’விக்கிலீக்ஸ்’-க்கு இணையான பரபரப்பை இந்திய அரசியலில் ஏற்படுத்தியிருக்கிறது ‘கூவத்தூர் லீக்ஸ்’.....
அதிமுக இரண்டாக பிளவுபட்டபோது சசி அணிக்கு ஆதரவளிக்க எம்.எல்.ஏக்கள் ஒவ்வொருவருக்கும் கோடிக்கணக்கான ரூபாய், தங்கம் தரப்பட்டதை அம்பலப்படுத்தியிருக்கும் ’ஸ்டிங் ஆபரேஷன்’ எனப்படும் இந்த ரகசிய நடவடிக்கை எப்படி முன்னெடுக்கப்பட்டது தெரியுமா?
இதில் நேரடியாக ஈடுபட்டவர்களிடம் ‘ நியூஸ் இம்மீடியட்’ நடத்திய கலந்துரையாடல்களில் கிடைத்த சுவாரசியத் தகவல்கள் இங்கே;
கூவத்தூர் களேபரங்கள் அரங்கேறிய சமயத்தில் சென்னையைச் சேர்ந்த ‘மூன் டி.வி’, இதன் பின்னணியை தோலுரித்துக்காட்ட எண்ணியது. துணைக்கு ஒரு தேசிய ஊடகத்தை சேர்த்துக்கொள்வது நல்லது என்கிற ஆலோசனக்கேற்ப ‘டைம்ஸ் நவ்’ டிவி இணைந்துகொண்டது.
ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த மதுரை வடக்கு எம்.எல்.ஏ. சரவணனுக்கு ’தொழில்முறையாக’ அழைப்பு விடுக்கப்பட்டது. குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட இடத்திற்கு வந்தவரிடம் தங்களது அடையாளங்களை மறைத்துக்கொண்டு மீடியா ஆட்கள் நைசாகப் பேச்சு கொடுத்தனர். பேச்சு எங்கெங்கெல்லாமோ சுற்றி கடைசியில் கூவத்தூரில் போய் நின்றிருக்கிறது. பணம், தங்கம் கைமாறியதை சரவணன் இயல்பாகச் சொல்ல, அனைத்தையும் உள்வாங்கிக்கொண்டது…அங்கே வைக்கப்பட்டிருந்த ரகசிய கேமரா.
கடைசி நேரத்தில் ஓ.பி.எஸ் அணிக்குத் தாவிய சரவணனின் கூற்றை அப்படியே எடுத்துக்கொள்ள முடியாதே!. இதை உறுதிசெய்ய சசி தரப்பு எம்.எல்.ஏ ஒருவருக்கு வலை விரிக்கப்பட்டது. இதில் சிக்கியவர்தான் சூலூர் எம்.எல்.ஏ கனகராஜ். வழக்கம்போல சாதாரணமாக ஆரம்பித்த பேச்சு, மீடியா ஆட்களின் சாமர்த்தியமான திசைதிருப்பல் காரணமாக கூவத்தூரைச் சுற்றி கும்மியடிக்க ஆரம்பித்தது. கொஞ்சம் ’உற்சாகத்தில்’ இருந்த கனகராஜ் அனைத்தையும் உளறிக் கொட்ட, அங்கே இருந்த கேமரா அதனை உள்வாங்கிக்கொண்டது.
டெல்லியிலும், சென்னையிலும் எடிட்டிங் வேலைகள் நடந்துகொண்டிருந்த நிலையில் இந்த ரகசிய நடவடிக்கை பற்றி சம்மந்தபட்டவர்களுக்கு தெரிய வந்திருக்கிறது. மாறிமாறி தொலைபேசியில் அழைத்து கெஞ்சியிருக்கிறார்கள். வேண்டியதைத் தருவதாக ஆசையும் காட்டியிருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் கொஞ்சம் மிரட்டல் தொனியிலும் பேசியிருக்கிறார்கள். ஆனாலும் அசைந்து கொடுக்கவில்லை. எதற்கும் வளையாத இந்த உறுதிதான் இந்த அசிங்கத்தை இப்போது அம்பலப்படுத்தியிருக்கிறது.
No comments:
Post a Comment