தாராளமாக முடியும்! எங்கேனும் குருவிக் கூடு, பாம்புப் புற்றிருந்தால் அதனால் யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லையெனில் இடிக்காதீர்கள். நிழல் கொடுக்கும் மரங்களை வெட்டுவதற்கு முன்பு யோசியுங்கள். அரசு இடத்தை தந்திரமாக வளைக்கும்போது இராகு உங்களை வளைப்பார். இ ராகுவும் கேதுவும் பாட்டன் பாட்டிக்கு உரித்தான கிரகங்கள் ஆதலால் முன்னோர்களின் சொத்துக்களையோ, அவர்கள் வாழ்ந்த வீடுகளையோ நியாயமில்லாமல் விற்க வேண்டாம். முக்கியமாக கேதுவின் அருளைப்பெற வேண்டுமெனில் கோயில் சொத்துகளைத் தொடக்கூடாது. கற்றுக் கொடுத்த குருவை மதிக்க வேண்டும். புண்ணிய தீர்த்தங்களை மாசுபடுத்தக் கூடாது. பரம்பரையாக வணங்கி வந்த குலதெய்வம் மற்றும் கிராம தேவதைகளின் வழிபாடுகளைத் தொடருங்கள். கருமியாக இருக்காமல் கருணை வள்ளலாக இருங்கள். பிறன்மனை நோக்குவதும், களவாட நினைப்பதும் கடுமையான தோஷமாக மாறும். கன்றுக்கு பால் விடாமல் ஒட்ட ஒட்ட பால் கறப்பது கூட தோஷத்தை அதிகரிக்கும். பொய் சாட்சி கூறுபவரின் வாக்கு ஸ்தானத்தில் தானாக இராகுவோ, கேதுவோ அமர்வது நிச்சயம்.
தவறான எண்ணங்களை, தர்மமில்லாத தீங்கான காரியங்களை செயல்படுத்தினால் ஒருவரின் ஜாதகத்தில் அது மோசமான இடங்களில் அமர்ந்து தோஷமாக தன்னை காட்டிக் கொள்கிறது எனவே கட்டுப்பாடு காப்பாற்றும். வெளிப்படையாகச் சொல்வதானால், ‘திருடுவதற்கு வாய்ப்பு கிடைத்தும் திருடாமல் இருந்தால்’ ராகு அவருக்கு யோகத்தை கொடுப்பார். இதுதான் சூட்சுமம். மனம் நாலா விதமாகவும் நினைக்கத்தான் செய்யும். ஆனால் செயலாக மாற்றும்போது, அதற்குரிய பலனை அனுபவித்துத்தான் தீர்க்க வேண்டும். ‘‘நான் இதைப் பண்ணும்போது யாரும் பக்கத்துலயே இல்லையே’’ என்று காலரைத் தூக்கி விட்டுக்கொண்டு போக முடியாது. காலதேவன் உங்களை எப்போதும் கவனித்துக் கொண்டிருப்பான்.
கும்பகோணம் & திருவாரூர் பாதையில் நன்னிலத்திற்கு அருகேயுள்ள ஸ்ரீவாஞ்சியம் என்கிற தலமும், புதுக்கோட்டைக்கு அருகேயுள்ள திருப்பேரையூரும் பிரதானமானவை. ஸ்ரீவாஞ்சியத்தில் இராகுவும் கேதுவும் இணைந்த அரிய கோலம் கொண்ட சிலையை தரிசிக்கலாம். மிகச் சக்தி வாய்ந்த சந்நதியாக அது விளங்குகிறது.
அதேபோல நாகலோகத்திற்குள் புகுந்து விட்டோமோ என்று வியப்பளிக்கும் வகையில் திருப்பேரையூர் நாகநாதர் கோயில் விளங்குகிறது. கோயிலின் மதிலில் தொடங்கி குளக்கரை முழுவதும் நாகர் சிலைகள். கோயிலிலேயே தோஷத்திற்கான பரிகாரங்கள் செய்கின்றனர். இந்த இரு ஆலயங்களையும் தரிசித்து கோயிலில் சொல்லக்கூடிய பரிகாரங்களைச் செய்யுங்கள். தோஷங்களின் வீர்யம் தானாகக் குறையும்.
No comments:
Post a Comment