*நாகப்பட்டினம் மாவட்டம்* திருக்கண்ணபுரத்தில் உள்ளது சவுரிராஜப் பெருமாள் கோவில். பழமைவாய்ந்த இந்த ஆலயத்தின் மூலவர் பெயர் நீலமேகப்பெருமாள் என்பதாகும். உற்சவர் திருநாமமே சவுரிராஜப் பெருமாள். தாயார் திருநாமம் கண்ணபுரநாயகி.
சில முனிவர்கள் இந்த ஆலயத்தில் உள்ள பெருமாளை வேண்டி தவம் செய்து கொண்டிருந்தனர். சாப்பாடு, தூக்கத்தை பொருட்படுத்தாது தவம் செய்து வந்ததால், அவர்களின் தேகம் மிகவும் மெலிந்து நெற்கதிர்களைப் போன்று காணப்பட்டது.
இந்த நேரத்தில் உபரிசிரவசு என்ற மன்னன், தனது படையுடன் அந்த வழியாக வந்து கொண்டிருந்தான். அவன் மகாவிஷ்ணுவிடம் ‘அஷ்டாட்சர மந்திரம்’ கற்றவன். மன்னனுக்கும், அவனது படை வீரர்களுக்கும் பசி ஏற்பட்டது. அவர்கள் தவம் செய்து கொண்டிருந்த முனிவர்களை, நெற்கதிர்கள் என்று நினைத்து அவர்களை வாளால் வெட்ட முயன்றனர். இதனைக் கண்ட மகாவிஷ்ணு, சிறுவன் வேடம் தரித்து வந்து மன்னன் மற்றும் அவனது படைவீரர்களுடன் போரிட்டார்.
மன்னனால் அந்தச் சிறுவனை ஒன்றும் செய்ய முடியவில்லை. இதனால் மன்னன், தான் கற்றிருந்த அஷ்டாட்சர மந்திரத்தை சிறுவன் மீது ஏவினான். ஆனால் அந்த மந்திரம், சிறுவனின் பாதத்தில் சரணடைந்தது. இதைக் கண்ட மன்னன், தன்னை எதிர்த்து நிற்பது மகாவிஷ்ணு என்பதை அறிந்து மன்னிப்புக் கேட்டான். விஷ்ணுவும் அவனை மன்னித்து நீலமேகப் பெருமாளாக காட்சி தந்தார். மன்னனின் வேண்டுதல் படி இந்தத் தலத்தில் எழுந்தருளினார். பிறகு மன்னன், தேவ சிற்பியான விஸ்வகர்மாவைக் கொண்டு இங்கு கோவில் கட்டியதாக தல வரலாறு தெரிவிக்கிறது.
இந்த ஆலயத்தின் மேலும் சில சிறப்புகளைப் பற்றி இங்கே பார்ப்போம்.
சவுரிராஜப் பெருமாள் :
ஒரு சமயம் இந்த ஆலயத்தின் அர்ச்சகராக இருந்த ஒருவர், இறைவனுக்கு சாத்தியிருந்த மாலையை தன் காதலிக்கு சூட்டிவிட்டார். அந்த நேரத்தில் மன்னரும் ஆலயத்திற்கு வந்தார். அவருக்கு மரியாதை செய்ய அர்ச்சகரிடம் மாலை இல்லை. எனவே தன் காதலிக்கு சூட்டிய மாலையையே, மன்னருக்கும் சூட்டிவிட்டார். ஆனால் அந்த மாலையில், அந்தப் பெண்ணின் கூந்தல் முடி இருந்ததைக் கண்ட மன்னன், ‘மாலையில் இவ்வளவு பெரிய முடி எப்படி வந்தது?’ என்று கேள்வி எழுப்பினான்.
விழி பிதுங்கிப்போன அர்ச்சகர், ‘பெருமாளின் தலையில் இருந்த முடிதான் அது’ என பொய் சொல்லிவிட்டார்.
மன்னருக்கு பலத்த சந்தேகம். ‘நான் பெருமாளின் திருமுடியைப் பார்க்க வேண்டும்’ என்றார்.
மறுநாள் கோவிலுக்கு வந்தால் முடியைக் காட்டுவதாக கூறி அப்போதைக்கு அர்ச்சகர் தப்பித்துக் கொண்டார். ஆனால் மறுநாள் மன்னனிடம், பெருமாளின் தலை முடியை காட்டியாக வேண்டுமே. சுவாமிக்கு திருமுடி இல்லை என்பது உறுதியாகும் பட்சத்தில் அர்ச்சகரின் நிலை என்ன?
கலங்கிப் போன அர்ச்சகர், அன்று இரவு முழுவதும் பெருமாளின் சன்னிதியிலேயே இருந்து, தன்னைக் காத்தருளும்படி இறைவனை வேண்டினார்.
மறுநாள் மன்னர் கோவிலுக்கு வந்தார். அர்ச்சகர் பயந்து கொண்டே சுவாமியின் தலையை மன்னருக்கு காட்ட, பெருமாள் திருமுடியுடன் காட்சி தந்தார். பக்தனுக்காக இப்படி காட்சி தந்த இறைவன், ‘சவுரிராஜப் பெருமாள்’ என்று பெயர் பெற்றார். இவர் இத்தலத்தில் உற்சவராக தலையில் முடியுடன் காணப்படுகிறார். அமாவாசை அன்று திருவீதி உலா செல்லும் போது மட்டுமே பக்தர்கள், இறைவனின் திருமுடியை தரிசிக்க முடியும்.
