'மத்திய பிரதேச சட்டசபையில், இன்று நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தப்பட வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, நம்பிக்கை ஓட்டெடுப்பிற்கு முன்னர், கமல்நாத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
மத்திய பிரதேசத்தில், முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, மார்ச் 26ம் தேதி, மூன்று ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் நடக்க உள்ளது. இதில், காங்கிரசும், பா.ஜ.,வும், தலா ஒரு இடத்தை எளிதில் கைப்பற்றிவிடும். மூன்றாவது இடத்தைப் பிடிக்க, இந்த இரு கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், இம்மாநிலத்தைச் சேர்ந்த, முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் பொதுச் செயலராக இருந்தவருமான, ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், 22 பேர், கடந்த வாரம், கர்நாடக மாநிலம், பெங்களூருக்கு வந்து சொகுசு ஓட்டல் ஒன்றில் தங்கியுள்ளனர். அடுத்து, சிந்தியா, காங்கிரசிலிருந்து விலகி, பா.ஜ.,வில் சேர்ந்தார்.
பெங்களூரில் தங்கியுள்ள, அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், 22 பேரும், தங்கள் எம்.எல்.ஏ., பதவி யை ராஜினாமா செய்து, கவர்னர், லால்ஜி டாண்டன் மற்றும் சபாநாயகர், என்.பி.பிரஜாபதிக்கு,கடிதங்களை அனுப்பி வைத்தனர். இவர்களில், ஆறு அமைச்சர்களும் அடங்குவர். அவர்களின் ராஜினாமாவை மட்டும், சபாநாயகர் ஏற்றுக் கொண்டார்.இதையடுத்து, கமல்நாத் அரசு, பெரும்பான்மையை இழந்துவிட்டதாக கூறப்பட்டது. மொத்தம், 230 உறுப்பினர்கள் கொண்ட சட்டசபையில், இரண்டு இடங்கள் காலியாக உள்ளன.
காங்கிரசுக்கு, 113 உறுப்பினர்களும், பா.ஜ.,வுக்கு, 107 உறுப்பினர்களும் உள்ளனர். 22 எம்.எல்.ஏ.,க்களின் ராஜினாமாவால், காங்கிரசின் பலம், 91 ஆக குறைந்துவிட்டது.சட்டசபையில், நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என, கவர்னர், டாண்டன்உத்தரவிட்டார். எனினும், 16ம் தேதி, சபை கூடிய போது, எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல், சபை, 26ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து, ம.பி.யின் முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உட்பட, பா.ஜ.,வை சேர்ந்த ஒன்பது பேர், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'சட்டசபையில் பெரும்பான்மையை நிருபிக்க, முதல்வர், கமல்நாத்துக்கு உத்தரவிட வேண்டும்' என, கூறியிருந்தார். இந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள், சந்திரசூட், ஹேமந்த் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று காலை தொடர்ந்து நடந்தது.
ம. பி., சபாநாயகர், பிரஜாபதி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, ''எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா விவகாரத்தில், உடனடியாக முடிவெடுக்க முடியாது; இரண்டு வார காலம் அவகாசம் தேவை,'' என்றார்.
இதற்கு, சிவராஜ் சிங் சவுகான் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.இதன் பின் நீதிபதிகள், 'காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன், 'வீடியோ கான்பரன்சிங்' வழியாக, சபாநாயகர் பேசலாம். இல்லாவிடில், எம்.எல்.ஏ.,க்களிடம் பேச, ஒருவரை நீதிமன்றம் நியமிக்கலாம்' என்றனர்.
ஆனால், இதை ஏற்க, சபாநாயகர் பிரஜாபதி மறுத்துவிட்டார். இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:ராஜினாமா கடிதங்கள், தகுதி நீக்கம் செய்ய கோரிய மனுக்கள் ஆகியவற்றின் மீது, சபாநாயகர் முடிவெடுக்காமல் இருந்தாலும், சட்டசபையில் நம்பிக்கை ஒட்டெடுப்பு நடத்துவதில், எந்தத் தடையும் இல்லை.
