‘‘ஜி.எஸ்.டி அறிமுகம் ஆகும் இந்த இரவில் ஒரு புதிய இந்தியா பிறந்திருக்கிறது’’ என்றார் பிரதமர் மோடி. ‘‘இது ஒரு வரலாற்று சாதனை. இது அமலானால் அரசுக்கு நிறைய வரி வருமானம் வரும். ஏழைகள் மற்றும் நடுத்தரக் குடும்ப மக்களுக்கான நலத் திட்டங்களுக்கு நிறைய நிதியைச் செலவிட முடியும்’’ என்றது அவருடைய அரசு. ஆனால், இந்த வரி வருமானம் எங்கிருந்து வரப் போகிறது என்பதைத்தான் சொல்லவில்லை. கிட்டத்தட்ட ஏழைகள் மற்றும் மிடில் கிளாஸ் மக்களின் பாக்கெட்டில் இருந்துதான் இந்தக் கூடுதல் வருமானத்தை அபகரிக்கப் போகிறார்கள். ஆனால், இதெல்லாம் இந்த மக்களுக்கே திரும்பி வருமா? அது நிச்சயமில்லை!
எந்தப் பெயர் சொல்லி எத்தனை இடங்களில் வசூல் செய்தாலும், ‘வரி’ என்பது வரிதான். ஒரு சராசரி மிடில் கிளாஸ் குடிமகனுக்கு, அதிகாலை தூங்கி எழும்போதே ஜி.எஸ்.டி-யின் சுமை தெரிய ஆரம்பித்துவிடும். பல் தேய்க்கும்போது டூத் பிரஷ்ஷை அழுத்தியெல்லாம் இனி கடித்துவிடக் கூடாது. பிரஷ் விலை ஏறிவிட்டது. அடிக்கடி புதிது வாங்க முடியாது. ஹாயாக ஷாம்பு போட்டுக் குளிப்பது எல்லாம் இனி ஆடம்பரம். ஷாம்புக்கு ஜி.எஸ்.டி-யில் 28 சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளது. நிம்மதியாகவும் நிறைவாகவும் காலை உணவு சாப்பிடலாம் என்று நினைத்தால், இனி பட்ஜெட் சுடும். உணவுப்பொருள்களுக்கு வரி இல்லை என்றாலும், பேக் செய்யப்பட்டு விற்கப்படும் எந்த உணவுக்கும் ஐந்து சதவிகிதம் வரி இனி உண்டு. துவரம் பருப்பு, உளுந்து, கோதுமை மாவு, இட்லி மாவு என எல்லாமே பாக்கெட்டுகளில்தான் இப்போது விற்கப்படுகிறது. உணவுப் பாதுகாப்பு சட்டப்படி, பாக்கெட்டில் அடைக்காமல் உணவுப் பொருள்களை விற்பது குற்றம். எனவே, எப்படி இருந்தாலும், ஜி.எஸ்.டி வரி கட்டாமல் எதையும் வாங்க முடியாது. காஸ் சிலிண்டருக்கும் வரியை உயர்த்தி, அதே நேரத்தில் சாமர்த்தியமாக மானியத்தையும் குறைத்து விளையாடி இருக்கிறது அரசு. எனவே, சிலிண்டர் விலையும் 30 ரூபாய்க்கு மேல் அதிகமாகும். அதனால், அளவாக சாப்பிடுவது பர்ஸுக்கு நல்லது. குறிப்பாக நெய் தோசை, நெய் பொங்கல் என்றெல்லாம் ஆசைப்படுவது ஆபத்தானது. ஐந்து சதவிகிதத்தில் இருந்து 12 சதவிகிதமாக உயர்ந்துவிட்டது நெய் மீதான வரி. ஏதோ, உங்கள் கொழுப்பைக் குறைக்க அரசால் முடிந்த சேவை!
இவற்றையெல்லாம் நினைத்து டென்ஷன் எகிறி, நிறைய தண்ணீரையும் குடிக்கக்கூடாது. தண்ணீர் கேன்களுக்கு முதல்முறையாக வரி விதிக்கப்பட்டுள்ளது. எனவே, 20 லிட்டர் தண்ணீர் கேன் சுமார் 10 ரூபாய் வரை விலை ஏறக்கூடும்.
பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் பிள்ளைகளுக்கு நோட்டுகள் வாங்கித் தர வேண்டுமானால், இனி கூடுதல் வரி செலுத்த வேண்டும். அவர்களின் படிப்புத் தேவைக்காக கம்ப்யூட்டர், லேப்டாப் வாங்குவதும் இனி காஸ்ட்லி ஆகிவிடும். ஆறு சதவிகிதம் என்று இருந்த வரியை 18 சதவிகிதமாக உயர்த்தி இருக்கிறார்கள். ‘டிஜிட்டல் இந்தியா’வுக்குள் நுழைவதென்றால் சும்மாவா?
ஸ்கூல் அட்மிஷன் நேரம், தீபாவளி, பொங்கல் என டிரஸ் எடுப்பதில் இனி குடும்பத் தலைவர்கள் கவனமாக இருக்க வேண்டும். 1,000 ரூபாய்க்கு மேல் இருக்கும் துணி வகைகளுக்கு 12 சதவிகிதம் வரி. ரெடிமேட் ஆடைகளும் இரண்டு முதல் மூன்று சதவிகிதம் விலை கூடும். இதர துணிகளுக்கும் ஐந்து முதல் 18 சதவிகிதம் வரை வரி விகிதம் உள்ளது.