சக்தியை இழந்த கருடன் :
தன் தாயை மீட்பதற்காக தேவேந்திரனிடம் இருந்து அமிர்தத்தைப் பெற்று திரும்பிக் கொண்டிருந்தார் கருடன். வழியில் யாருக்கும் கிடைக்காத அமிர்தத்தைத் தான் கொண்டு வருவதை எண்ணி அவர் மனம் கர்வம் கொண்டது. அந்த கர்வத்துடன், திருக்கண்ணபுரம் ஆலயத்தின் மேலே பறந்து சென்றபோது, அவரது சக்திகளை இழந்து கடலில் விழுந்தார். தவறை உணர்ந்த கருடன், இத்தல இறைவனிடம் மன்னிப்பு வேண்டியதுடன், கடலுக்குள் இருந்த ஒரு மலையின் மீது பெருமாளை நினைத்து தவம் இருந்தார். விஷ்ணு அவரை மன்னித்து, தனது வாகனமாக ஏற்றுக்கொண்டார். மாசி மாத பவுர்ணமி தினத்தில் கடற்கரையில் கருடனுக்கு காட்சி தரும் விழா நடக்கிறது.
மும்மூர்த்தி தரிசனம் :
இத்தல இறைவன் எட்டெழுத்து மந்திரத்தின் வடிவமாக கையில் பிரயோகச் சக்கரத்துடன் அருள்கிறார். அவருக்கு அருகில் கருடன், வணங்கிய கோலத்தில் இருக்கிறார். வைகாசி பிரமோற்சவத்தின் போது, சுவாமி அதிகாலையில் சிவன், மாலையில் பிரம்மா, இரவில் விஷ்ணு என மும்மூர்த்திகளாக காட்சி தருவார். விஷ்ணுவின் இந்த மும்மூர்த்தி தரிசனம் விசேஷ பலன்களைத் தரக்கூடியது.
விபீஷ்ணனைத் தனது தம்பிகளில் ஒருவராக ஏற்றுக்கொண்ட ராமபிரான், அவனுக்கு இந்த ஆலயத்தில் பெருமாளாக நடந்து காட்சி தந்தார். அமாவாசை தோறும் உச்சிகால பூஜையில் பெருமாள், விபீஷ்ணனுக்கு நடையழகு காண்பித்தருளும் நிகழ்வு நடக்கிறது. இந்த ஆலயத்தை நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார், குலசேகராழ்வார் ஆகியோர் மங்களாசாசனம் செய்துள்ளனர்.
முனையதரையன் பொங்கல் :
நாகை மாட்டம் பகுதியை முனையதரையன் என்பவர் மேற்பார்வை பார்த்து வந்தார். அவர் தினமும் திருக்கண்ணபுரம் பெருமாளை வணங்கிவிட்டு உணவு சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். பெருமாளுக்கு சேவை செய்ய பணத்தை செலவு செய்ததால், முனையதரையனால், மன்னனுக்கு கப்பம் கட்ட முடியவில்லை. இதனால் முனையதரையன் கைது செய்யப்பட்டார். அன்று மன்னனின் கனவில் தோன்றிய மகாவிஷ்ணு, முனையதரையனை விடுவிக்கும்படி சொல்லவே, மன்னன் அவரை விடுவித்தான்.
இரவு வீடு திரும்பிய முனையதரையனுக்கு அரிசி, பருப்பு, உப்பு மட்டும் கலந்த பொங்கல் செய்து கொடுத்தாள் அவரது மனைவி. அவர் அதை பெருமாளுக்கு மானசீகமாக நைவேத்தியம் படைத்து விட்டு சாப்பிட்டார். மறுநாள் திருக்கண்ணபுரம் ஆலய அர்ச்சகர் கோவிலை திறந்தபோது, மூலவரின் வாயில் பொங்கல் ஒட்டியிருப்பதைக் கண்டார். அது முனையதரையன் படைத்த பொங்கல் என்று இறைவன் அசரீரியாக மக்களுக்கு தெரிவித்தார். இதையடுத்து கோவிலில் இரவு பூஜையின் போது பொங்கல் படைக்கும் பழக்கம் நடைமுறையில் வந்தது. இதனை ‘முனையதரையன் பொங்கல்’ என்றே சொல்கிறார்கள்.
வாக்கிங் பெருமாள்
வீபீஷணனுக்கு பெருமாள், தன் நடையழகைக் காட்டிய தலம் உற்சவர் சவுரிராஜப்பெருமாள் ஒவ்வொரு அமாவாசையன்றும் நடையழகு சேவை சாதிக்கிறார். இதற்கு "கைத்தலசேவை' என்று பெயர். சவுரிராஜப்பெருமாளை நான்கு அர்ச்சகர்கள் அலங்காமல் தூக்கிவந்து, கைகளில் இருத்தி முன்னும் பின்னுமாக அசைப்பர். இது பார்ப்பதற்கு நடனம் போல இருக்கும். இந்நிகழ்ச்சியை விபீஷணன் கண்டுகளிப்பதாக ஐதீகம். ராமர் சந்நிதி எதிரே விபீஷணருக்கும் சந்நிதி உள்ளது.
No comments:
Post a Comment