் தொடங்கினார்கள்.
அந்த முதியவர் உடன் இருந்த இளைஞனை நோக்கி, “கடவுள்கிட்டே என்ன வேண்டிக்கிட்டே?” என்று கேட்டார்.
சற்று நேரத்துக்கு முன்பு குரு தன்னிடம் கேட்ட அதே கேள்வியை இந்தப் பெரியவர் கேட்கிறாரே என மனதுக்குள் நினைத்துக்கொண்டான் சிஷ்யன். தன் வியப்பை பார்வையினால் குருவுக்குத் தெரியப்படுத்தினான். புன்னகைத்துக்கொண்டார் குருநாதர்.
“வேறென்ன.. நாளைக்கு நான் வேலை கேட்டுப் போற அலுவலகத்துல நிச்சயம் எனக்கு வேலை கிடைக்கணும்னுதான் வேண்டிக்கிட்டேன்..” என்றான் அந்த இளைஞன்.
“வேலை கிடைச்சிடுச்சுன்னா ஏதாவது காணிக்கை செலுத்துறேன்னு வேண்டிக்கிட்டியா?” என்று மறுபடியும் கேட்டார் அந்த முதியவர்.
“ஆமா. நாளைக்கே எனக்கு வேலை கிடைச்சுட்டா முதல் மாச சம்பளத்தில் ஒரு வேல் வாங்கி காணிக்கையா செலுத்துறேன்னும் வேண்டிக்கிட்டேன்..” என பதில் சொன்னான் அந்த இளைஞன்.
“ஒன்னைக் கொடுத்து இன்னொன்னை வாங்கினா அதுக்குப் பேரு வியாபாரம். நீ கொடுத்தாத்தான் நான் கொடுப்பேன்னு சொன்னா அது வியாபாரத்துக்காக செய்யும் பேரத்துக்குச் சமம். தப்புப்பா அது..” என்றார் முதியவர்.
“வாயுள்ள பிள்ளைதானே பிழைக்கும். நமக்கு வேண்டியதை நாமதானே சாமிகிட்ட கேட்டு வாங்கிக்கணும். அதெப்படி தப்பாகும்?” என்று கேட்டான் இளைஞன்.
“எல்லாம் அறிஞ்சவன் கடவுள். அதனாலதானே நாம கோயிலுக்கு வர்றோம். சாமி கும்புடறோம். எல்லாத்தையும் தெரிஞ்சு வெச்சிருக்கும் கடவுளுக்கு, நமக்கு என்ன தேவைங்குறது தெரியாமப்போயிடுமா என்ன?!”.
முதியவர் கேட்டதன் அர்த்தம் அந்த இளைஞனுக்குப் புரிந்ததோ இல்லையோ, சிஷ்யனுக்கு நன்றாகவே புரிந்தது.
“எந்தக் குழந்தையும் பசிக்கிறதுன்னு தாய்கிட்ட கேட்கிறதில்லை. ஆனா, குழந்தைக்கு பசி வந்துட்டா அது தாய்க்குத் தெரிஞ்சுடும். அதுதான் தாயன்பு. ஆண்டவன் நமக்கு காட்டுறதும் அதே அன்புதான்..” என்றபடியே எழுந்து நடந்தார் அந்த முதியவர்.
“புரிகிறது அய்யா..” என்றபடியே உடன் நடந்தான் அந்த இளைஞனும்.
குருவை ஒரு கணம் பார்த்துப் புன்னகைத்துக்கொண்டான் சிஷ்யன். அடுத்த கணம்.. அந்த முதியவர் சென்ற திசை நோக்கி தன் குரு வணக்கத்தைச் செலுத்திக்கொண்டான்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...