"நான் சுடப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுத் தேறிக்கொண்டு இருந்த நேரத்தில், அமைச்சரவை அமைத்து கொண்டு இருந்தார் #பேரறிஞர் #அண்ணா.
ஒரு நாள் நாவலரின் அன்பு இளவல்
திரு.இரா.செழியன் அவர்கள் என்னை மருத்துவமனையில் காண வந்தார். என் உடல்நிலை பற்றி விசாரித்துவிட்டு, தன்னிடம் இருந்த ஒரு காகிதக் குறிப்பை எடுத்து என்னிடம் காண்பித்தார்.
திரு.இரா.செழியன் அவர்கள் என்னை மருத்துவமனையில் காண வந்தார். என் உடல்நிலை பற்றி விசாரித்துவிட்டு, தன்னிடம் இருந்த ஒரு காகிதக் குறிப்பை எடுத்து என்னிடம் காண்பித்தார்.
'இந்தக் குறிப்பில் அமைச்சர்களின் பெயர்களும், அவர்களுக்குத் தரப்படவிருக்கும் இலாகாக்களின் பெயர்களும் இருக்கின்றன!’ என்று சொன்னார்.
நான், 'இதை என்னிடம் ஏன் காண்பிக்கிறீர்கள்?’ என்று கேட்டேன்.
'அண்ணா அவர்கள் உங்களிடம் இதைக் காண்பிக்கச் சொன்னார்!’ என்றார் அவர்.
நான் கனவில் கூடக் கற்பனை செய்ய முடியாத ஒன்று. நான் யார்? அண்ணா அவர்கள் யார்? கழகத்துக்காக நேரடியாக நான் செய்த தியாகம் என்ன? அண்ணா அவர்கள் செய்த தியாகம் என்ன? என்னுடைய அறிவு, ஆற்றல், செல்வாக்கு இவை எந்த அளவுடையவை! அண்ணா அவர்களின் அறிவு, ஆற்றல், செல்வாக்கு இவை எந்த அளவுடையவை!
அப்பப்பா! மடுவுக்கும் மலைக்கும் உள்ள வித்தியாசம் அல்லவா? சாதாரணத் தொண்டரிடத்திலும் அண்ணா காட்டும் மரியாதையை எண்ணிப் பார்க்கும்போது, பேரன்புகொண்ட அவருடைய பெரிய மனத்தை - உள்ளத்தை - எப்படிப்பட்ட வார்த்தைகளால் விளக்குவது, போற்றுவது என்று புரியவில்லை.
அந்தப் பட்டியலைப் படித்தேன். அதில் ஒருவருடைய பெயர் அமைச்சராகக் குறிப்பிடப்பட்டு இருந்ததைப் பார்த்ததும் திரு. இரா.செழியன் அவர்களிடம் ஆத்திரத்தோடு சொன்னேன். பேசவே முடியாது இருந்த அந்த நேரத்தில்,
'கத்தினேன்’ என்றுகூடச் சொல்லலாம்.
''சமீப காலம் வரையில், தி.மு.க.வுக்கும் பேரறிஞர் அண்ணா அவர்களுக்கும் எதிரான கருத்துக்களைப்பரப்பிக் கொண்டு இருந்தவர்களில் ஒருவருக்கு அமைச்சர் பதவியா?
இத்தனை நாட்களாகக் கழகத்துக்கு உழைத்த எத்தனையோ பேர், அனுபவம், கல்வி அறிவு பெற்றவர்கள் இருக்க, கழகத் தொண்டர்களின் உள்ளத்தில் பெரும் எதிர்ப்பைச் சம்பாதித்து கொண்டு இருந்த ஒருவருக்குப் போய் அமைச்சர் பதவி கொடுப்பதா? இது என்ன நியாயம்?'' என்று பதறினேன்.
திரு.இரா.செழியன் என்னை அமைதிப்படுத்திவிட்டு,
''இவருக்கும் வேண்டாம் என்றால், இவருக்கு ஒதுக்கியுள்ள இந்தத் தொழில் இலாகாவை வேறு யாருக்குக் கொடுப்பது?'' என்றார்.
''லஞ்சம் வாங்குவதற்கு நல்ல வாய்ப்பு உள்ள இலாகா என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். எனவே, இதை வேறு யாரிடமும் இப்போது கொடுப்பது கூடாது. நாவலருக்கே இந்த இலாகாவையும் சேர்த்துக் கொடுக்கலாம்!'' என்று சொன்னேன்.
திரு. இரா.செழியன் அவர்கள் குழம்பிய நிலையில் சொன்னார்,
''எனது தமையனாருக்கு இந்த இலாகாவை நீங்கள் கொடுக்கச் சொன்னீர்கள் என்று நானே எப்படிச் சொல்வது? நான் உங்களிடம் சொல்லி, உங்கள் வாயிலாக இந்தக் கருத்தைச் சொல்லவைத்துவிட்டேன் என்று எண்ணினால்? இப்படிப்பட்ட சந்தேகம் என் மீது ஏற்பட்டு விட்டால்?
இத்தனை நாட்கள் நான் எவ்வளவோ கஷ்டப்பட்டு உருவாக்கிய நல்லெண்ணத்தை, நானே அண்ணாவிடம் இழந்து விடுவேனே; இந்தப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள வேறு யாருக்காவது சொல்லுங்கள்'' என்றார்.
நான் துணிவோடு பதில் சொன்னேன்,
''பல ஆண்டுகளாக நான் பார்த்திருக்கிறேன், நீங்கள் அண்ணாவுடைய நிழலாக இருப்பதை. அண்ணா ஒரு போதும் உங்களைப்பற்றித் தவறாக நினைக்க மாட்டார். நம்மை எல்லாம் சரிவர எடை போட்டு வைத்திருக்கிறார்.தைரியமாக என் கருத்தைச் சொல்லுங்கள்!'' என்று சொன்னேன்.
ஆனால் அவரோ, உண்மையில் குழம்பிய மனத்தோடுதான் சென்றார்.
இந்தக் கவலையில் இருந்த என்னைப் பார்ப்பதற்கு திரு.இரா.செழியன் மீண்டும் வந்தார். அமைச்சர்களின் பெயர்ப் பட்டியலையும் கொண்டுவந்திருந்தார்.
என்னிடம் அதைக் காண்பித்தார். இப்படியும் நடக்குமா? என் வார்த்தைக்குக்கூட இவ்வளவு மதிப்பா?
ஏன் இப்படிக் கூறுகிறேன் என்றால், நான் யாருக்கு அமைச்சர் பதவி கொடுக்கக் கூடாது என்று கருதினேனோ, அவருக்கு அமைச்சர் பதவி இல்லை என்று கூறும் புதுப் பட்டியல்தான் அது.
ஏன் இப்படிக் கூறுகிறேன் என்றால், நான் யாருக்கு அமைச்சர் பதவி கொடுக்கக் கூடாது என்று கருதினேனோ, அவருக்கு அமைச்சர் பதவி இல்லை என்று கூறும் புதுப் பட்டியல்தான் அது.
நாவலர் அவர்களுக்கே தொழில் இலாகாவும் தரப்பட்டு இருந்தது. ஆனால், அந்த நண்பருக்கு அமைச்சர் பதவி இல்லை; வேறு ஒரு பதவி குறிப்பிடப்பட்டு இருந்தது.
அதற்குச் சில காரணங்களையும் அண்ணா அவர்கள் சொன்னதாக திரு.இரா.செழியன் சொன்னார்.
அதற்குச் சில காரணங்களையும் அண்ணா அவர்கள் சொன்னதாக திரு.இரா.செழியன் சொன்னார்.
அதற்கு மேல் நான் ஏதும் பேசவில்லை.
''அண்ணாவுக்கு எது நியாயம் என்று படுகிறதோ, அதை அவர் செய்யலாம். நானும் மனதார ஏற்றுக்கொள்வேன்!'' என்று சொன்னேன்.
மாபெரும் தலைவரும் மேதையுமான அண்ணா அவர்கள், தம்முடைய கருத்துக்கு நான் மாறுபட்டுச் சொன்னேன் என்று என் மேல் வெறுப்புற்றுப் பழி வாங்காதது மட்டுமல்ல; அலட்சியப் படுத்தாமல், ஒரு சாமானியத் தோழனின் கருத்துக்கு மரியாதை அளித்த விந்தையை என்ன என்று சொல்வது?"
- ஆனந்த விகடனில் எம்.ஜி.ஆர் எழுதிய ' நான் ஏன் பிறந்தேன் '
தொடரிலிருந்து ( 11 - 2 1973 )
தொடரிலிருந்து ( 11 - 2 1973 )
No comments:
Post a Comment