அ.ம.மு.க.,வை கலைக்கும்படி தினகரனுக்கு சசிகலா நிபந்தனை விதித்துள்ளதால், இருவருக்கும் இடையே யார் பெரியவர் என்ற மோதல் உருவாகியுள்ளது. கட்சியினர் யாரும் சசிகலா உடன் செல்லக்கூடாது என்று தினகரன் தடை விதித்துள்ளார். இருவரின் முரண்பட்ட நடவடிக்கைகள் மற்றும் முடிவுகளால், கட்சி நிர்வாகிகள் பரிதவித்து வருகின்றனர்.
அ.தி.மு.க.,வில் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும் என்பதில், சசிகலா தீவிரமாக உள்ளார். அ.தி.மு.க., பொதுச்செயலர் என அறிவித்துக் கொண்டு, தொண்டர்களை தன் பக்கம் இழுக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார்.
அத்துடன், அ.தி.மு.க.,வின் முன்னணி தலைவர்களை கண்டு கொள்ளாமல், அடிமட்ட தொண்டர்களை சந்திப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். வெளியில் செல்லும் போது, தனக்கு பின்னால், உண்மையான அ.தி.மு.க., தொண்டர்கள் ஐந்து பேர் வந்தால் போதும் என்றும் நினைக்கிறார்.
கருத்து வேறுபாடு
மேலும், அ.ம.மு.க., என்ற கட்சியை, தினகரன் தனியாக நடத்துவது சசிகலாவுக்கு பிடிக்க வில்லை. அக்கட்சியை கலைத்து விட்டு, அ.தி.மு.க., கொடியை பயன்படுத்துங்கள் என, தினகரன் உள்ளிட்ட அ.ம.மு.க., நிர்வாகிகளை அவர் வலியுறுத்தி வருகிறார்.
ஆனால், சசிகலாவின் அ.தி.மு.க., ஆதரவு நிலைப்பாடும், அக்கட்சியில் இணைய அவர் முயற்சிப்பதும், அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரனுக்கு பிடிக்கவில்லை. அவைத் தலைவராக இருந்து, தன் கட்சியை சசிகலா வழி நடத்த வேண்டும் என்று அவர் விரும்புகிறார். இதனால், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு உருவாகியுள்ளது.
இந்நிலையில், சென்னை தி.நகரில் உள்ள சசிகலா வீட்டிற்கு, அ.ம.மு.க., மாநில நிர்வாகிகள், மண்டல பொறுப்பாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் சிலர் சென்றனர். அவர்கள் அனைவரும் சசிகலாவிடம், 'நாங்கள் எல்லாரும் உங்கள் விசுவாசிகள் தான். உங்களுடன் நாங்கள் பயணிக்க, நீங்கள் தான் தினகரனிடம் ஒரு வார்த்தை சொல்ல வேண்டும்' என்று புலம்பி உள்ளனர்.
அதற்கு சசிகலா, 'என்னோடு இணைந்து அ.தி.மு.க.,வை பலப்படுத்த தாராளமாக வாருங்கள்; ஆனால், நான் வெளியில் செல்லும் போது, அ.ம.மு.க., கொடியுடன் வராதீர்கள்; அ.தி.மு.க., கொடியுடன் வாருங்கள். 'தினகரனும் அ.ம. மு.க.,வை கலைத்து விட்டு, என்னுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும். அப்போது தான், நம் பலம் அதிகரிக்கும். நாம் நினைத்ததை சாதிக்க முடியும்' என்று தெரிவித்துள்ளார்.
கட்சியினருக்கு தடை
இப்படி சசிகலாவுடன் அ.ம.மு.க., நிர்வாகிகள் சந்திப்பு ஒருபுறம் நடக்க, மற்றொரு பக்கம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.ம.மு.க., தலைமை அலுவலகத்தில், கட்சி நிர்வாகிகளிடம் தினகரன் தரப்பில் விசாரணை நடந்துள்ளது.அதாவது, பூந்தமல்லி முன்னாள் எம்.எல்.ஏ., - ஆயிரம் விளக்கு பகுதி அ.ம.மு.க., நிர்வாகி உள்ளிட்ட சிலரிடம், 'நீங்கள் ஏன் சசிகலா வெளியில் செல்லும் போது உடன் செல்கிறீர்கள்' என்று தினகரன் உதவியாளர் ஒருவர் கேட்டுள்ளார்.
'சசிகலாவுக்கு பாதுகாப்பு அளிக்க சென்றோம்' என்று அந்த நிர்வாகிகள் கூறியுள்ளனர். 'சசிகலாவுடன் சென்றதற்கு வருத்தம் தெரிவித்து கடிதம் எழுதி கொடுங்கள்' என கேட்டுள்ளார். அதற்கு அந்த நிர்வாகிகள், 'நீங்கள் முதலில் கடிதம் வாயிலாக விளக்கம் கேட்டால், நாங்களும் சசிகலாவிடம் கேட்டு விட்டு விளக்கம் எழுதி தருகிறோம்' என்று பதில் அளித்துள்ளனர்.
பரிதவிப்பு
இந்தச் சூழலில், சென்னையின் பல்வேறு பகுதிகளில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து, சசிகலா நிவாரண பொருட்களை நேற்று வழங்கினார். இந்நிகழ்ச்சியை, தினகரனின் உத்தரவுப்படி, அ.ம.மு.க., மாநில, மாவட்ட நிர்வாகிகள் புறக்கணித்துள்ளனர். நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தும் வகையில், சென்னை பெசன்ட் நகரில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த அ.ம.மு.க., நிர்வாகியையும், தினகரன் தரப்பு இரவோடு இரவாக கடத்தியதாகவும் கூறப்படுகிறது. இதையறிந்த சசிகலா, தன் மற்றொரு ஆதரவாளர் வாயிலாக நிகழ்ச்சியை நடத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அ.ம.மு.க.,வினர் சிலர் கூறியதாவது: சசிகலா, தினகரன் இடையே யார் பெரியவர் என்ற மோதல் ஏற்பட்டுள்ளது. சசிகலாவின் கட்சி கலைப்பு யோசனையை தினகரன் ஏற்க மறுக்கிறார். அதேபோல, தினகரனின் யோசனையை சசிகலா புறக்கணிக்கிறார்.
இருவரும் முரண்பட்ட முடிவுகள் எடுத்து, அதில் உறுதியாக இருப்பதால், யார் பக்கம் சாய்வது என தெரியாமல், தற்போது அ.ம.மு.க.,வில் உள்ள சசிகலா ஆதரவாளர்களாகிய நாங்கள் தவித்து வருகிறோம். இதேபோல, கட்சி நிர்வாகிகள் பலரும், யார் பக்கம் சாய்வது என தெரியாமல் தவித்து வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment