Saturday, June 10, 2017

#எம்ஜியார்ரும்_தமிழ்_பற்றும்....!!!!!



எம்ஜியார் அவர்கள் மலையாள நாயர் வகுப்பில் பிறந்தவர் என்பதால் அவர் வாழும் காலத்தில் பல நேரத்தில் மலையாளி எப்படி தமிழ் நாட்டை ஆளலாம்? என்ற விமர்சனங்கள் அவர் மேல் எழுந்தன.
தமிழ் நாட்டை தமிழன்தான் ஆள வேண்டும் என்று ஒரு சிலர் சொல்லிப்பார்த்தனர். ஆனால் தமிழ் மக்கள் அவரை முழுவதுமாக ஏற்றுக் கொண்டதோடு கொண்டாடினர். ஏன் இன்னும் கொண்டாடிக் கொண்டுதான் இருக்கின்றனர் என்று சொன்னால் அது மிகையாகாது. அவர் தமிழனாகவே வாழ்ந்து தமிழனாகவே மறைந்தார்.
Image may contain: 3 people, people smiling, sunglasses
பிறப்பினால் மலையாளி ஆனாலும் என்றுமே அவர் தன்னை மலையாளியாக அடையாளப்படுத்திக்கொண்டதில்லை. தமிழ் மேல் நல்ல பற்றுக் கொண்டிருந்தார் என்பதற்கு பல உதாரணங்களை இந்தப் புத்தகத்தில் படித்தேன்.
முதலாவது அவர் பிறந்தது இலங்கையில், கேரளாவில் இல்லை. சிறு வயதிலேயே தந்தையை இழந்தவுடன், அவரின் தாய் தன் இரு மகன்களான சக்ரபாணி, ராமச்சந்திரன் ஆகிய இருவருடன் பிழைப்புத்தேடி வந்த மாநிலம் தமிழ்நாடுதான். அவர் முதலில் பள்ளிக்குப்போனது தமிழ் நாட்டில் இருக்கும் தமிழ்ப் பள்ளியில்தான். தமிழ்ப்பள்ளியில் சிறிது காலமே படித்தாலும் ஆரம்ப கல்வியை நல்லமுறையில் கற்றுக் கொண்டார்.
குடும்ப வறுமையின் காரணமாக ஏழை விதவையான சத்யபாமா, தன் பிள்ளைகள் இருவரையுமே நாடகக்கம்பெனியான மதுரை பாய்ஸ் கம்பெனியில் சேர்ந்துவிட்டார். எம்ஜியாருக்கு அப்போது ஏழு வயதுதான் இருக்கும்.
எம்ஜியார், நடிப்பு, பாடுதல், மனனம் செய்தல் போன்ற பல விடயங்களை கற்றுக் கொண்டார். அதுவும் ஆரம்பகாலம் முதல் தமிழ்தான். வசனம் பேசி, நடிக்க தமிழ் உச்சரிப்பையும் நன்கு கற்றுக் கொண்டு, குரல் மகரக்கட்டு உடையும் வரை பெண்குரலில் பாடி பெண் வேஷங்கள் பலவற்றைப் போட்டிருக்கிறார்.
பாய்ஸ் கம்பெனியில் முதலில் அவருக்கு கிடைத்தது வெறும் சாப்பாடு மட்டும்தான். கொஞ்சம் அனுபவம் கிடைத்து வேஷம் கட்ட ஆரம்பித்தபின் தான் வாரம் நான்கு அணா வாங்கினார். அதாவது 25 பைசாதான் அவரது முதல் சம்பளம். அப்படியென்றால் மாதத்திற்கு 1 ரூபாய் மட்டும் தான் என்று நினைக்கும்போது அது ஆச்சரியமளிக்கிறது.
பாய்ஸ் கம்பெனி எங்கெல்லாம் செல்கிறதோ அங்கெல்லாம் செல்ல வேண்டும். தங்குமிடமும் சாப்பாட்டும் கம்பெனி பொறுப்பு. அவர்கள் கொண்டு வந்து கொடுக்கும் சம்பளத்தில் தான் அவர்கள் குடும்பம் நடந்தது என்பதை நினைத்தால் அதிசயமாயிருக்கிறது.
எம்ஜியார் வளர வளர அவருடைய தமிழ் ஆர்வமும் நன்கு வளர்ந்தது. மலையாளம் அவருக்கு எழுதப்படிக்கத் தெரியாது. அதற்கான சந்தர்ப்பமும் அமையவில்லை. அம்மா இருக்கும்வரை தான் மலையாளத்தில் பேசுவதுகூட.
M.V. மணி அய்யர் என்பவர் எம்ஜியாருக்கு தமிழ்ப்பற்றை ஊட்டினார். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவரிடம் சென்று தமிழ் பற்றியும் அதன் பெருமைகளைப் பற்றியும் அளவளாவுதலில் மிகுந்த விருப்பம் கொண்டார்.
மணி அய்யர் எம்ஜியாருக்கு நிறைய புத்தகங்களை அறிமுகப்படுத்தினார்.
எம்ஜியார் படித்த புத்தகங்களையும் சில எழுத்தாளர்களையும் அவர் குறிப்பிட்டுள்ளது மிகவும் சிறப்பு.
மணிக்கொடியில் ஆரம்பித்து பல பத்திரிக்கைகளைத் தொடர்ந்து படித்து வந்தார். அது தவிர தி.ஜானகிராமன், க.நா.சுப்பிரமணியன், ந. பிச்சமூர்த்தி, மு.வரதராசனார், கு.ப.ராச கோபாலன், புதுமைப்பித்தன் ஆகிய அந்தக்கால கட்டத்தில் இருந்த சிறந்த படைப்பாளர்களை எம்ஜியார் படித்தார்.
மகாத்மா காந்தியின் கொள்கைகளில் கவரப்பட்டு, சுதந்திரப் போராட்ட காலத்தில் கதர் ஆடை உடுத்த ஆரம்பித்தார். அதன் பின் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் சுயமரியாதை இயக்கத்தைப் பற்றிச் சொல்லி "குடியரசு" நாளிதழை அறிமுகப்படுத்தினார்.
அறிஞர் அண்ணாவின் அறிமுகம் அவரை அப்படியே வேறு தளத்திற்கு எடுத்துச் சென்று திராவிட இயக்கத்தில் அய்க்கியமானார். அதற்கு முக்கியக் காரணம் அண்ணாவின் எழுத்தும், பேச்சும் அவருடைய எளிமையான அணுகு முறையும் தான்.
கலைஞர் கருணாநிதியுடன் நட்புக் கொண்டதன் காரணமும் அவருடைய எழுத்தின் மேலுள்ள காதலால் தான். இந்தப்புத்தகத்தில் கலைஞரைப் பற்றிக் குறிப்பிடும் ஒவ்வொரு இடத்திலும் மிகவும் மரியாதையுடன் குறிப்பிடுகிறார். அவருடைய எழுத்தையும் கதை வசனத்தையும் மிகவும் சிலாகிக்கிறார்.
இந்தப் புத்தகம் எழுதும்போது கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்த சமயம். ஒவ்வொரு முறையும், மாண்புமிகு டாக்டர் கலைஞர் என்றே குறிப்பிடுகிறார்.
திராவிட இயக்கத்தில் முழுவதுமாக ஈர்க்கப்பட்டதோடு, இயக்கத்தின் முக்கிய கொள்கை பரப்பு பேச்சாளராக மாறிப்போனார். திரைப்படங்களில் நடித்துப்புகழ் பெற்றதால், அவர் எங்கு சென்றாலும் அவரைப் பார்க்க ஏராளமான மக்கள் கூடினர்.
எம்ஜியாரின் வரவு நிச்சயமாக திராவிட இயக்கத்திற்கு வலிமை சேர்த்தது.
கலைஞரின் எழுத்து மற்றும் பேச்சு வன்மையில் கவரப்பட்டதால் தான் அண்ணாவின் மறைவுக்குப்பின் கலைஞரை முன்னிறுத்தி,கலைஞர் முதலமைச்சரானதில் பெரும்பங்கு வகித்தவர் எம்ஜியார்.
இணை பிரியாத நண்பர்களாக இருந்தவர்கள் பிரிந்ததுதான் காலம் செய்த கோலம். யோசித்துப் பார்த்தால் இந்த இரு பிரதான கட்சிகளும் இணைந்தே இருந்திருந்தால் தமிழ் நாட்டில் எதிர்க்கட்சியே இருந்திருக்காது.
இந்தப் புத்தகத்தில் எம்ஜியார் நடித்துப் புகழ்பெற்ற 'மருத நாட்டு இளவரசி' என்ற திரைப்படத்திற்கு கலைஞர் எழுதிய வசனத்தைப் பற்றி மிகவும் வியந்து பாராட்டுகிறார்.
MGR அவர்கள் எழுதிய 'நான் ஏன் பிறந்தேன்' புத்தகத்தில் படித்ததில் பிடித்து...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...