Thursday, August 22, 2019

காஷ்மீர் விஷயத்தில் இந்தியாவுக்கு ஆதரவு அதிகரிப்பு!

ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில், பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா, வங்கதேசம் ஆகிய நாடுகள், நம் நாட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. 'இது, இரு தரப்பு பிரச்னை; மத்திய அரசு சமீபத்தில் எடுத்துள்ள முடிவு உள்நாட்டு விவகாரம்' என, அவை கருத்து கூறியுள்ளன. 'பிரச்னைக்கு பேச்சு மூலம் தீர்வு காணப்பட வேண்டும்; எல்லை தாண்டி நடத்தப்படும் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும்' என்றும், அவை கூறியுள்ளன. இதனால், ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்னையாக்கும் பாகிஸ்தானின் முயற்சிகள் தோல்வியில் முடிகின்றன.

ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த, அரசியல் சாசனத்தின், 370வது பிரிவு சமீபத்தில் நீக்கப்பட்டது. மேலும், ஜம்மு - காஷ்மீர், லடாக் என, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள, அண்டை நாடான பாகிஸ்தான், சர்வதேச அரங்கில் இந்தப் பிரச்னையை எழுப்பியுள்ளது.

இந்தியா, அதிகரிப்பு,சிறப்பு அந்தஸ்து,ஆதரவு
சமீபத்தில் நடந்த, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், பாக்.,குக்கு ஆதரவாக, சீனா இந்தப் பிரச்னையை எழுப்பியது. ஆனால், கவுன்சிலில் உள்ள மற்ற, 14 நாடுகள் அதற்கு ஆதரவு அளிக்கவில்லை.



பிரிட்டன்


ஐரோப்பிய நாடான, பிரிட்டனின் புதிய பிரதமராக, கடந்த மாதம் பதவியேற்ற, போரிஸ் ஜான்சன், பிரதமர் நரேந்திர மோடியை, தொலைபேசியில் அழைத்து நேற்று முன்தினம் பேசினார். அப்போது, காஷ்மீர் பிரச்னை, இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்னை என்றும், அதில் பேச்சு நடத்தி சுமுக தீர்வு காணப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

'இந்தியா, பிரிட்டன் உறவு குறித்தும், வேறு பல பிரச்னைகள் குறித்தும், இரு தலைவர்களும் பேசியுள்ளனர். குறிப்பாக, காஷ்மீர் விவகாரம் குறித்து பேசினர்' என, பிரிட்டன் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.ஐரோப்பிய நாடான பிரான்சில், வரும், 24 - 26 வரை, 'ஜி - 7' நாடுகள் அமைப்பின் மாநாடு நடக்க உள்ளது. அதில், சிறப்பு விருந்தினராக, பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். அப்போது, ஜான்சனை முதல் முறையாக சந்திக்க உள்ளார். இந்நிலையில், மோடிக்கு அவர் ஆதரவு தெரிவித்துள்ளார்.


பிரான்ஸ்


பாக்., வெளியுறவு அமைச்சர், ஷா மஹ்மூத் குரேஷி, ஐரோப்பிய நாடான, பிரான்சின் வெளியுறவு அமைச்சர், ஜூன்யீவ்ஸ் லீ டிரையனை, நேற்று முன்தினம் தொலைபேசியில் அழைத்து பேசினார். அப்போது, ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது பற்றி குரேஷி குறிப்பிட்டுள்ளார்.அதற்கு, 'காஷ்மீர் விவகாரம், இரு தரப்பு பிரச்னை. இதில் பேச்சு நடத்தி சுமுக தீர்வு காணப்பட வேண்டும். 'அதோடு, எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தையும் தணித்து, பிராந்தியத்தில் அமைதி ஏற்படச் செய்ய வேண்டும்' என, பிரான்ஸ் அமைச்சர் கூறியதாக, அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


அமெரிக்கா


பிரதமர் நரேந்திர மோடி, பாக்., பிரதமர் இம்ரான் கான் ஆகியோருடன், அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் சமீபத்தில் பேசினார். இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளதாவது:காஷ்மீர் விவகாரம் தொடர்பாக, இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சு நடத்தி தீர்வு காண வேண்டும். எல்லை தாண்டி நடத்தப்படும் பயங்கரவாத தாக்குதல்களுக்கும் முடிவு கட்ட வேண்டும்.

'தங்களுடைய மண்ணை, பயங்கரவாதிகள் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்' என, பாக்., பிரதமர் இம்ரான் கான், அதிபர் டொனால்டு டிரம்பிடம் கூறியுள்ளார். இதற்காக சில நடவடிக்கைகள் எடுத்துள்ளதை வரவேற்கிறோம். இரு நாடுகளும், பேச்சு நடத்தி தீர்வு காண வேண்டும் என்பதையே, அதிபர், டொனால்டு டிரம்ப் வலியுறுத்தி வருகிறார்.இவ்வாறு, அவர் கூறினார்.


வங்கதேசம்


நம் வெளியுறவு அமைச்சர், ஜெய்சங்கர்,வங்கதேசத்துக்கு பயணம் மேற்கொண்டு, அந்நாட்டின் பிரதமர், ஷேக் ஹசீனா உள்ளிட்டோரை சந்தித்து உள்ளார். இந்த நிலையில், வங்கதேச வெளியுறவு அமைச்சகம், நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கும் முடிவு என்பது, இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். இந்தப் பிராந்தியத்தில், அமைதியும் வளர்ச்சியும் நிலைத்திருக்க வேண்டும் என்பதையே, வங்கதேசம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

'மத்தியஸ்தம் செய்ய தயார்'


ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில், இந்தியா - பாகிஸ்தான் இடையே, மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாக, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் சமீபத்தில் கூறியிருந்தார். இதற்கு, இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. 'இது இரு தரப்பு பிரச்னை; இதில், மற்ற நாடுகள் தலையீட்டை விரும்பவில்லை' என, மத்திய அரசு உறுதியுடன் கூறியிருந்தது.காஷ்மீரில் தற்போது நிலவும் சூழ்நிலை குறித்து, பிரதமர் மோடி மற்றும் பாக்., பிரதமர் இம்ரான் கானுடன், டிரம்ப் சமீபத்தில் பேசினார். 

இந்நிலையில், வெள்ளை மாளிகையில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், இந்தியா - பாகிஸ்தான் இடையே, மத்தியஸ்தம் செய்வது குறித்து, டிரம்ப் மீண்டும் பேசியுள்ளார். அதன் விபரம்:பிரதமர், நரேந்திர மோடியை, ஜி - 7 மாநாட்டில் சந்திக்க உள்ளேன். அப்போது, காஷ்மீர் விவகாரம் குறித்தும், அதற்கு தீர்வு காண உதவி செய்வது குறித்தும் பேச உள்ளேன்.

காஷ்மீர் விவகாரத்தால், இந்தியா, பாக்., இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதில் உதவக் கூடிய வாய்ப்பு, எனக்கு கிடைத்துள்ளது. இரண்டு தலைவர்களும், மிகச் சிறந்தவர்கள். இருவரும், எனக்கு நண்பர்கள். ஆனால், அவர்கள் இடையே நட்பு இல்லை.இந்தப் பிரச்னை மிகவும் சிக்கலானது. இரு நாடுகளுக்கும் இடையேயான பிரச்னைக்கு முக்கிய காரணம் மதம். ஹிந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே, அந்தளவுக்கு பிணைப்பு கிடையாது. 

காஷ்மீர் பிரச்னை, பல ஆண்டுகளாக, பல்வேறு பெயர்களில் நடந்து வருகிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு, மத்தியஸ்தம் செய்யவும், உதவவும் தயாராக உள்ளேன்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...