இந்திய சினிமாவின் மிக மூத்த பின்னணி பாடகியாக அறியப்படும் எஸ்.ஜானகி (வயது 82) ஹைதராபாத்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 17 இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளில் 48,000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். வயது மூப்பின் காரணமாக 2018ம் ஆண்டுடன் பாடல்கள் பாடுவதை ஜானகி நிறுத்திக்கொண்டார்.
இதனிடையே பாடகி எஸ்.ஜானகி உடல்நலக்குறைவால் மரணமடைந்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் நேற்று தகவல்கள் உலா வரத்தொடங்கியது. இது உண்மையில்லை எனக்கூறி ஜானகியின் மகனான முரளி கிருஷ்ணா வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்நிலையில், பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியதாவது: "காலையில் இருந்து சுமார் இருபது தொலைபேசி அழைப்புகள் எனக்கு வந்துவிட்டது. ஜானகி அம்மா எப்படி இருக்கிறார் என்பது பற்றி தான் விசாரிக்கிறார்கள். சமூக வலைத்தளத்தில் எப்படியோ ஒருவர் ஜானகி அம்மா குறித்து வதந்தி பரப்பியுள்ளார். என்ன முட்டாள்தனமான விஷயம் இது?.. நான் அவருடன் பேசினேன். அவர் மிகவும் நலமுடன் இருக்கிறார்.
இது போன்ற விஷயங்களால் என்ன நடக்கும் என்றால், யாராவது ஒருவர் ஒரு கலைஞரை மிகவும் மனப்பூர்வமாக விரும்பினால், அவர்களுக்கு இது மாரடைப்பை கொடுத்திருக்கலாம். சமூக வலைதளங்களில் தயவு செய்து நல்ல விஷயங்களை பரப்புவதற்காக மட்டும் பயன்படுத்துங்கள்.
சமூக வலைத்தளங்களை இது போன்ற மோசமான விஷயங்களுக்காக பயன்படுத்தாதீர்கள். தயவு செய்து.. ஜானகி அம்மா நீடூழி வாழட்டும். அவர் பாதுகாப்புடனும், உடல் நலமுடனும் இருக்கிறார். ஏன் இது போன்ற விஷயங்களை செய்கிறீர்கள் ஜென்டில்மேன்? உங்களை ஜென்டில்மேன்னு சொல்லலாமா? கடவுள் அனைவரையும் ஆசீர்வதிக்கட்டும்" என எஸ்.பி.பி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment