தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மகள் செந்தாமரை, தடையை மீறி, திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றார். அவர்களை போலீசார் தடுக்கவில்லை.
கொரோனா பரவலால், 14வது மாதமாக, திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், கிரிவலத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மதியம், 12:18 முதல், நேற்று காலை, 9:58 மணி வரை, சித்ரா பவுர்ணமி திதி இருந்தது.அந்த நேரத்தில் கிரிவலம் செல்ல தடை விதித்து, கலெக்டர் சந்தீப் நந்துாரி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மகள் செந்தாமரை மற்றும் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் மகனும், தி.மு.க., மருத்துவ அணி மாநில துணைத் தலைவருமான கம்பன் உள்ளிட்ட மூன்று பேர், முக கவசம் அணிந்து, கிரிவலம் சென்றனர்.
இவர்கள் மூவரும், இரவு, 8:50 மணியளவில், கிரிவலப் பாதையில், அடி அண்ணாமலை கிராமத்தை கடந்த போது, 'இவர்களை மட்டும் எப்படி கிரிவலம் செல்ல அனுமதித்தனர்' என, உள்ளூர்வாசிகள் கேள்வி எழுப்பினர். அந்த பகுதியில், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரும், கிரிவலப் பாதையில் ஆங்காங்கே இருந்த போலீசாரும், இவர்களை கண்டுகொள்ளவில்லை.
இது குறித்து, கலெக்டர் சந்தீப் நந்துாரியிடம் கேட்க முயன்றபோது, மொபைலில் தொடர்பு கொள்ள முடியவில்லை. பி.ஆர்.ஓ., முத்தமிழ் செல்வன் கூறுகையில், ''மாவட்ட நிர்வாகத்திடம், ஸ்டாலின் மகள் கிரிவலம் செல்ல அனுமதி கேட்கவில்லை; அனுமதியும் தரவில்லை,'' என்றார்.
கம்பன் கூறுகையில், ''நான் யாருடன் சேர்ந்தும் கிரிவலம் செல்லவில்லை. கிரிவலம் செல்வது போன்று, தற்போது வெளியான படம், இரண்டு மாதங்களுக்கு முன் எடுத்த பழைய படம்,'' என்றார்.
No comments:
Post a Comment