ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழன் சைக்கிள் ஓட்டினானா? - திருச்சி கோயில் சிற்பத்தில் ஆச்சர்யம்
திருச்சி உறையூரில் அமைந்துள்ளது பஞ்சவர்ணேஸ்வரர் கோயில். ஐவண்ணநாதர் கோயில் என்றழைக்கப்படும் இந்த கோயிலை வீர ஆதித்த சோழன் அமைத்ததாக உறையூர் புராணம் கூறுகிறது. இவர் வாழ்ந்த காலம் (கிபி872-907). இக்கோயிலில் உள்ள கல்வெட்டுகள் மற்ற கோயிலை காட்டிலும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகவும், வித்தியாசங்கள் நிறைந்ததாகவும் காணப்படுகிறது. யானையை கோழி அடக்குவது போன்ற சிற்பங்களைக் கொண்டு காணப்படுகிறது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக கட்டப்பட்டதாக சொல்லப்படுகிற இந்த கோயிலில் சைக்கிளில் ஒருவர் அமர்ந்து இருக்கும் சிற்பம், பளு தூக்குவது போன்ற சிற்பம், யோகாசனங்களை குறிக்கும் வகையிலான சிற்பங்கள், பெண்கள் இணைந்து யானை வடிவில் நின்று அதன்மீது ஒரு பெண் நின்று அம்பு எய்வது போன்ற சிற்பங்கள் காண்போரை வியக்க வைப்பவையாக அமைகின்றது.
அம்மன் சன்னிதியில் கீழ் புறச் சுவரில் ஒரு இடுக்கில் சைக்கிள் ஓட்டும் மனிதன் சிலை செதுக்கப்பட்டுள்ளது. இச்சிலை ஆராய்ச்சிக்கு உரியதாக கருதப்படுகிறது. இச்சிலையில் சிறுவன் கழுத்தில் துண்டு சுற்றப்பட்டுள்ளது. வேட்டி வரிந்து கட்டிய நிலையில் உள்ள இந்த சிற்பம் அப்போது பணியாற்றிய ஒரு சிற்பியின் ஆர்வத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என அனைவராலும் வியந்து பார்க்கப்படுகிறது.
ஏனெனில் சைக்கிள் முதலில் 1890 ஆம் ஆண்டு ஜெர்மனியில் கண்டுபிடிக்கப்பட்டது என்ற நிலையில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோயிலில் அக்காலத்திலேயே சைக்கிள் பயன்படுத்தப்பட வாய்ப்பில்லை.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட கோயிலாக இருந்தாலும், அதன் பிறகு பல்வேறு நிலைகளில் புரனமைக்கப்பட்டுள்ளது. எனவே, 80 ஆண்டுகளுக்கு முன்பு கோவில் திருப்பணி நடைபெற்ற போது கூட இந்த சிற்பம் செதுக்கப்பட்டு இருக்கலாம் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.
இத்தகைய சிற்பங்களை மக்கள் ஆர்வத்துடன் வந்து பார்த்துச் செல்கின்றனர். தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இந்த சிற்பத்தின் தொன்மை குறித்து ஆராய்ச்சி செய்தால் தமிழரின் பண்பாடு மேலும் சிறக்கும் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
No comments:
Post a Comment