தமிழ்நாடு திரையரங்களில் ஜிஎஸ்டிக்கு முன்னர் 15% கேளிக்கை வரி இருந்தது தானே? இதில் தமிழில் பெயர் வைக்கப்பட்ட படங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்ட போதும் அந்த வரி விலக்கு ரசிகர்களுக்குக் கிடைக்கவில்லை.
வரியையும் சேர்த்து ரசிகர்களிடம் கபளீகரம் செய்து கொண்டிருந்தார்கள்.
இதில் இண்டர்நெட் டிக்கெட் என்ற பெயரில் அடித்த கொள்ளை வேறொரு ரகம். ஒரே சமயத்தில் 10 டிக்கெட்டுகளை ஆன்லைனில் புக் செய்தால் அதில் ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் 30 முதல் 40 ரூபாய் வீதம் 400 ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டது. ஆன்லைனில் புக்கிங் செய்வது திரையரங்கங்களுக்கு ஆட்கள் வேலைப்பளுவைக் குறைப்பது தானே? அதற்கென பார்க்கப்போனால் கட்டணத்தில் தள்ளுபடி அல்லவா தர வேண்டும்?
புதிய திரைப்படங்கள் வெளியான போதெல்லாம்..அதுவும் பிரபல ஹீரோக்கள் படங்கள் என்றால் அடித்த கொள்ளை கொஞ்சமா,நஞ்சமா?
எத்தனை கோடி வசூல் செய்தாலும் நஷ்டக் கணக்கு காட்டி ஒப்பாரி வைத்தீர்கள் தானே?
பார்க்கிங் கொள்ளை.. பாப்கார்ன் கொள்ளை.. உணவகக் கொள்ளை.. அப்பாடி..எவ்வளவு கொள்ளை?
ஏசி தியேட்டருன்னு பேரை வெச்சுக்கிட்டு படம் ஆரம்பிச்ச உடனே ஏசியை நிப்பாட்டி ஃபேனையும் நிப்பாட்டி வேக விடுவீங்களேடா மகாபாவிகளா? கேட்டால் ‘ஹவுஸ்ஃபுல் அதான் ஏசி கூலிங் பத்தலை’ன்னு கதை விடுவீங்களே. அதெல்லாம் கொள்ளை இல்லையா?
உணவகங்களில் திரையரங்குகளில் மட்டும் சேவை வரிக்கு 40% தள்ளுபடி கொடுக்கப்பட்டிருந்தது தானே? ஆனால் வெளியில் இருப்பதை விட பல மடங்கு அதிகமாக விற்றுக் கொள்ளை அடித்தீர்களேய்யா.. அது எல்லாம் என்ன கணக்கு?
தண்ணீர் பாட்டில் வெளியில் 20 ரூபாய் என்றால் உள்ளே 40 ரூபாய், 50 ரூபாய் என்று MRP-யையே தனியாக அச்சிட்டு பகலிரவுக் கொள்ளை நடத்தினீர்களே அது என்ன கணக்கு.
சரி... இப்போது ஜிஎஸ்டியின் கீழ் வசூலிக்கும் வரியை நீங்கள் உள்ளீட்டு வரி வரவின் கீழ் (ITC) மீளப்பெறலாம் தானே?
கூடுதலாக தமிழக அரசு விதித்திருக்கும் கேளிக்கை வரி தானே பிரச்னை? ஏற்கனவே திரையரங்க உணவகங்களில் 12.5% மதிப்புக் கூட்டு வரி மற்றும் 15% சேவை வரி இருந்தது தானே? அதில் சேவை வரியில் திரையரங்குகளுக்காக 40% தள்ளுபடி பெற்று மீதி 9% - ஆகக் கூடுதல் (VAT + ST) என்று 21.5% செலுத்திக் கொண்டிருந்தீர்கள் தானே? ஆக இப்போது அதற்கு 18% தான் வரி செலுத்த வேண்டும்?
இப்பவும் வரி கூடுதலாகினால் நீங்களா கட்டப்போகிறீர்கள் தியேட்டர்காரர்களே? அதையும் சேர்த்து எங்கள் தலையில் மிளகாய் அரைத்து விட்டு, அரசாங்கத்திற்கு பொய் கணக்கு காட்டி சுருட்டப்போகிறீர்கள். அதானே? கேளிக்கை வரி விதிப்பு இருந்த போதே, அனுமதிச் சீட்டில் அரசாங்க முத்திரையிடப்பட்ட வரி செலுத்தக் கணக்கு காட்டப்பட வேண்டிய டிக்கெட்டைக் கொடுக்காமலேயே ஆட்களை விட்டு பொய்க் கணக்கு காட்டியவர்கள் தானே நீங்கள்?
ஆக ஜிஎஸ்டி வரியை உள்ளீட்டு வரி வரவு மூலமாக திரும்பப் பெறலாம் (ஒழுங்காக திரைத்துறை மேலிருந்து கீழே வரை வரி கட்டினால்) எனும் போது கேளிக்கை வரியில் கூடுதலாவது, உணவகத்தில் மிச்சமாகும் வரிகளின் மூலமாக ஈடு செய்ய முடியாதா என்ன? அப்படியே கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஏழெட்டு % கூடுதலாக வரும். அதனை ரசிகர்களிடம் வசூலித்து விட்டு, இண்டர்நெட் டிக்கெட் சேவைக் கட்டணம், பார்க்கிங் கட்டணக் கொள்ளை, உணவக விலைக்கொள்ளை ஆகியவற்றையெல்லாமும் சராசரி விலையில் ஆக்கி விட்டால் என்னவாகி விடப்போகிறது?
இதையெல்லாம் செய்ய வக்கில்லாமல், சும்மாவாச்சும் கதறிக் கொண்டிருப்பதில் என்ன நியாயம் இருக்கிறது?
No comments:
Post a Comment