Sunday, November 20, 2022

தமிழக காங்கிரசில் மோதல் முற்றியது- கே.எஸ்.அழகிரி மீது நடவடிக்கை பாயுமா?

 தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்திய மூர்த்தி பவனில் நடந்த மோதல் சம்பவம் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு எதிராக திரும்பும் சூழல் ஏற்பட்டு உள்ளது. சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்ற இந்திரா காந்தி பிறந்தநாள் நிகழ்ச்சியில் இது நேரடியாகவே எதிரொலித்தது. இதில் கே.எஸ்.அழகிரியுடன், காங்கிரஸ் முன்னாள் தலைவர்களான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.வி.தங்கபாலு, கிருஷ்ணசாமி, திருநாவுக்கரசர், சட்டபேரவை காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை உள்ளிட்டோரும் பங்கேற்பதாக இருந்தது. ஆனால் இவர்கள் அனைவரும் கே.எஸ்.அழகிரியுடன் ஒன்றாக கலந்து கொள்ளாமல் நிகழ்ச்சியை புறக்கணித்தனர். பின்னர் அனைவரும் தனியாக சென்று இந்திரா காந்தி படத்துக்கு மரியாதை செலுத்தினர். பின்னர் தனியார் ஓட்டலிலும் அவர்கள் ஆலோசனை நடத்தினர். அப்போது கே.எஸ்.அழகிரிக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றி இந்த தலைவர்கள் விவாதித்ததாக கூறப்படுகிறது. இதனால் காங்கிரஸ் கட்சியில் மோதல் முற்றியுள்ளது. தமிழக காங்கிரஸ் கட்சியில் நடைபெற்று வரும் மோதல் சம்பவத்தை டெல்லி தலைமையும் உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்த நிலையில் கே.எஸ்.அழகிரிக்கு எதிராக வரிந்து கட்டிக்கொண்டு செயல்படும் எதிரணி தலைவர்கள் நாளை டெல்லி சென்று கே.எஸ்.அழகிரி மீது புகார் அளிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்காக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கே.வி.தங்கபாலு, கிருஷ்ணசாமி, திருநாவுக்கரசர் உள்ளிட்ட தலைவர்கள் டெல்லி செல்ல முடிவு செய்துள்ளனர். டெல்லியில் காங்கிரஸ் மேலிட தலைவர்களிடமும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடமும் கே.எஸ்.அழகிரி மீது அவர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூற உள்ளனர். சத்தியமூர்த்தி பவனில் மோதல் சம்பவம் நடைபெற்ற அன்று, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி நடந்து கொண்ட விதம் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது என்று எதிரணியைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் கூறினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- கட்சிக்கு எதிராக செயல்பட்டவர்களுக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது என்கிற குற்றச்சாட்டை கூறுவதற்காகவே நாங்குநேரியை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் சத்தியமூர்த்தி பவனுக்கு வந்திருந்தனர். புதிதாக வட்டார தலைவர் பதவியில் போடப்பட்டுள்ள ஒருவர், திருநாவுக்கரசர் தலைவராக இருந்தபோது கருப்பு கொடி காட்டியவர் ஆவார். பல பதவிகள் விலை கொடுத்து வாங்கப்பட்டு உள்ளது. இதற்கு நியாயம் கேட்டு வந்தவர்களே தாக்கப்பட்டு உள்ளனர். கட்சிக்கு எதிராக செயல்பட்டவர்களை அங்கீகரிப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. அதனை எடுத்துச் சொல்ல வந்தவர்கள்தான் தாக்கப்பட்டுள்ளனர். கே.எஸ்.அழகிரியே ஒருவரை அடிப்பது போன்ற வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. முன்னதாக நடந்த கூட்டத்திலும் கே.எஸ்.அழகிரி நடந்துகொண்ட விதம் சரியானதாக இல்லை. அந்த கூட்டத்தில் அவர் பேசிய விவரங்களையும், சத்திய மூர்த்தி பவன் வளாகத்தில் நடந்து கொண்ட விதம் குறித்தும் டெல்லியில் புகார் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இதன் மூலம் கே.எஸ்.அழகிரியின் பதவி பறிக்கப்படுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. அவருக்கு எதிராக தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்களும், நிர்வாகிகள் பலரும் போர்க்கொடி தூக்கி இருப்பதும், நாளுக்கு நாள் அது வலுவடைந்து கொண்டே செல்வதும் காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள மோதலை மேலும் அதிகரிக்கவே செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் கே.எஸ்.அழகிரி தரப்பிலும் டெல்லி மேலிடத்தில் புகார் அளிக்கப்பட உள்ளது. பிரச்சினை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் நாங்குநேரியில் இருந்து புறப்பட்டு சத்திய மூர்த்தி பவனுக்கு வந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட உள்ளது. இதனால் மோதலுக்கு காரணமான நாங்குநேரி நிர்வாகிகள் மீதும் நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...