அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம், உடல் நலக்குறைவால், காலமானார்.
சென்னை, அடையாறு இந்திரா நகரில் வசித்து வந்தவர், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம். உடல் நலம் பாதிக்கப்பட்டு, சென்னை கிண்டியில் உள்ள தனியார் மருத்துவ மனையில், சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மாலை காலமானார். இவர், கோவை மேற்கு மற்றும் தொண்டாமுத்துார் தொகுதிகளில் இருந்து, தலா இரண்டு முறை, எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டார்.
எம்.ஜி.ஆர்., அமைச்சரவையிலும், ஜெயலலிதா அமைச்சரவையிலும், கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்தவர். எம்.ஜி.ஆர்., மறைவுக்கு பிறகு, அ.தி.மு.க.,வானது, ஜெ., அணி, ஜானகி அணி என பிரிந்த போது, ஜெயலலிதாவுக்கு பக்கபலமாக இருந்தார். கடந்த, 2006ல் அ.தி.மு.க.,வில் இருந்து விலகி, தி.மு.க.,வில் இணைந்தார். பின், 2014ல் தி.மு.க.,வில் இருந்தும் விலகினார். அதன்பின், அ.தி.மு.க.,வில் இணைந்தார். இவரது மனைவி கலைச்செல்வி, மகன்கள் சந்தான பாண்டியன், முருகன் அதியமான். மகள் பெயர் பாவைமலர்.
அரங்கநாயகம், கல்வி அமைச்சராக பதவி வகித்த காலத்தில் தான், தனியார் பொறியியல் கல்லுாரிகளுக்கு அதிக அளவில் அனுமதி அளிக்கப்பட்டது. இவரின் மறைவுக்கு, முதல்வர் பழனிசாமி., துணை முதல்வர் பன்னீ்ரசெல்வம்., தமிழக பா.ஜ., முருகன் உட்பட, பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment