Friday, March 20, 2020

ம.பி.,யில் காங். ஆட்சி கைநழுவியது! : முதல்வர் கமல்நாத் ராஜினாமா.

மத்திய பிரதேசத்தில், கடந்த, 10 நாட்களுக்கு மேலாக நீடித்து வந்த பிரச்னை, நேற்று முடிவுக்கு வந்தது. பெரும்பான்மை கிடைக்காது என்பதை உணர்ந்து, கமல்நாத், முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, காங்கிரசிடமிருந்து மத்திய பிரதேசம் கைநழுவியது. நம்பிக்கை ஓட்டெடுப்பு நடக்காமல்,சட்டசபை காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.
M.P, காங்., ம.பி, பெரும்பான்மை ,கமல்நாத், கைநழுவியது, ஆட்சி,சட்டசபை, ராஜினாமா

மத்திய பிரதேசத்தில், கடந்த, 2018ல் சட்டசபை தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள, 230 இடங்களில், காங்கிரஸ், 113 இடங்களிலும், பா.ஜ., 107 இடங்களிலும் வெற்றி பெற்றன. யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் மற்றும் சுயேச்சை எம்.எல்..ஏ.,க்கள் ஆதரவுடன், காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. முதல்வராக கமல்நாத் பொறுப்பேற்றார்.


22 எம்.எல்.ஏ.,க்கள்


இதற்கிடையே, மாநிலத்தில் வரும், 26ல், மூன்று ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் நடக்க உள்ளது. இதில், காங்கிரசும், பா.ஜ.,வும், இரண்டு இடங்களை கைப்பற்றி விடும். மூன்றாவது இடத்துக்கு, கடும் போட்டி நிலவுகிறது.இந்நிலையில், இம்மாநிலத்தைச் சேர்ந்த, முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் பொதுச் செயலருமாக இருந்த, ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், 22 பேர், கர்நாடக மாநிலம், பெங்களூருக்கு, 10 நாட்களுக்கு முன் சென்றனர். அங்கு, ஒரு சொகுசு விடுதியில் தங்கியுள்ளனர்.
இதற்கிடையே, காங்கிரசிலிருந்து விலகிய ஜோதிராதித்ய சிந்தியா, பா.ஜ.,வில் சேர்ந்தார். பெங்களூரில் தங்கியுள்ள, 22 எம்.எல்.ஏ.,க்களும், தங்கள் பதவியை ராஜினாமா செய்து, கடிதங்களை, கவர்னர், லால்ஜி டாண்டன், சபாநாயகர், பிரஜாபதிக்கு அனுப்பி வைத்தனர். இதில், ஆறு அமைச்சர்களின் ராஜினாமாக்களை மட்டும், சபாநாயகர் முதலில் ஏற்றுக் கொண்டார்.இதையடுத்து, 16ம் தேதி பெரும்பான்மையை நிரூபிக்க, முதல்வர் கமல்நாத்துக்கு, கவர்னர் உத்தரவிட்டார்.

உத்தரவு


ஆனால், 16ம் தேதியன்று, எந்த அலுவலும் மேற்கொள்ளாமல், சபை, 26ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.இதையடுத்து, ம.பி., முன்னாள் முதல்வர், சிவராஜ் சிங் சவுகான் உட்பட, பா.ஜ.,வைச் சேர்ந்த ஒன்பது பேர், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதில், 'பெரும்பான்மையை நிரூபிக்க, கமல்நாத் அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என, கோரினர்.இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'மத்திய பிரதேச சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை நேற்று கூட்டி, மாலை, 5:00 மணிக்குள், நம்பிக்கை ஓட்டெடுப்பை நடத்த வேண்டும்' என, நேற்று முன்தினம் உத்தரவிட்டது.

மக்கள் வாய்ப்பு


இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு, காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள், 16 பேரின் ராஜினாமாவை ஏற்றுக் கொள்வதாக, சபாநாயகர் பிரஜாபதி தெரிவித்தார்.
'நேற்று மதியம், 2:00 மணிக்கு, சட்டசபையின் சிறப்பு கூட்டம் துவங்கி, மாலை, 5:00 மணிக்கு நிறைவு பெறும்' என, சட்டசபை செயலர் அறிவித்தார்.
இந்நிலையில், நேற்று, சட்டசபையின் சிறப்பு கூட்டம் கூட்டப்படுவதற்கு முன், முதல்வர் பதவியை, கமல்நாத் ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை வழங்க, கவர்னர் மாளிகைக்கு செல்லும் முன், கமல்நாத் கூறியதாவது:ம.பி.,யில், 15 ஆண்டு கால ஆட்சியில், பா.ஜ., செய்யாததை, நான், 15 மாதங்களில் செய்துள்ளேன். மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றியுள்ளேன். 2018 தேர்தலில், காங்கிரஸ் வெற்றி பெற்றது. ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்ய, மக்கள் வாய்ப்பு வழங்கினர்.

