Friday, March 5, 2021

திமுக அவமானப்படுத்துகிறது: காங்., அழகிரி கதறல்.

 தி.மு.க., தங்களை அவமானப்படுத்துவதாக, நேற்று நடந்த காங்., செயற்குழுவில், மாநில காங்., தலைவர் அழகிரி, கண்ணீர் விட்டு அழுதார்.



பேச்சில் இழுபறி


தி.மு.க., கூட்டணியில், காங்கிரசுக்கான தொகுதி பங்கீட்டு பேச்சில், இழுபறி நீடிக்கிறது. காங்கிரசுக்கு, 22 தொகுதிகள் ஒதுக்க, தி.மு.க., திட்டமிட்டுள்ளது. ஆனால், 40 தொகுதிகள் கேட்கப்படுகிறது. இதனால் ஏற்பட்ட இழுபறி குறித்து விவாதிக்க, தமிழக காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம், சத்தியமூர்த்தி பவனில் நேற்று மாலை நடந்தது.

DMK, Congress, TN election, திமுக, அவமானம், காங்கிரஸ், அழகிரி, கதறல்


அதில், மாநில தலைவர் அழகிரி பேசியதாவது: கடந்த, 1980 சட்ட சபை தேர்தலில், தி.மு.க.,விடம், 50 சதவீதம் தொகுதிகளை பெற்றோம். தற்போது, 10 சதவீதம் தொகுதிகளை தான் கேட்கிறோம். இடைப்பட்ட காலத்தில், தி.மு.க., வளர்ந்து விட்டதா; காங்கிரஸ் தான் தேய்ந்து விட்டதா? தி.மு.க., ஓட்டு சதவீதம், 34ல் இருந்து, 24 சதவீதமாக குறைந்துள்ளது. காங்கிரசுக்கும் குறைந்து உள்ளது. ஆனால், கூட்டணி வெற்றியை நிர்ணயிக்கிற சக்தி, காங்கிரசுக்கு உண்டு. தி.மு.க.,விடம், 40 தொகுதிகளை கேட்டோம். சகோதர மனப்பான்மையுடன் பேச்சு நடத்துகிறோம். ஆனால், தொடர்ந்து அவமானத்தை சந்தித்து வருகிறோம்.


மரியாதை


மதச்சார்பற்ற கூட்டணியில், நம்மால் குழப்பம் வந்து விடக் கூடாது. அதற்காக, கூட்டணியில் தொடர வேண்டும் என்பதற்காக, அவமானத்தை பொறுத்து வருகிறோம். இறுதி முடிவை, தி.மு.க., தான் எடுக்க வேண்டும். இரண்டு நாட்கள் காத்திருப்போம், நல்ல முடிவுக்காக. அவர்கள் அழைக்கவில்லை என்றால், மீண்டும் பேசி முடிவெடுப்போம். இவ்வாறு, அவர் பேசியதாக தெரிகிறது.

அழகிரி பேசுகையில், 'தனிப்பட்ட அழகிரிக்கு, எந்த மரியாதையும் தேவையில்லை.ஆனால், தமிழக காங்கிரஸ் தலைவர் என்ற அடிப்படையில், எனக்கும், சட்டசபை காங்கிரஸ் தலைவர் என்ற அடிப்படையில், ராமசாமிக்கும், உரிய மரியாதை கிடைக்கவில்லை' என கூறியபோது, கண்ணீர் விட்டு அழுதார்.


தனித்து நிற்போம்


அப்போது, செயற்குழு உறுப்பினர்கள், 'தனித்து நிற்போம்; தன்மானத்தை காப்போம்' என, கோஷம் எழுப்பினர்.மேலிட பொறுப்பாளர் வீரப்பமொய்லி பேசுகையில், ''தி.மு.க., கூட்டணி தொடருகிறது. நல்ல முடிவை, தி.மு.க., தெரிவிக்கும்,'' என்றார்.தினேஷ் குண்டுராவ் பேசுகையில், ''மாற்று ஏற்பாடு குறித்தும் விவாதித்து கொண்டிருக்கிறோம்,'' என்றார்.


ஸ்டாலின் படம் கிழிப்பு!


சத்தியமூர்த்தி பவனில், தி.மு.க.,வுக்கு எதிராக கோஷம் எழுப்பி, மகளிர் அணியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 'வாருங்கள் வெல்வோம்' என்ற தலைப்பில், மத நல்லிணக்க மாநாடு, 8ம் தேதி நடக்க உள்ளது. அதற்கான விளம்பர பேனர், சத்தியமூர்த்தி பவனில் வைக்கப்பட்டிருந்தது. அதில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் படம், பெரிதாக இடம்பெற்றிருந்தது. 'தி.மு.க., பேனரை, காங்கிரஸ் அலுவலகத்தில் எப்படி வைக்கலாம்' என, குரல் எழுப்பிய காங்கிரசார், ஸ்டாலின் படத்தை கிழித்தனர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...