Tuesday, March 2, 2021

பொற்காலம்.

 80 களின் காலம் தமிழ் திரையுலகின் பொற்காலம். ரசனையான காலம் .. சினிமாவை கொண்டாடினார்கள்..

சினிமாவும் அவர்களை ரசிக்க வைத்தது.
அப்படி ரசிக்க வைத்தவர்களில் மிக முக்கியமானவர் : மோகன் ஃ மோகன் மட்டுமே. ஒரு பனிரெண்டு வருஷத்துக்கு முன்னால் கைக்குழந்தை வைத்திருக்கும் பெண்களை கேளுங்க ? யார் பிடிக்கும்னு அது மோகன் என்று ...
பாலுமகேந்திரா கண்டுபிடிப்பு.
ஜய்ஜாண்டிக் தோற்றம் இல்லை. இருப்பதியிலேயே மிருதுவான உடல் நிலை. முகம் கூட.. க்ளோஸ் ஷாட் எல்லாம் வைக்க முடியாது. பருக்களால் விளைந்த சிறு சிறு பள்ளங்கள். ஆனால் அதை எல்லாம் தாண்டி இந்த மனிதனை விரும்பிய பெண்கள் ஏராளம். எல்லாருக்கும் பிடித்த முகம் அது. மைக்கை கையில் பிடித்து கழுத்தை இருபக்கமும்....சரியான ரிதத்தில் ஆட்டும் மோகனை படம் ஆரம்பித்த முதல் நொடியிலேயே பிடித்து விடும்.
"ராஜ ராஜ சோழன் நான்...." ஆகட்டும்.... "யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ...." ஆகட்டும்.... அந்தந்த கதாபாத்திரத்தில் தன்னை மிக சரியாக பொருத்திக் கொண்டு விளையாடும் மோகனுக்கு கடைசிவரை சொந்தக் குரல் இல்லை....என்பது சற்று வருத்தத்துக்குரிய விஷயம். அவருக்கு விஜய்- யின் மாமா சுரேந்தரின் குரல் தான் எப்போதும். எப்போது அவர்கள் இருவருக்கும் ஒத்து வராமல் போனதோ அப்போது முதல் மோகனை மோகனாக பார்க்க முடிய வில்லை. அந்தக் குரல் இல்லாத மோகனை பார்த்து இது மோகன் இல்லையே என்றார்கள். அப்படி ஒரு குரல் பொருத்தம். எனக்கு தெரிந்து உலக அளவில்.. ஒருவரின் குரல் இன்னொருவருக்கு பொருந்தி அதுதான் அவரின் குரல் என்று ஆனதெல்லாம் சினிமா வரலாற்று மயக்கம். இப்போது கூட சுரேந்தரின் குரல் சுரேந்தர்- க்கு பொருத்தம் இல்லை என்று தான் கூற முடியும். அத்தனை நெருக்கம் அவரின் குரல் மோகனுக்கு.
நிறைய புது புது முயற்சிகளில் ஈடுபட்ட நடிகர். கதாநாயகனாக இருக்கும் போதே அந்தக்கால கட்டத்தில் எவரும் "நூறாவது நாள்" படத்தில் அப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க முன் வர மாட்டார்கள். எத்தனை துணிச்சல். அதுவும் படம் முழுக்க ஹீரோவாக வரும் மோகன்.. படம் முடிகையில் வில்லனாகவே ஆகி விடுவார். அந்த படம் மாபெரும் வெற்றி என்றால் அதற்கு மோகனின் தனித்துவமும் ஒரு காரணம். எத்தனை பாடல்கள். ஒரு கால கட்டத்தில் இளையராஜாவின் அத்தனை பாடல்களுக்கும் விலாசமாக இருந்தவர் மோகன். கமல் படங்களுக்கு போட்டியாக காலத்தை பதிந்த படங்கள் மோகனுடையது. அதிகமான வெள்ளி விழா படங்கள்,
அன்றைய கால கட்டத்தில் எல்லா பெண்களுக்கும் பிடித்த இடத்தில் மோகன் இருந்தார் என்றால் அது சிங்கப்பல் சிரிக்கும் அழகு தான். அத்தனை உயரம் இல்லை. அத்தனை பில்ட் பாடி இல்லை. குரல் கூட சொந்தம் இல்லை. முகம் எல்லாம் அம்மை தழும்புகள். ஆனாலும் வசீகரம் இருந்தது. காலத்தின் கட்டளையைப் போல மோகனின் படங்கள் பெரும்பாலும் உச்சம் தொட்டன. மோகன் படங்களில் பாடல்கள் ஹிட்டோ ஹிட்.
"மெல்லத் திறந்தது கதவு, உதய கீதம், பயணங்கள் முடிவதில்லை, குங்குமச் சிமிழ், டிசம்பர் பூக்கள், கிளிஞ்சங்கள், நெஞ்சத்தை கிள்ளாதே, பாடுநிலாவே....." என்று அது தொடர்ந்து கொண்டே இருக்கும். ஒரு கட்டத்தில் எந்த முன்னணி ஹீரோவும் செய்யத் துணியாத ஒரு வேலையைக் கூட செய்தார். "உருவம்" என்றொரு படத்தில் பேயாக நடித்தார். சவால் விடலாம். இப்போதும் தனியாக நள்ளிரவில் உக்கார்ந்து ஈவில் டெட்- ஐ கூட பார்த்து விடலாம். "உருவம்" படத்தை பார்க்க முடியாது. அப்போதே மேக் அப்- க்கு அத்தனை மெனக்கெடல். புதுமை,.தேடல். பேய் என்றால் அது தான் பேய். மோகனுக்குள் பேய் வந்த பிறகு படம் உலுக்கி எடுத்ததெல்லாம் இரவுக்கு பல் நீண்ட கதை. ஒரு காட்சியை கூட இயல்பாக பார்க்க முடியாது.
