உறவினர் வீட்டு செய்முறைக்காக அவசர அவசரமா மண்டபத்துக்கு ஓடினேன்... மண்டபத்துக்கு வெளியில் ஒரு பெரியவர் கையில் ஒரு சின்ன தூக்கு வாளியோடு தயக்கத்துடன் தம்பினு கூப்பிட்டாரு... என்னங்க தாத்தானு கேட்டேன்... அதற்கு பிறகு அவருடன் நடந்த உரையாடல்...
இந்த தூக்குல கொஞ்சம் சோறு வாங்கி தாயா.
இதுக்கு ஏன் தயங்குறீங்க... வாங்க பந்தியிலயே உக்காந்து சாப்டலாம்.
என் கூட வாங்க... யார் என்ன சொல்றாங்கன்னு பாக்குறேன்னு சொல்லி உள்ள கூட்டிட்டு போனேன். சிலருடைய பார்வை ஒரு மாதிரியாக இருந்தாலும் எதுவும் பேசவில்லை. ஆனால் குசுகுசுவென முதுகுக்குப் பின்னால் சிலர் முனங்கியதை நான் கண்டுகொள்ளவில்லை... ரெண்டு பேரும் வயிறார சாப்பிட்டு வெளியில் வந்து மொய் எழுதி விட்டு திரும்பி பார்க்கிறேன் இப்பவும் அதே பெரியவர் கூச்சத்தோடு நின்னுட்டு இருந்தார்.
இன்னும் என்ன வேணும் தாத்தானு கேட்டதும் வயிறு நெறஞ்ச மாதிரி இந்த தூக்குவாளியும் நெறஞ்சா சந்தோசமா வீட்டுக்கு கொண்டு போவேன்யா என்றார்.... இதெல்லாம் ஒரு விசயமா, வாங்க போலாம்னு கூட்டிட்டு போய் பக்கத்துல இருக்க இருக்கிற கடையில் தூக்குப் பாத்திரம் நிறைய பார்சல் சாப்பாடு வாங்கி குடுத்தேன். மனுசன் என்ன நெனச்சாரோ பொல பொலனு கண்ணீர உதிர்த்துட்டாரு. சம்பந்தமே இல்லாம என் கண்களும் லேசா கலங்கிருச்சு.
வயிறு என்னமோ எல்லோருக்கும் ஒரு ஜான் தான். ஆனால் அதை நிறைப்பது சிலருக்கு கடலைப்போல் மிக நீளமானதாக இருக்கிறது.
இது போன்ற நல்ல மனங்கள் வாழட்டும்.
No comments:
Post a Comment