சட்டசபை கூட்டத் தொடர் நடக்காத நிலையில், பெரும்பான்மையை அரசு இழந்தால், உடன், சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை கூட்டுமாறு, சபாநாயகருக்கு உத்தரவிட, கவர்னருக்கு அதிகாரம் உள்ளது.அதனால், மத்திய பிரதேச சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை கூட்ட, சபாநாயருக்கு, கவர்னர் உத்தரவிட வேண்டும். சட்டசபையை இன்று கூட்டி, மாலை, 5 மணிக்குள் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தவும், சபாநாயகருக்கு உத்தரவிட வேணடும்.நம்பிக்கை ஓட்டெடுப்பை நேரடியாக ஒளிபரப்பவும், வீடியோ எடுக்கவும், ஏற்பாடு செய்ய வேண்டும்.
நம்பிக்கை ஓட்டெடுப்பில் பங்கேற்க, காங்கிரசின் அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள், 16 பேரும் வந்தால், அவர்களுக்கு, மத்திய பிரதேசம் மற்றும் கர்நாடக அரசுகள், போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.சட்டசபை கூட்டத்தில், நம்பிக்கை ஒட்டெடுப்பை தவிர, வேறு பணிகள் மேற்கொள்ள கூடாது. இந்த விவகாரத்தில், சட்டம் - ஒழுங்கு மீறல் இருக்க கூடாது. இதை, சட்டசபை செயலர் உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
காங்., - பா.ஜ., ஆபீஸ்களில் பாதுகாப்
புமத்திய பிரதேச சட்டசபையில், இன்று நம்பிக்கை ஓட்டெடுப்பு நடக்க உள்ள நிலையில், தலைநகர் போபாலில் உள்ள, காங்கிரஸ் மற்றும் பா.ஜ., தலைமை அலுவலகங்களுக்கு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.கர்நாடக தலைநகர், பெங்களூரில் தங்கியுள்ள அதிருப்தி, எம். எல்.ஏ.,க்களை சந்திக்க, காங்., மூத்த தலைவர் திக்விஜய் சிங்குக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து, பா.ஜ., அலுவலகம் முன், காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.அப்போது, இரு தரப்புக்கும் கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தங்கள் அலுவலகத்தை, காங்., தொண்டர்கள் சூறையாடியதாக, பா.ஜ., போலீசில் புகார் செய்துள்ளது.
'போலீசுக்கு கர்நாடக அரசு நெருக்கடி'
''அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களை, நான் சந்திக்க அனுமதிக்க கூடாது என, போலீசுக்கு, கர்நாடக முதல்வர் எடியூரப்பா நெருக்கடி கொடுக்கிறார்,'' என, காங்., மூத்த தலைவர் திக்விஜய் சிங் கூறினார்.பெங்களூரில், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:மத்திய பிரதேசத்தில், இப்போது ஏற்பட்டுள்ள நிலைக்கு, மத்திய உள்துறை அமைச்சர்அமித் ஷா தான் காரணம். அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களை. நான் சந்தித்துப் பேசினால், அவர்களின் மனதை மாற்றி விடுவேன்.பா.ஜ.,வுக்கு சாதமாக நடந்து கொள்ள வேண்டாம் என, அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களை கேட்டுக் கொள்கிறேன்.கர்நாடக போலீசார் மீது, எனக்கு எந்தக் கோபமும் இல்லை. நான், அதிருப்தி, எம்.எல்.ஏ.,க்களை சந்திக்க அனுமதிக்க கூடாது என, போலீசுக்கு, கர்நாடக முதல்வர் எடியூரப்பா நெருக்கடி கொடுத்துள்ளார். கர்நாடகாவில், கடந்த ஆண்டு செய்ததை, இப்போது, மத்திய பிரதேசத்தில், பா.ஜ., செய்கிறது. இதை 'ஆப்பரேசன் தாமரை' என, அவர்கள் கூறலாம். ஆனால், நான், 'ஆப்பரேசன் பணம்' என, கூறுவேன். இவ்வாறு திக்விஜய் சிங் கூறினார்.
No comments:
Post a Comment