பதவி ஆசை


மக்கள் அளித்த தீர்ப்பிற்கு, பா.ஜ., துரோகம் செய்துள்ளது. ஆரம்பம் முதலே, எங்களது அரசை முடக்க, பா.ஜ., முயற்சி செய்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசை கவிழ்ப்பதற்காக, பா.ஜ., எத்தனை கோடி ரூபாய் கொடுத்துள்ளது என்பதை, மத்திய பிரதேச மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றனர்.
தேர்தலில் நின்று மக்களால் புறக்கணிக்கப்பட்ட, 'மஹாராஜா' தன் பதவி ஆசையால், 22 எம்.எல்.ஏ.,க்களை கைக்குள் வைத்துக் கொண்டு, இந்த அரசை கவிழ்த்துள்ளார். அவருக்கும், பா.ஜ.,வுக்கும் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவர்.
என் அரசுக்கு எதிராக, இதுவரை எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை. கவர்னரை சந்தித்து, என் ராஜினாமா கடிதத்தை கொடுப்பேன். இவ்வாறு, கமல்நாத் கூறினார்.இதன்பின், கமல்நாத் கவர்னர் மாளிகைக்கு சென்று, டாண்டனிடம், தன் ராஜினாமா கடிதத்தை வழங்கினார். ராஜினாமா கடிதத்தில் கமல்நாத் கூறியிருப்பதாவது:நான் எப்போதுமே, துாய்மையான அரசியல் செய்து வந்துள்ளேன். ஜனநாயக கொள்கைகளை, நான் ஒரு போதும் மீறியதில்லை.

ஒத்துழைப்பு


ஆனால், கடந்த இரண்டு வாரங்களாக நடந்த சம்பவங்கள், ஜனநாயக பண்புகளை சீர்குலைத்துள்ளன. மாநிலத்தில், புதிதாக பொறுப்பேற்கும் முதல்வருக்கு, மாநில வளர்ச்சிக்கான பணிகளில், முழு ஒத்துழைப்பு அளிப்பேன். இவ்வாறு, அவர் கடிதத்தில் கூறியுள்ளார். கமல்நாத்தின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட டாண்டன், புதிய முதல்வர் பதவியேற்கும் வரை, முதல்வர் பதவியில் நீடிக்குமாறு, கமல்நாத்தை கேட்டுக் கொண்டார். இதற்கிடையே, மத்திய பிரதேச சட்டசபை, சிறப்பு கூட்டத்துக்காக, நேற்று மதியம், 2:00 மணிக்கு கூடியது. பா.ஜ., உறுப்பினர்கள் மட்டுமே, சபைக்கு வந்திருந்தனர்.

நான்காக குறைவு


சபாநாயகர் பிரஜாபதி கூறுகையில், ''முதல்வர் கமல்நாத் ராஜினாமா செய்துவிட்டதால், நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது. சபை, காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுகிறது,'' என, அறிவித்தார்.கமல்நாத் ராஜினாமா செய்ததையடுத்து, காங்கிரஸ் தனித்து ஆட்சி செய்யும் மாநிலங்களின் எண்ணிக்கை, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தையும் சேர்த்து, நான்காக குறைந்தது.

சவுகான் மீண்டும் முதல்வர்


மத்திய பிரதேச சட்டசபையின் பலம், இப்போது, 206 ஆக குறைந்துவிட்டது. பெரும்பான்மைக்கு, 104 எம்.எல்,ஏ.,க்களின் ஆதரவு தேவை. பா.ஜ.,வுக்கு, 107 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளதால், பெரும்பான்மை பிரச்னை ஏற்படாது. அதனால், மத்திய பிரதேச முதல்வராக, சிவராஜ் சிங் சவுகான், மீண்டும் பதவியேற்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது.
'விரைவில், பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடக்கும்; அதில், சிவராஜ் சிங் சவுகான் தலைவராக தேர்வு செய்யப்படுவார்' என, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

மக்களின் வெற்றி


மக்களுக்கு சேவை செய்வதற்கான ஒரு பாதையாகவே, அரசியலை நான் கருதி வருகிறேன். ஆனால், அந்த பாதையிலிருந்து, கமல்நாத் அரசு தவறிவிட்டது. உண்மை வென்றுள்ளது. கமல்நாத் ராஜினாமா செய்துள்ளது, மக்களுக்கு கிடைத்த வெற்றி.ஜோதிராதித்ய சிந்தியாமுன்னாள் மத்திய அமைச்சர், பா.ஜ.,

பிறவிக் குணம்


மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை கலைப்பதை, பா,.ஜ., வழக்கமாக கொண்டுள்ளது. இது, அதன் பிறவிக் குணம். மத்திய பிரதேசத்தில், பட்டப்பகலில், ஜனநாயகம் கொன்று புதைக்கப்பட்டுள்ளது.அசோக் கெலாட்ராஜஸ்தான் முதல்வர், காங்கிரஸ்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...