வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி முன்னாள் அதிமுக எம்.பி., கே.என்.ராமச்சந்திரனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை வழங்கி, சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஸ்ரீபெரும்புதுார் மக்களவை தொகுதி அதிமுக எம்.பி.,யாக, அ.தி.மு.க.,வை சேர்ந்த, கே.என்.ராமச்சந்திரன், 2014 முதல், 2019 வரை இருந்தார். கண்ணம்மாள் கல்வி அறக்கட்டளையின், அறங்காவலராக உள்ள இவர், அதன் கீழ் செயல்படும், சக்தி மாரியம்மன் இன்ஜினியரிங் கல்லுாரி விரிவாக்கத்திற்கு கடன் பெற, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் விண்ணப்பித்தார். கல்லுாரி தலைவராக, ராமச்சந்திரன் மகன் ராஜசேகரன் உள்ளார்.
அப்போது, வங்கி மேலாளராக இருந்த தியாகராஜன், விண்ணப்பத்தை முறையாக கையாளாமல், 20 கோடி ரூபாய் கடன் வழங்கினார். இதற்கு லஞ்சமாக, தியாகராஜன் குடும்பம், அமெரிக்கா சென்று வருவதற்கான, விமான கட்டணம் 2.69 லட்சம் ரூபாயை, அறக்கட்டளையில் இருந்து, ராமச்சந்திரன் செலுத்தினார். இது தொடர்பாக, 2015ல், வங்கி மேலாளர் தியாகராஜன், ராஜசேகரன், ராமச்சந்திரன் ஆகியோர் மீது, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கு விசாரணை, சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள, எம்.பி., எம்.எல்.ஏ.,க்களுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி, டி.லிங்கேஸ்வரன் முன் நடந்து வந்தது. இரு தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், இன்று (மார்ச் 5) தீர்ப்பு வழங்கிய நீதிபதி, கே.என்.ராமச்சந்திரன் மற்றும் மகன் ராஜசேகரனுக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், மேலாளர் தியாகராஜனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கி உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment