மாண்புமிகு முதலைமைச்சருக்கு
மற்றும்
மாண்புமிகு சுகாதாரத் துறை அமைச்சருக்கு,
ஆன்லைனில் PICME (Pregnancy and Infant Cohort Monitoring and Evaluation) எண்ணை வாங்க போன ஞாயிறு இரவு கடும் முயற்சி செய்தேன்.
Zone 15 சோழிங்கநல்லூர் என தேர்வு செய்த பிறகு, village என கேட்கிறது. எந்தெந்த ஏரியா எந்தெந்த கிராமத்தைச் சேரும் என்கிற விளக்கம் எங்குமே கொடுக்கப்படவில்லை. உடனே, 102க்கு அழைத்தேன்.
சில நிமிட காத்திருப்புக்கு பின்னர், "பக்கத்திலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தங்களுடைய கணவரை ஆதார் கார்டும் அட்ரஸ் ப்ரூஃபும் தந்து அனுப்புங்கள். தாங்கள் செல்ல வேண்டாம். எண்ணைப் பதிவு செய்து தந்துவிடுவார்கள்" என்று ஒருவர் கூறினார்.
அப்போ ஆன்லைன் என்பது பேருக்கு தான் வைத்திருக்கின்றனர் போல என நினைத்துக் கொண்டு, அடுத்த நாள் கணவரை அனுப்பினேன். அவரை வாசலிலேயே நிறுத்தி 102ல் சொன்னதை ஒரு செவிலியர் சொல்லி, நாளை உங்கள் மனைவியையும் அழைச்சுட்டு வாங்க என கூறியுள்ளார்.
செவ்வாய்க்கிழமை நானும் கணவருடன் சோழிங்கநல்லூர் UPHC க்கு சென்றேன். எல்லா அரசு அலுவலகங்களைப் போல ஒரு செவிலியர் அரட்டை அடித்துக் கொண்டு மற்ற ஒரு செவிலியருக்கு ஆணை பிறப்பித்துக் கொண்டிருந்தார்.
"ஆதார் கொடுங்க.. " என்றதும் கணவர் ஆதாரை நீட்டுகிறார். "ஜெராக்ஸ் கொடுங்க!" என்றார்.
ஜெராக்ஸைத் தந்தோம். உடனே, "ஃபோட்டோ கொடுங்க!" என்றார்.
"நேற்று வந்தோமே.. போட்டோ பத்தி ஒண்ணுமே சொல்லலியே.." என்றால் ஒருவரிடமும் பதில் இல்லை.
அந்த அரட்டைச் செவிலியர் "நாளை செக்கப்புக்கு வர சொல்லுங்க. அப்ப பதியுறோம்" என்று அதிகாரமாய் சொன்னதும், "நாளைக்கு இந்த ஜெராக்ஸ் பின்னாடி பேரு, அட்ரசு, வயசு, எல்.எம்.பி.இ.டி (கவனிக்க.. இந்த வார்த்தை சரியாகக் கூட காதில் விழவில்லை.. அனைத்தும் அவ்வளவு வேகமாக கூறுகிறார்.. எனக்கு எல்.எம் மட்டுமே கேட்டது) , பாஸ்புக் ஜெராக்ஸ் கொண்டு வந்து, இவங்களையும் செக்கப்புக்கு அழைச்சுட்டு வாங்க" என கூறினார்.
என்னுடைய சந்தேகம் என்னவென்றால் கர்ப்பிணிப் பெண்களைத் தேவையில்லாமல் இந்த பேண்டமிக் காலத்தில் வெளியில் செல்லக் கூடாது என கட்டளையிடுகிறது அரசு. ஆனால், இந்த மாதிரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலை செய்பவர்கள் ஒழுங்காக என்னென்ன வேண்டும் என்று சொல்லாமல் ஒரு கர்ப்பிணியை அலைய வைப்பது, அதுவும் என்னுடைய அப்பார்ட்மெண்ட்டில் இருவருக்கு கொரோனா உறுதியான இந்த சூழ்நிலையில் வரச் சொல்வது சரியா?!
தற்போதுள்ள சூழ்நிலையைப் பொருத்து கர்ப்பிணிப் பெண்களை அலைய வைக்க வேண்டாம் என உடனடியாக இந்த செவிலியர்களுக்கெல்லாம் ஆணை பிறப்பிக்காவிடில், பல கர்ப்பிணிப் பெண்கள் பிரசவ வலியில் போராடுவதை விட கொரோனாவால் போராட வேண்டிய நிலை வந்துவிடும்.
தயவு செய்து ஆன்லைனில் PICME எண்ணை துரிதமாக வாங்க, இந்த நோய்த்தொற்று காலத்தில் ஆவன செய்யுங்கள்.
நன்றி
இப்படிக்கு
தமிழ்நாட்டில் கொரோனா சமயத்தில், அதுவும் சென்னையில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு கர்ப்பிணிப் பெண்.
தமிழ்நாட்டில் கொரோனா சமயத்தில், அதுவும் சென்னையில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு கர்ப்பிணிப் பெண்.
No comments:
Post a Comment