பண்டரிபுரம் பூலோக வைகுண்டம் என்று பலமுறை சொல்லப்படுகிறதே..!!...
அங்கு அப்படி என்ன தான் விசேஷம்?
தெருவெல்லாம் பாலாக ஓடுகிறதா?
எவருக்குமே எப்போதுமே பசியின்றி யதேஷ்டமாக ஆகாரம் இலவசமா?
யாருக்குமே காசே அவசியம் இல்லாத ஊரா?
துணியெல்லாம் இலவசமா?
வீடுகளை ராஜாவே தன் செலவில் எல்லாருக்கும் கட்டிக்கொடுத்தானா?
இப்படிக் கேட்போருக்கு ஒரு பதில் தான் விடையாகும். "வைகுண்டம் என்றால் இது தான் உங்கள் நினைப்பா?"
இறைவன் மனிதனாகவே, மனித உணர்வுகளுடன், மனிதர்களோடு, கலந்து, பழகி, பேசி, உண்டு, உறங்கி, களித்து, ஆங்காங்கு தேவைப்பட்ட இடத்தில் தனது அமானுஷ்ய சக்தியைச் சிறிது வெளிப்படுத்தி அவர்களோடு சந்தோஷமாக வாழ்ந்தானே அந்தக் காலம்-- அந்த இடம், பண்டரிபுரம் தான் பூலோக வைகுண்டமாக இருந்தது,
வைகுண்டம் விட்டலன் ருக்மணியோடு இருக்கும் இடம். அங்கு இருப்போர் அனைவரும் அவனைச் சதா கண்டு, களித்து மகிழும் இடம். அங்கு செல்ல, இப்படி அனுபவிக்க, தனித்தகுதி வேண்டுமே.
எல்லோராலும் முடியாதே. அதெல்லாம் ஒன்றுமே இல்லாமல் நாம் இருக்கும் இடத்திற்கு அவன் வந்து நம்மோடு பழகி மகிழ்வித்த போது நாம் வாழும் இடம் பூலோக வைகுண்டம் ஆகிவிடுகிறது.
விட்டலன் நாமதேவரைப் பிரிய முடியாதவன். அவர் வீட்டில் ஜனாபாய் வளர்ந்து சிறப்பாக ஆன்மீக வாழ்வு வாழ தேர்ச்சி அடைந்தபோது அவள் குடிசையும் விட்டலன் அடிக்கடி நடமாடும் ஒரு இடம் ஆனதில் என்ன ஆச்சர்யம்!.
விட்டலன் ஜனாவின் குடிசையில் அமர்ந்து அவள் பாடும் அபங்கங்களை ரசித்துக் கொண்டிருந்தான்.
சில நேரங்களில் அவள் விட்டலனின் ஆலயத்திலும் அபங்கங்களை இயற்றி பாடி அவனை மகிழ்விப்பாள். ஒரு நாள் ஆலயத்தில் விட்டலன் எதிரே ஜனா ஒரு புது அபங்கம் இயற்றி அதை பாடிக் காட்டினாள்.
"ஜனா இந்த அபங்கம் வெகு அருமையாயிருக்கிறது. நீ சொல்லிக்கொண்டே வா. நான் எழுதுகிறேன்" என்று அவள் பாடிக் கொண்டே வரும்போது அடி அடியாக விட்டலன் அதை எழுதிக் கொண்டு வந்தான்.
அந்த நேரம் பார்த்து ஞானதேவர் ஆலயத்திற்குள் நுழைந்தவர் தூரத்திலிருந்தே ஆனந்தமாக ஜனாவின் அபங்கத்தை ரசித்துக் கொண்டே வந்தார்.
உள்ளே நுழைந்த ஞானதேவர் ஜனா பாடிக்கொண்டிருப்பதையும் விட்டலன் அவரைக்கண்டதும் தன கையை பின்னால் , மறைத்துக்கொண்டு சிரிப்பதையும் பார்த்தார். அவருக்கு ஆச்சர்யமாக இருந்தது
"விட்டலா என்ன செய்துகொண்டிருந்தாய்?
"ஒன்றுமில்லையே"
"என்னைக்கண்டதும் ஏதோ பின்னால் மறைத்தாயே ?
" அதுவா? ஜனா அபங்கம் ஏதோ புதியதாக பாடினாள், அதை எழுதிக்கொண்டிருந்தேன்."
"ஞானதேவர் இடி இடி என்று சிரித்தார் உடம்பு குலுங்க. என்னது, ஜனா அபங்கம் இயற்ற நீ அதை ஸ்ரத்தையாக எழுதினாயா?
"இதில் சிரிக்க என்ன இருக்கிறது?
"விட்டலா, ஜனா ஒரு குழந்தை. வாயைத் திறந்தாலே உன்னைப்புகழ்வது ஒன்று தான் அவள் வேலை. அவள் அபங்கம் உன்னையே புகழ்ச்சியாக பாடியதாக இருக்குமே.
உன்னைப் பற்றிபுகழ்ச்சியாகப் பாடியதை நீயே எழுதிக் கொண்டிருந்தாயா ?
" ஆம். ஞானதேவ். அவள் இயற்றிய இந்த அபங்கம் மிகவும் உண்மையான அன்பினால் மனத்தூய்மையோடு உருவானது. எனவே தான் என்னைக் கவர்ந்தது."
"அது சரி உன்னை ப்பற்றி இன்னும் எத்தனை எத்தனையோ பேர் எல்லாம் பாடி இருக்கிறார்களே அவற்றையெல்லாம் நீ ஏன் எழுதிக்கொள்ளவில்லை?"
"நல்ல கேள்வி கேட்டாய் ஞானதேவ். எவ்வளவோ கை தேர்ந்த சித்திரக்காரர்கள் வரைந்த விலையுயர்ந்த சித்திரங்கள் இருந்தும், ஒரு தாய்க்கு தனது சிறு குழந்தை குழந்தை கஷ்டப்பட்டு தான் தீட்டியதாக கொண்டு தரும் ஒரு கிறுக்கல் ஓவியம் தான் மிக்க சந்தோஷத்தை அளிக்கும் என்பதை நீ எவ்வளவு சுலபத்தில் மறந்து விட்டாய் பார்த்தாயா?".
"விட்டலா, பாண்டுரங்கா, பிரபோ" என்பதற்கு மேல் வார்த்தை எழவில்லை ஞானதேவுக்கு.
விட்டலனைக் கொள்ளை கொண்ட ஜனாபாய் இயற்றிய அபங்கங்கள் அவளது அடி மனத்திலிருந்து எழும்பிய ஆழ்ந்த பக்தியைக்கொண்டு ஆசை ஆசையாக விட்டலனுக்கு அற்பணித்தவை அல்லவா? இதனால் தான் இறைவன் வேண்டுவோர்க்கு வேண்டியவனாகிறான்.
No comments:
Post a Comment