சிலர், 'எந்தப் பிரச்சனையும் இல்லாமல் வாழ வேண்டும்; ஆனால் உயர்ந்த பதவி வேண்டும்; கௌரவம் வேண்டும்; எந்த சங்கடமும் இல்லாமல் பொருள் ஈட்ட வேண்டும்' என்று நினைப்பது உண்டு. இது, சாலையில் எந்த வாகனமும் இல்லாத போதுதான் நான் ஊர்தியை ஓட்டுவேன் என்று கூறுவதைப் போன்றது.
நம் முன்னே தோன்றும் பிரச்சினைகள் நம்மைத் திடப்படுகின்றன. சில நேரங்களில் மேன்மைப்படுத்துகின்றன. நம்முடைய உள்ளத்தை இன்னும் விசாலமாக்குகின்றன. எதிர்ப்புகளுக்கு இடையில் வளரும்போது தான், நம்முடைய உந்து சக்தி அதிகரித்து மனித ஆற்றல் முழு அளவில் வெளிப்படுகிறது. மான்களுக்கு, சிறுத்தைகள் துரத்தும் வரை 'நம்மால் இவ்வளவு வேகமாக ஓட முடியுமா?' என்கிற சந்தேகம் இருக்கவே செய்கிறது.
எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு உண்டு. சிறிது நேரம் விலகி இருந்து மனதை நிர்மலமாக மாற்றிக்கொண்டு ஆழமாக சிந்தித்தால், விடை காணமுடியும். அதிலேயே முழுவதுமாக மூழ்கினால் மூச்சுத் திணறிவிடுவோம். நம்மால் எதையும் தீர்க்க முடியும் என்று நம்புவது தான் அந்த பிரச்சினைக்கான காரணங்களையும், அவற்றைப் போக்கும் விதங்களையும், விதங்களினால் ஏற்படும் எதிர்வினைகளையும் சிந்திப்பதற்கு உதவியாக இருக்கும்.
சின்ன எதிர்ப்பைக்கூட மலையாக நினைப்பவர்கள் மலைத்துப் போகிறார்கள். அதை அலையாக நினைப்பவர்கள் அதிர்ந்து விடுவதில்லை. துணிந்து நிற்கிறார்கள். பணிந்து விடுவதில்லை.
பழங்காலத்தில் ஒரு அரசர் இருந்தார். பக்கத்து நாட்டு அரசர், அவருக்கு வாட்டசாட்டமான யானை ஒன்றை பரிசாக அளித்தார். அந்த அரசர், இதுவரை இவ்வளவு பெரிய யானையை பார்த்ததே இல்லை. அதன் எடையை அறிய வேண்டும் என்கிற ஆவல் அரசருக்கு ஏற்பட்டது. அந்தக் காலத்தில் எடைமேடைகள் எல்லாம் இல்லை. யானையை அளக்கும் அளவுக்கு தராசும் இல்லை. "இந்த யானையின் எடையை எப்படி அறிந்து கொள்வது?" என்று மந்திரிகளிடம் கேட்டார் அரசர்.
எவருக்குமே விடை தெரியவில்லை. அப்போது மந்திரிகளில் ஒருவருடைய மகன், "நான் இதன் எடையைச் சரியாகக் கணித்துச் சொல்கிறேன்". என்று முன்வந்தான். அவனுக்குப் பத்து வயது தான் இருக்கும். அவனைப் பார்த்து எல்லோரும் சிரித்தார்கள்.
அரசர் அவனுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தார். அவன் அந்த யானையை அருகிலிருந்த நதிக்கு அழைத்துச் சென்றான். அங்கு மிகப் பெரிய படகு ஒன்று இருந்தது. அவன் யானையை அந்தப் படகில் ஏற்றினான். யானை ஏறியதும் தண்ணீரில் ஆழ்ந்தது. தண்ணீர் நனைந்த நீரின் மட்டத்தை குறிக்கப் படகில் குறியீடு செய்தான். பிறகு யானையைப் படகிலிருந்து இறக்கினான். பின்னர் பெரிய பெரிய கற்களைப் படகில் நிரப்பினான். ஏற்கனவே குறியீடு செய்த நீரின் அளவு வரும் வரை அவன் கற்களை பலவித அளவுகளில் நிரப்பச் செய்தான்.
யானை ஏறியபோது படகு எந்த அளவு தண்ணீரில் மூழ்கியதோ அந்த கோடு வரும் வரை கற்களைப் போட்டார்கள். பிறகு, கற்களை ஒவ்வொன்றாக எடுத்து எடை போட்டு, அவற்றின் எடையைக் கூட்டினான். பிறகு அரசரிடம் 'இதுதான் இந்த யானையின் எடை' என்று கூறிய போது, எல்லோரும் அவன் திறமையை கண்டு வியந்து போனார்கள்.
எல்லோரும் யானையை ஒட்டுமொத்தமாக பார்த்தார்கள். அதனால்தான் அவர்களால் அதன் எடையைக் கணிக்கமுடியும் என்று நினைக்க முடியவில்லை. ஆனால் அவன், 'யானை பல எடைகளின் கூட்டுத்தொகை' என்று எண்ணினான். எனவே எளிதில் விடை கண்டான். எவ்வளவு பெரிய செயலாக இருந்தாலும் அதைச் சின்னச் சின்ன செயல்களாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். பிறகு அந்த ஒவ்வொரு செயலையும் செவ்வனே செய்து முடிக்கவேண்டும். அப்போது ஒட்டுமொத்தத் திட்டமும் அழகாக நிறைவேறிவிடும்.
அந்தக் காலகட்டத்தில் கட்டப்பட்ட கோயில்களையும், கோபுரங்களையும் பார்க்கலாம். அவற்றை கட்டும்போது சின்னச்சின்ன பணிகளாக திட்டமிட்டு, பிறகு ஒவ்வொன்றையும் அவர்கள் முழு ஆர்வத்துடன் செயலாக்கி பிரம்மாண்டமான வடிவத்தை உண்டாக்கினார்கள்.
பெரிய பிரச்சினைகள் வரும்போது, அவற்றை நாம் சின்னச்சின்ன பகுதிகளாக பிரித்துப் பார்க்க வேண்டும். வரிசைக்கிரமமாக அவற்றை ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும். பிறகு, வரிசையாக அவற்றை தீர்க்க ஆலோசனைகளை மேற்கொள்ள வேண்டும். அந்த ஆலோசனைகளில் சிறந்த ஆலோசனையைச் செயல்படுத்த வேண்டும். அப்போதுதான் மலைப் போன்ற செயலை எளிதில் நிறைவேற்ற முடியும்.
மகத்தான செயலைச் சரியாக திட்டமிடும் போது பாதி நிறைவேறியதாக பொருள். பிறகு அதை ஆர்வத்துடனும், மகிழ்ச்சியுடனும் செய்ய வேண்டும். செயலைச் செய்யும்போதே மகிழ்ச்சி ஏற்பட வேண்டுமே தவிர, செய்த பிறகு மகிழ்ச்சி வரும் என்று எண்ணக்கூடாது.
சிறிய வயதில் நமக்கு நிறைய ஆலோசனைகள் கிடைக்கும். வளரவளர நமக்கு ஒரு பிரச்சினையை தீர்ப்பதில் அதிக வழிகள் கிடைப்பதில்லை. காரணம், பயம். சின்னக் குழந்தைகள் 'நம்மை பற்றி அடுத்தவர்கள் என்ன நினைத்தால் என்ன' என்று எதற்கும் கவலைப்படாமல் தங்கள் பதில்களை கூறுவார்கள்.
வயதானவர்களோ 'நாம் சொல்வதைக் கேட்டு மற்றவர்கள் சிரித்தால் என்னவாவது, ஏளனம் செய்தால் அசிங்கமாயிற்றே, நையாண்டி செய்தால் நம் கௌரவம் போய்விடுமே!' என்று எண்ணிக் கொள்கிறார்கள். இப்படி நமக்குள்ளேயே தணிக்கை செய்து விஷயங்களை வெளியே அனுப்புவதால், நல்லவற்றை தங்கி அல்லவற்றை வெளியேற்றுகின்றன.
சில நாடுகளில், நிறுவனங்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு 'மூளைப் புயல்' என்கிற நிகழ்ச்சியை நடத்துவது உண்டு. அதில் நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களையும் அழைப்பார்கள். யார் வேண்டுமானாலும் தீர்வு சொல்லலாம். கடைநிலை ஊழியர்களும் வழிமுறைகளைச் சொல்ல தடையில்லை என்கிற சுதந்திர தன்மையுடன் அந்தக் கூட்டங்கள் இயங்கும். அனைவருமே அந்த கூட்டத்தில் சமமானவர்களாக கருதப்படுவார்கள். சில நேரங்களில் எதிர்பாராத சிக்கலில் இருந்து மிகச் சிறந்த ஆலோசனைகள் வந்து விழுவதுண்டு. அங்கு எந்த யோசனையும் முட்டாள்தனமானது என்று நிராகரிக்கவோ, நிந்தனை செய்யவோ கூடாது என்பது நிபந்தனை.
இன்று, தான் விரும்பிய படிப்பு கிடைக்காவிட்டாலோ, வேண்டிய பணியை அடையாவிட்டாலோ, எதிர்பார்த்த பெண்ணை திருமணம் செய்ய முடியாவிட்டாலோ சோர்ந்துவிடும் இளைஞர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் மகிழ்ச்சி என்பது ஒரே மண்டலத்தில் மையம் கொண்டு இருப்பதாக கற்பனை செய்யும் வாழ்க்கை வானியல் நிபுணர்கள். அவர்கள், எல்லா இடங்களிலும் ஏற்கனவே செய்து கொண்டிருக்கும் பருவ மழையை ரசிக்க முடியாதவர்கள்.
நம் வாழ்வை எத்தனையோ வகைகளில் பொருள் பொதிந்ததாக மாற்றிக்கொள்ள முடியும். அது குறிப்பிட்ட படிப்பினாலோ, பணியினாலோ, வாழ்க்கை இணையினாலோ மட்டுமே நிர்ணயிக்கப்படுவதில்லை. இலக்கை மனதில் வைத்து இயக்கத்தை மேற்கொள்வது நன்றுதான். ஆனால், அது நிறைவேறாத போது அடுத்த துணை இலக்கை ஏற்கனவே மனம் தயாரிப்பு செய்து வைத்திருப்பது அவசியம். அப்போதுதான் சிறிதும் கவனம் பிசகாமல் நம் ஆற்றலை நேர்வழியில் செலுத்த முடியும்.
உலகத்தில் இருக்கும் பெரும்பாலோர் எதிர்பார்த்தபடி வாழ்க்கை அமையப் பெறாதவர்கள் தான். ஆனால் அவர்கள் அதையும் இன்னொரு அனுபவமாக ஏற்றுக்கொண்டு தொடர்ந்து முயற்சி செய்து வென்றவர்கள். சில நேரங்களில் ஏற்படுபவை, நாம் எதிர்பார்ப்பைக் காட்டிலும் மேன்மையானதாக இருப்பது உண்டு. ஏங்கியதைக் காட்டிலும் வாய்த்தது சிறப்பாக அமைவதும் உண்டு. இறந்த காலத்தின் சக்கைகளை அசைப்போடுபவர்களுக்கு, நிகழ்காலத்தின் சாரத்தைச் சுவைக்க முடியாமல் போய்விடுகிறது. எதிர்பார்த்தவற்றை நிறைவேறாவிட்டாலும் வாழ முடியும். ஆனால், வாழ்க்கையே பறிபோய்விட்டால் எதையும் சாதிக்க முடியாது.
எல்லோரும் உயர்ந்த பணியில்தான் உட்காருவேன் என்று முடிவெடுத்தால், இந்த உலகம் வெகுவிரைவில் நசிந்துபோகும். பணியில் உயர்வு அர்ப்பணிப்பில் அடங்கி இருக்கிறதே தவிர, ஆர்ப்பரிப்பில் அர்த்தப்படுவதில்லை. சாதாரணமான பணிகளையும் சாமார்த்தியமாகவும் அசாதாரணமாகவும் செய்து காட்டும் விற்பன்னர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தயிர் கடைவதைக்கூட வீணை வாசிப்பதை போல அக்கறையோடு செய்கிறார்கள். சிலர், கடம் வாசிப்பதை கூட, கடனே என்று செய்கிறார்கள்.
பிரச்சனைக்கான தீர்வு வெளியே இருந்து வரும் என்று நினைப்பதால் மகிழ்ச்சி பறிபோய் விடுகிறது. எல்லா பிரச்சனைகளும் நம்மிடமிருந்தே தொடங்கியவை. அவற்றுக்கான தீர்வை நம்மிடம் தான் இருக்கின்றன ஒவ்வொரு பிரச்சனையும் பாதி தீர்வையும் உள்ளடக்கி இருக்கிறது. பிரச்சனையை முழுமையாக அறிய முயன்றால், அதில் தீர்வும் ஒளிந்து கொண்டிருப்பதை துல்லியமாக பார்க்க முடியும்.
இன்றைய இளைஞர்கள் இரண்டாம், மூன்றாம் தலைமுறையை சார்ந்திருப்பதால் பாதுகாக்கப்பட்ட நாற்றுகளாக இருக்கிறார்கள். அவர்கள் வளர்ந்த பிறகும் அடுத்தவர்களின் அரவணைப்பை எதிர்பார்க்கிறார்கள். கரடு-முரடுகளில் தானாக வளர்ந்த தப்புச் செடியாக இருப்பவர்கள் புயலையும், வெயிலையும் காட்டாற்று வெள்ளத்தையும் திடமான உள்ளத்துடன் தாங்கி பக்குவம் பெறுகிறார்கள்.
பிரச்சனைகள் தான் வெற்றிகளை உருவாக்குகின்றன. அது நுண்ணறிவு உள்ளவர்களுக்கே முதலில் தென்படுகிறது. மனிதன் பறக்க முடியாததுகூட ஒரு பிரச்சனையாக தான் முதலில் கண்டறியப்பட்டது. அதுவே பின்னாளில் ஆகாய விமானம் கண்டுபிடிக்க துணையாக இருந்தது.
எல்லா பிரச்சனைகளும், தொடுவானை நோக்கி நம்மை உயர்த்துவதற்கான கண்ணுக்குத் தெரியாத கணக்கற்ற சிறகுகளை ஒளித்து வைத்திருக்கின்றன என்பதை உணர்ந்தால், மகிழ்ச்சி நம் மனதில் மையமிட்டு தங்கும்.🙏🌹
No comments:
Post a Comment