எப்போதுமே சோனியா காந்தியை சந்தித்து கொண்டு இருக்க வேண்டுமா .. இது ஒன்றும் அரசியல் சாசன கட்டாயம் கிடையாது என்று அதிரடியாக கூறியிருக்கிறார் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும் மேற்கு வங்க மாநில முதலமைச்சருமான மம்தா பானர்ஜி.
கடந்த இரு லோக்சபா தேர்தல்களில் நாடு முழுக்க காங்கிரஸ் கட்சி சோபிக்க தவறிவிட்டது. எனவே 2024ம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியாக, எதிரணியின் தலைமையை ஏற்க வேண்டும் என்ற முனைப்பு மமதா பானர்ஜியிடம் இருக்கிறது.
மேற்கு வங்க மாநிலத்தில் பாஜகவின் பெரிய சவால்களை முறியடித்து இந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடித்த உத்வேகம் மற்றும் வியூகம் போன்றவை மம்தா பானர்ஜியை தேசிய அரசியலை நோக்கி தள்ளிக்கொண்டு செல்வதை கவனிக்க முடிகிறது.
வலு இல்லாமல் இருக்கும் காங்கிரசை புறம் தள்ளிவிட்டு எதிர்க்கட்சிகளை தனது பின்னால் ஓரணியில் திரட்டும் முயற்சியில் அவர் இறங்கி உள்ளார். இந்த நிலையில்தான் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பல முக்கிய தலைவர்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்து ஆரம்பித்துள்ளனர்.கடந்த வாரங்களில், கோவாவில் லூயிசின்ஹோ ஃபலேரோ, மறைந்த ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி, சில்சாரின் முன்னாள் காங்கிரஸ் எம்பி மற்றும் மறைந்த காங்கிரஸ் பிரமுகர் சந்தோஷ் மோகன் தேவின் மகள் சுஷ்மிதா தேவ் உள்ளிட்ட பல தலைவர்கள் திரிணாமுல் காங்கிரசுக்கு வந்துள்ளனர். எல்லாவற்றையும் விட பெரிய அடியாக, மேகாலயாவில் உள்ள 17 காங்கிரஸ் எம்எல்ஏக்களில் 12 பேர் திரிணாமுல் காங்கிரசுக்கு தாவ தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மன்மோகன் சிங் காலத்தில் மத்திய ரயில்வே துறை அமைச்சராக இருந்தவர் மம்தா பானர்ஜி. சோனியா காந்தியுடன் நல்ல உறவு இருந்தது. ஆனால் காங்கிரஸ் கட்சியில் இருந்து பலரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு செல்ல தொடங்கி இருப்பதால் இந்த உறவில் பிணக்கு ஏற்பட்டு இருக்கிறது.மம்தா பானர்ஜியின் பேச்சும் அதை எதிரொலிக்கிறது .
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நீங்கள் சந்திப்பீர்களா என்று நிருபர்கள் மம்தா பானர்ஜியிடம் நேற்று கேள்வி எழுப்பிய போது, அவர்கள் பஞ்சாப் தேர்தலில் பிஸியாக இருக்கிறார்கள் என்று பதிலளித்தார். பின்னர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை.. பேட்டியை தொடர்ந்த மம்தா பானர்ஜி .. எதற்காக ஒவ்வொருமுறையும் சோனியா காந்தியை சந்திக்க வேண்டும், அது ஒன்றும் அரசியல் சாசன கட்டாயம் கிடையாது என்று தடாலடியாக தெரிவித்தார். இதன் மூலம் சோனியா காந்தியை சுற்றிதான் சுழல வேண்டும் என்ற அரசியல் சூழல் இப்போது கிடையாது என்பதை ஆணித்தரமாக அழுத்தம் திருத்தமாக பதிவு செய்துவிட்டார் மம்தா பானர்ஜி. அடுத்த லோக்சபா தேர்தலுக்கான சங்க நாதமாக மம்தா பானர்ஜியின் இந்த பேச்சு பார்க்கப்படுகிறது.
பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியை நேற்று டெல்லியில் சந்தித்து பேசினார் மம்தா பானர்ஜி. ஏற்கனவே பாஜக தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் சுப்பிரமணியன் சுவாமி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேருவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுபற்றி நிருபர்கள் சுப்பிரமணியன் சுவாமியிடம் கேட்டபோது, நான் ஏற்கெனவே மம்தா பானர்ஜி பக்கம்தான், எனவே கட்சி மாற வேண்டிய அவசியம் கிடையாது என்று தெரிவித்தார். மேலும், ராஜீவ் காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்களுக்கு ஈடானவர் மம்தா பானர்ஜி என்று ட்விட்டரில் தெரிவித்திருந்தார், சுப்பிரமணியன் சுவாமி.
வருங்கால பிரதமர் ராகுல் காந்திக்கு திமுகவின் ஆதரவு எப்போதும் உண்டு என்று இரண்டொரு மாதங்களுக்கு முன்பு தான் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது...
No comments:
Post a Comment