பிள்ளைகள் ஆசைப்படுகிறார்களே என்று ஒரு நாள் தியேட்டருக்குப் போய்விட்டு, ஹோட்டலுக்குச் சாப்பிடக் கூட்டிச் சென்றால், அதைவிட ஆபத்தான விஷயம் வேறு எதுவுமில்லை. ஐந்து சதவிகிதத்தில் ஆரம்பித்து 28 சதவிகிதம் வரை ஹோட்டல் உணவுகளுக்கு வரி விதித்திருக்கிறார்கள். சினிமா பார்ப்பதை எல்லாம் ஆடம்பரம் என்ற பிரிவில் சேர்த்து, 28 சதவிகிதம் வரி போட்டிருக்கிறார்கள். அது போதாது என்று, தமிழக அரசு தனியாக கேளிக்கை வரி என 30 சதவிகிதம் விதித்து இருக்கிறது.
ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏ.சி என்று சொகுசு வாழ்க்கைக்கு மிடில் கிளாஸ் பழகிவிடக்கூடாது என்ற அக்கறையோடு, இவற்றின் மீதான வரிகளை உயர்த்தி இருக்கிறது அரசு. சரி, சிக்கனமாக இருந்து குடும்பத்தின் எதிர்காலத் தேவைக்காக இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கலாம் என்றால், அதன் மீதான வரியும் 15 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக எகிறிவிட்டது. ‘எதுவுமே வேண்டாம், பிள்ளைகளுக்காக ஒரு வீடு வாங்குவோம்’ என முடிவெடுத்தால், அபார்ட்மென்ட்களுக்கு 12 சதவிகித ஜி.எஸ்.டி கட்ட வேண்டும்.
ஏழைகளும் மிடில் கிளாஸும் என்னதான் செய்வது? ‘‘மெர்சிடீஸ் பென்ஸ், பி.எம்.டபிள்யூ, ஜாகுவார் மற்றும் ஆடி போன்ற சொகுசு கார்களை வாங்குங்கள்’’ என்று பரிந்துரைக்கிறது அரசு. ஜி.எஸ்.டி வரி அமலுக்கு வந்தபிறகு அதிகபட்சமாக ஒரு சொகுசு காரின் விலை 10 லட்ச ரூபாய் வரை குறைந்திருக்கிறது.
மலேசியா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து என்று ஏற்கெனவே ஜி.எஸ்.டி வரி முறை அமலுக்கு வந்த பல நாடுகளிலும், இந்த வரி அறிமுகம் செய்யப்பட்ட உடனே விலைவாசி எகிறியது. பணவீக்கம் தாறுமாறாக உயர்ந்து, பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. மக்கள் பல சிரமங்களை அனுபவித்தனர். பல நாடுகளில் ஜி.எஸ்.டி அமலானபோது ஏற்பட்ட விளைவுகளை இந்திய ரிசர்வ் வங்கி ஆய்வு செய்தது. கடந்த மே மாதம் வெளியிடப்பட்ட ‘State Finances: A Study of Budgets of 2016-17’ என்ற அறிக்கையில் அந்த விஷயங்களைத் தெளிவாகச் சொல்லியிருந்தது. ‘அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, மலேசியா, நியூசிலாந்து மற்றும் ரஷ்யா என எல்லா நாட்டு ஜி.எஸ்.டி முறையிலும் ஏராளமான பலவீனங்கள் இருந்தன. இதேபோன்ற பிரச்னைகள் இந்தியாவிலும் ஏற்படலாம். சிறிய வியாபாரிகள் பதிவு செய்யாமல் போகலாம். வியாபாரிகள் உண்மையான விற்பனையைக் காட்டாமல், கணக்கைக் குறைத்துக் காட்டலாம். வாடிக்கையாளர்களிடம் பிடித்தம் செய்த வரியை அரசுக்குச் செலுத்தாமல் போகலாம். அதைவிட முக்கியமாக, தவறான கணக்குக் காட்டி, கட்டிய வரியைத் திரும்ப வாங்க முயற்சி செய்யலாம். இந்த விஷயங்களில் வரித்துறையினர் கவனமாக இருக்க வேண்டும்’ என்கிறது அந்த அறிக்கை.
பாராட்டு மழையில் நனைந்திருக்கும் மோடி அரசுக்கு இவற்றையெல்லாம் கவனிக்க நேரமிருக்குமா என்று தெரியவில்லை. இந்தப் பாராட்டுகளில் மிக முக்கியமான ஒன்று, அமெரிக்காவில் கிடைத்தது. மோடியின் சமீபத்திய அமெரிக்கப் பயணத்தின்போது, வெள்ளை மாளிகையில் அவரை வரவேற்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ‘‘இந்தியாவின் 130 கோடி மக்களையும் ஒரே வரி விகிதத்தின்கீழ் கொண்டு வந்து விட்டீர்கள். இனிமேல் இந்திய மார்க்கெட்டில் நுழைவதற்கு எல்லா நிறுவனங்களுக்கும் சுலபமாக இருக்கும்’’ என்று பாராட்டினார்.
ஜி.எஸ்.டி யாருக்காக வந்திருக்கிறது என்பது ட்ரம்புக்குத் தெரிகிறது. நாம்தான் குழப்பத்தில் இருக்கிறோம்.
No comments:
Post a Comment