எத்தனையோ விதவிதமான கதாபாத்திரங்களில் தனக்குள் இருக்கும் நடிகனை வெளிப்படுத்திக் கொண்டேயிருந்தவர். "விதி" என்ற படத்தின் மூலமாக தமிழ் சமூகத்தின் கோபங்களை சம்பாதித்து கொண்டவர். அதுவும் ஒரு கதாபாத்திரம். அவ்வளவு தான். அந்த புரிதலை விட்டு விட்ட மக்களிடம் முறையிடவும் ஒன்றுமில்லை. புதுப் புது முயற்சிகளில் ஒன்று தான் "விதி"யும். ஆனால் எம்ஜிஆரை நல்லவர் என்றும் நம்பியாரை கெட்டவர் என்றும் இன்றும் நம்பிக் கொண்டிருக்கும் மக்களிடம் விதியின் நாயகனைப் பற்றி என்ன சொல்வது...!
அது பற்றியெல்லாம் கவலை இல்லை. தன்னை முன்னிறுத்தி எதையுமே செய்யாத ஒரு நடிகன். கதாபாத்திரங்களில் வெரைட்டி காட்டிய மோகனை "மைக் மோகன்" என்று அழைப்பதையெல்லாம் நான் அடியோடு வெறுக்கிறேன். நிஜமாக அப்படி என்றாலும் கூட எத்தனை எத்தனை பாவனைகள். அப்படி ஒரு முக உடல் பாவனையில் வெளுத்து வாங்கும் மோகன்... டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டில் கவலையே படாமல் நடித்தவர்.
யோசித்து பாருங்கள். "மௌன ராகம்" படத்தில் அந்தப்பக்கம் கார்த்திக் வெளுத்துக் கொண்டிருக்கும் போது இந்தப் பக்கம் நிகராக நிற்க மோகன் எத்தனை வலிமையாக இருந்திருக்க வேண்டும். ரஜினிக்கே டப் கொடுத்த நடிகர் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.
"நிலவு தூங்கும் நேரம்" என்று அவர் வாயசைத்ததால் தான் இன்றும் நில்வு தூங்குகிறது என்று கற்பனையில் திளைக்கும் அக்காக்களை நான் அறிவேன். "வா வெண்ணிலா உன்னை தானே... வானம் தேடுது..." - வேறு யார் தேடி இருந்தாலும்.... சரியா இருக்குமா என்று தெரிய வில்லை. "மலையோரம் வீசும் காற்று" பாட்டுக்கு எதிர் பாட்டு என்ன பாடுவீர்கள். "கோபுரங்கள் சாய்வதில்லை" போன்ற படத்திலும் தன்னை நிரூபிக்க முடியும். "ஓசை" போன்ற படத்திலும் தன்னை நிறுத்திக் கொள்ள முடியும்.
"24 மணி நேரம்" "ருசி" "பாசப் பறவைகள்" "இளமைக் காலங்கள்" "தென்றலே என்னைத் தொடு" "டிசம்பர் பூக்கள்" என்று அத்தனையும் நூறு நாட்கள் படங்கள்.
முன்னணி கதாநாயகர்கள் தயங்கும் பாத்திரங்களை ஜஸ்ட் லைக் தட் நடித்து விட்டு போக கூடியவர் மோகன். சவாலான பாத்திரங்களில் தன்னை புகுத்தி கொண்டே இருந்த மனிதனை தமிழ் சினிமா உலகமும் சரி........ரசிக உலகமும் சரி....... ஒரு கட்டத்தில் தூக்கி வீசியது. என்னென்னவோ கதை விட்டது.
நிறைய நூறு நாட்கள் படம்... நிறைய வெற்றி படங்கள்.... யோசிக்கவே முடியாது....சாத்தியம் பற்றி.!
74 படங்களுக்கு சுரேந்தர் தான் மோகனுக்கு குரல் கொடுத்திருக்கிறார். ஆனால்...இருவரும் ஒரு நாள் கூட பேசிக் கொண்டது இல்லை
என்பது தான் சினிமா முரண்.
தனக்கு இருக்கும் குறைகளை அப்படியே பாசிட்டிவாக மாற்றி ஒரு வெற்றி விழா நாயகனாக தன்னை மாற்றிக் கொண்ட மோகன் இனி நடிக்க தேவை இல்லை. அது தான் அழகும் கூட. உச்சம் தொட்ட பிறகு அங்கே தொட்டவன் இருக்க கூடாது என்பது தான் விதி. அது தான் மோகனுக்கும் நடந்தது. மிக அற்புதமாக அவரே சினிமாவை விட்டு வெளியேறி விட்டார். அந்த வெற்றிடத்தை மீண்டும் மீண்டும் மோகன் படங்களே நிரப்பிக் கொண்டே இருக்கும். அவர் குடும்பம் பற்றியோ அவரின் தனிப்பட்ட வாழ்வு பற்றியோ எதுவுமே தெரிவதில்லை. அப்படித்தான் இருக்க வேண்டும். மோகன் என்றொரு நடிகனை தனியாக அடையாளமே காண முடியாது. அந்தந்த பாத்திரங்களாகத்தான் காண முடியும். அதுதான் அவரின் சிறப்பு.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...