Tuesday, March 17, 2020

பெரும்பான்மையை நிரூபிப்பது எப்போது? : பதிலளிக்க கமல்நாத்துக்கு அவகாசம்.

மத்திய பிரதேச அரசை பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில், இன்று காலை, 10:30க்குள் பதிலளிக்கும்படி, காங்.,கைச் சேர்ந்த முதல்வர், கமல்நாத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டது. மூத்த தலைவரான, ஜோதிராதித்ய சிந்தியா, கட்சியில் இருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்தார்.

ராஜினாமா


அதையடுத்து, அவருடைய ஆதரவாளர்களான, 22 காங்., - எம்.எல்.ஏ.,க்கள், தங்களுடைய பதவியை ராஜினாமா செய்தனர். அதில், ஆறு பேரின் ராஜினாமாவை, சபாநாயகர், பிரஜாபதி ஏற்றுக் கொண்டார். இந்த ராஜினாமாக்களால், முதல்வர் கமல்நாத் அரசு பெரும்பான்மையை இழந்தது.'சட்டசபை, மார்ச், 16ம் தேதி கூடும்போது, பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்' என, கவர்னர், லால்ஜி டாண்டன் உத்தரவிட்டிருந்தார்.

ஆனால், நேற்று முன்தினம் சட்டசபை கூடியபோது, கொரோனா வைரஸ் பாதிப்பு பரவி வருவதால், சட்டசபையை, 26ம் தேதி வரை ஒத்தி வைப்பதாக, சபாநாயகர் அறிவித்தார். இதற்கிடையே, 'நேற்று காலையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்' என, கவர்னர் புதிய உத்தரவு பிறப்பித்தார்.

பா.ஜ.,வைச் சேர்ந்த முன்னாள் முதல்வர், சிவராஜ் சிங் சவுகான் மற்றும் பா.ஜ.,வைச் சேர்ந்த, ஒன்பது மூத்த தலைவர்கள், '12 மணி நேரத்திற்குள் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும்' என, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்டோர் சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர், முகுல் ரோஹத்கி வாதிட்டதாவது:மத்திய பிரதேசத்தில் உள்ள, 230 சட்டசபை தொகுதிகளில், இரண்டு காலியாக உள்ளன. சமீபத்தில், காங்.,கைச் சேர்ந்த, 22 அதிருப்தி, எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்தனர்.


கோரிக்கை
அதில், அமைச்சர்களாக இருந்த, ஆறு பேரின் ராஜினாமாவை, சபாநாயகர் ஏற்றார். அதையடுத்து, சட்டசபையின் மொத்த பலம், 222ஆக குறைந்துள்ளது. காங்.,கின் பலம், 92 ஆக குறைந்துஉள்ளது.பெரும்பான்மையை இழந்து விட்டதால், ஆட்சியில் தொடர, முதல்வர் கமல்நாத் தலைமையிலான அரசுக்கு தார்மீக உரிமை இல்லை. சட்டசபையில் தன் பெரும்பான்மையை உடனடியாக நிரூபிக்க அவருக்கு உத்தரவிட வேண்டும்.சமீபத்தில், மஹாராஷ்டிராவில் இதுபோன்ற நிலை ஏற்பட்டபோது, 24 மணி நேரத்துக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதுபோல், இந்த வழக்கிலும் உத்தரவிட வேண்டும்.வழக்கமாக, இது போன்ற கோரிக்கையுடன், காங்., கட்சியினர் தான் வழக்கு தொடருவர். ஆனால், தற்போது, ஜனநாயகத்தை காப்பாற்ற, நாங்கள் இந்த வழக்கை தொடர்ந்துள்ளோம்.இவ்வாறு, அவர் வாதிட்டார்.இதற்கிடையே, ராஜினாமா செய்த, 16 காங்., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள், தங்களையும் இந்த வழக்கில் இணைத்து கொள்ளக் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.

உச்ச நீதிமன்றம்


வாதங்களுக்குப் பின், 'இன்று காலை 10:30 மணிக்குள், பெரும்பான்மையை நிரூபிப்பது குறித்த தன் நிலைப்பாட்டை, மத்திய பிரதேச அரசு தெரிவிக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டு உள்ளது.

'சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்' என, புதிய உத்தரவு பிறப்பித்து, கவர்னர் அனுப்பியுள்ள கடிதத்தை, முதல்வர் கமல்நாத், சபாநாயகருக்கு அனுப்பியுள்ளார்.இது தொடர்பாக, கவர்னருக்கு அவர் பதில் அனுப்பியுள்ளார். 'பெரும்பான்மையை நிரூபிப்பது தொடர்பாக, சபாநாயகர் முடிவு செய்வார்' என, கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காங்., புது வழக்கு


மத்திய பிரதேச காங்கிரஸ் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த அதிருப்தி, எம்.எல்.ஏ.,க்கள், கர்நாடக மாநிலம் பெங்களூரில், சட்ட விரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை சந்திக்க, அனுமதிக்க வேண்டும். இது தொடர்பாக, மத்திய அரசு, பா.ஜ., ஆளும் கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க, அனைத்து, எம்.எல்.ஏ.,க்களும் சட்டசபைக்கு வர வேண்டும். அதனால், அதிருப்தி, எம்.எல்.ஏ.,க்களை சந்திக்க அனுமதிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

நெருக்கடி கொடுக்கின்றனர்
பா.ஜ.,வைச் சேர்ந்த, முன்னாள் முதல்வர், சிவராஜ் சிங் சவுகான் கூறியதாவது:பெரும்பான்மை பலத்தை இழந்து விட்டோம் என்பது தெரிந்தும், கமல்நாத் தொடர்ந்து பதவியில் இருக்கிறார்.பெரும்பான்மை பலத்தை நிரூபிக்காமல் காலதாமதம் செய்கிறார். அதிருப்தி, எம்.எல்.ஏ.,க்களுக்கு நெருக்கடி கொடுத்தும், ஆசை காட்டியும், சரிகட்ட முயற்சிக்கின்றனர். இதற்காகவே, சட்டசபையில் பலத்தை நிரூபிக்காமல் இழுத்தடிப்பு செய்கின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.

மேலும், 20 பேர் தயார்
ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்து, காங்.,கைச் சேர்ந்த, 22 அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்தனர். அவர்கள் கர்நாடக மாநிலம் பெங்களூரில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் கூறியதாவது:ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்து, பதவி விலகியுள்ளோம். நாங்கள் எப்போதும் அவருக்கு ஆதரவாக இருப்போம். பா.ஜ.,வில் இணைவது குறித்து, இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. போதிய மத்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டால், மத்திய பிரதேசம் செல்வோம்; அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்தும் முடிவு செய்வோம்.காங்.,கில் இருந்து விலக, மேலும், 20 பேர் தயாராக உள்ளனர். ஆனால், அவர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். ம.பி.,யில் காங்கிரஸ் துண்டுகளாக சிதறும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...