சிவனின் ஐந்து முகங்கள் நமக்கு சொல்லப்பட்டு இருக்கிறது.ஈசானம்,தற்புருஷம்,அகோரம்,வாமதேவம் ,சத்யோஜாதம்என நான்கு திசைகளும் மற்றும் மேல்நோக்கிய திசை எனவும் மொத்தம் ஐந்து திசைகளிலும் நம்மை சிவம் காத்து வருகிறது.
ஈசானம் என்பது ஈஸ்வரன் அதாவது ஆள்பவனைக் குறிக்கும்.இவன் அருளும் இயல்புடையவன்.சிவத்தின் முடி ஈசானம் என வணங்கப்படும்.இத்திருமுகத்தினின்று நமக்கு எட்டு ஆகமங்களை சிவம் நமக்கு அருளியது.
தற்புருஷம் முகம் கிழக்கு திசை குறித்தானது. 'தத் ' என்றால் அது அதாவது இறைவன்.புருஷன் என்றால் உயிர்.உயிர்க்கு உயிராய் இறைவன் மறைத்தல் தொழில் செய்யும் இது சிவத்தின் இரண்டாவது முகம் .இம்முகம் வாயிலாக சிவம் ரிக்வேதமும் மேற்கொண்டு ஐந்து ஆகமங்களும் அருளினார்.
அகோரம் தெற்கு திசைக்கு ஆனது இம்முகத்தின் வாயிலாக சிவம் அழித்தல் தொழில் செய்யும்.இது உயிர்களின் பாவத்தை அழிக்கும் முகம்.கோரம் என்றால் பாவம். அகோரம் என்றால் பாவத்தைப்[ போக்குவது. அவர்தம் இதயக்கமலத்தில் வீற்று இருந்து வணங்கப்பெறும்.சிவம் . இம்முகத்தில் இருந்துதான் யஜுர்வேதத்தையும் மேலும் ஐந்து ஆகமங்களையும் நமக்கு அருளினார்.
சத்யோஜாதம் ஈஸ்வரனின் மேற்கு திசைக்கு உரியது.சிவம் படைத்தல் தொழிலை இம்முகம் வாயிலாக மேற்கொள்ளும்.சத்யோ என்றால் விரைவு,ஜாதம் என்றால் தோற்றுவித்து எனப்பொருள் . .சத்யோஜாதம் ஈசனின் பாதக கமலங்களை குறிக்கும்.இம்முகத்தினின்று ஈசன் சாமவேதமும்,ஐந்து ஆகமங்களையும் படைத்து அருளினார்.
வாமதேவம் வடக்கு திசைக்கு உரியது.வாமம் என்றால் அழகு அல்லது இன்பம் என்று பொருள்.இம்முகம் வாயிலாக சிவம் உயிர்களை காக்கும் தொழில் செய்கிறது.இம்முகத்தினின்று அதர்வண வேதத்தையும் கூடுதலாக ஐந்து ஆகமங்களையும் அருளினார்.
இப்படியாக சிவம் தம் ஐந்து முகங்களினின்று படைத்தல்,காத்தல்,மறைத்தல்,அழித்தல்,அருளல் என ஐந்து தொழில்களையும் செய்து கொண்டே இருப்பதுடன்,உயிர்கள் உய்ய நான்கு வேதங்களையும் 28 ஆகமங்களையும் அருளினார்.
இருபெத்தெட்டு ஆகமங்களையும் சிவர்கள் பத்து பேருக்கும்,உருத்திரர்கள் பதினெட்டு பேருக்கும் 'பிரதிசங்கிதை ' முறையில் ஆளுக்கு ஒன்று என உபதேசித்தார்.
இத்தனையும் மனதில் உள்வாங்கிக் கொண்டு , நமக்கு அருளாளர்கள் சொல்லிச் சென்ற ஒரு எளிய வழியை நாம் பின்பற்றலாம்.. .நடராஜர் திரு உருவத்தை மனதினுள் பொறுத்திக்கொள்ளுங்கள் . அவரது தூக்கிய திருவடி 'ந'(சத்யோஜாதம்-படைத்தல்)அவரது வயிற்றுப்பகுதி "ம" (வாமதேவம்-காத்தல்).அவரது இதயம் பொருந்திய மார்பு 'சி' (அகோரம்-அழித்தல்)நடராஜராது திருமுகம் 'வா' (தற்புருஷம்-மறைத்தல்).கடைசியாக அவன் விரிசடை 'ய'(ஈசானம்-அருளல்) இப்படியாக எளிமையாக மனதினுள் நடராஜர் திரு உருவத்தையும் அத்துடன் ஐந்தெழுத்து மந்திரத்தையும் தியானித்துக் கொள்ளுங்கள்.
இப்பொழுது பூஜை அறை முன் அமர்ந்து நூற்றியெட்டு உருத்திராட்ச மணிகள் கொண்ட மாலையை கையில் எடுத்துக்கொண்டு நடராஜரின் திரு உருவத்தினை மனதினில் நிறுத்தி "நமசிவாய "பஞ்சாட்சரம் சொல்லுங்கள்.
ஒவ்வொருமுறை செல்லும்போதும் ந சொல்லும்போது நடராஜரின் தூக்கிய திருவடியையும்,ம சொல்லும்போது உந்தியையும்,சி சொல்லும்போது மார்பையும்,வா சொல்லும்போது முகத்தையும் ய சொல்லும்போது அவன் விரிசடையையும் நினைத்துக்கொண்டே ஜெபம் செய்யுங்கள். இது மிக எளிதாக பழகிவிடும்.
நூற்றியெட்டு முறை ஐந்தெழுத்தை இவ்வாறு ஜெபிக்க அதிகபட்சம் எட்டு நிமிடங்கள்தான் ஆகும்.முயன்று பாருங்கள்..மனதினுள் சிவ சிந்தனை நிரம்பும்.. இத்தியானத்தை குளித்து திருநீறு பூசி எவர் வேண்டுமானாலும் பயன் பெறலாம்.
சைவ சித்தாந்த நூல் "உண்மை விளக்கம்" இப் பகுதியினை சிறப்பாக சொல்கிறது.
"ஆடும்படி கேள் நல் அம்பலத்தான் ஐயனே
நாடும் திருவடியிலே நகரம் -- கூடும்
மகரம் உதரம் வளர்தோள் சிகரம்
பகரும்முகம் வாமுடியப் பார்."
- உண்மை விளக்கம்.
No comments:
Post a Comment