Tuesday, November 26, 2019

மஹா.,வில் ரகசியமாய் அமைந்த அரசு கலைந்தது.

மஹாராஷ்டிராவில், தேசியவாத காங்கிரசின் அஜித் பவாரை நம்பி, அவசரம் அவசரமாக அமைந்த, பா.ஜ., ஆட்சி, நான்கே நாட்களில் கலைந்தது. சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தும்படி, உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை அடுத்து ஏற்பட்ட திருப்பங்களால், முதல்வர் பதவியை தேவேந்திர பட்னவிசும், துணை முதல்வர் பதவியை அஜித் பவாரும் ராஜினாமா செய்தனர். சிவசேனாவின் உத்தவ் தாக்கரே தலைமையில், புதிய அரசு அமையவுள்ளது.

மஹாராஷ்டிராவில், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சியாக இருந்த சிவசேனாவுக்கு பெரும்பான்மை தொகுதிகள் கிடைத்தன. முதல்வர் பதவி, அமைச்சரவை பங்கீடு தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இந்த கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி முறிந்தது.

மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல் படுத்தப்பட்டது. சிவசேனா தலைமையில், காங்., - தேசியவாத காங்., கட்சிகள் கூட்டணி ஆட்சி அமைக்க திட்டமிட்டன. இந்நிலையில், 22ல், அதிரடி திருப்பம் ஏற்பட்டது. தேசியவாத காங்., கட்சியின் மூத்த தலைவரான அஜித் பவார் ஆதரவுடன், பா.ஜ., ஆட்சி அமைத்தது. தேவேந்தி பட்னவிஸ் முதல்வராகவும், அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றனர்.

இதை எதிர்த்து, சிவசேனா, காங்., தேசியவாத காங்., கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. அஜித் பவாரும், தங்கள் கட்சியின் ஒரு சில எம்.எல்.ஏ.,க்களும் மட்டுமே, பா.ஜ.,வுடன் இருப்பதாகவும், மற்ற எம்.எல்.ஏ.,க்கள் தங்களுடன் இருப்பதாகவும் தேசியவாத காங்., கட்சி அறிவித்தது.


அணிவகுப்பு

இதற்கிடையே, மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில், சிவசேனா, காங்., தேசியவாத காங்.,கட்சிகளை சேர்ந்த, 162 எம்.எல்.ஏ.,க்களின் அணிவகுப்பு, பத்திரிகையாளர்களின் முன், நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதன் மூலம், அஜித் பவாருடன் இருந்த பெரும்பாலான எம்.எல்.ஏ.,க்கள், தேசியவாத காங்., தலைவர் சரத் பவாரிடம் திரும்பி விட்டது உறுதிப் படுத்தப்பட்டது.

இந்நிலையில், சிவசேனா, காங்., தேசியவாத காங்., கட்சிகள் தொடர்ந்த வழக்கில், நீதிபதி என்.வி.ரமணா, அசோக் பூஷண், சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, நேற்று காலை, 10:30க்கு தீர்ப்பளித்தது. தீர்ப்பில் நீதிபதிகள் கூறியதாவது: பட்னவிஸ் தலைமையிலான அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்றும், உடனடியாக நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்துவதில் தாமதம் ஏற்பட்டால், குதிரை பேரம் நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது என்பதை மறுக்க முடியாது.

இதுபோன்ற நேரத்தில், ஜனநாயகத்தின் மதிப்பை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு, நீதிமன்றத்துக்கு உள்ளது. எனவே, சட்டசபையின் மூத்த உறுப்பினரை இடைக்கால சபாநாயகராக தேர்வு செய்து, இன்று மாலை, 5:00 மணிக்குள் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தி, பட்னவிஸ் தலைமையிலான அரசு, பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.


அவசர ஆலோசனை

ஓட்டெடுப்பில், எந்தவித ரகசியமும் கூடாது. வெளிப்படையாக, நேரடியாக நடத்தப்பட வேண்டும்; இதை,நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். ஓட்டெடுப்புக்கு முன், புதிய எம்.எல்.ஏ.,க்களுக்கு, இடைக்கால சபாநாயகர் பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும். இவ்வாறு, நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர்.உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு பின், மஹாராஷ்டிரா அரசியலில் அடுத்தடுத்து அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டன. டில்லியில், பிரதமர் மோடியுடன், பா.ஜ., தலைவர் அமித் ஷா, செயல் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் அவசர ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து, சொந்த காரணத்துக்காக, துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக, அஜித் பவார் அறிவித்தார்.

அடுத்த சில நிமிடங்களிலேயே, பட்னவிஸ், மும்பையில் செய்தியாளர்களை சந்தித்து, நீண்ட விளக்கம் அளித்தார். பின், முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:தேசியவாத காங்., - எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், தன் பக்கம் இருப்பதாக அஜித் பவார் தெரிவித்தார். அதன் அடிப்படையிலேயே, ஆட்சி அமைக்க உரிமை கோரினோம். பதவிப் பிரமாணமும் எடுத்தோம். ஆனால், சொந்த காரணங்களுக்காக, துணை முதல்வர் பதவியிலிருந்த விலகுவதாக, அஜித் பவார், சற்று முன், என்னிடம் தெரிவித்தார்.


எதிர்கட்சி

இதனால், பெரும்பான்மைக்கு தேவையான எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை எங்களிடம் இல்லை. எனவே, முதல்வர் பதவியை ராஜினாமா செய்து, சட்டசபையில் ஆரோக்கியமான எதிர்க்கட்சியாக செயல்பட முடிவு செய்துள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.

இதையடுத்து, கவர்னர் மாளிகைக்கு சென்ற பட்னவிஸ், தன் ராஜினாமா கடிதத்தை, கவர்னர் பகத் சிங் கோஷ்யாரியிடம் அளித்தார். அவரது ராஜினாமாவை ஏற்பதாக, கவர்னர் அறிவித்தார். அடுத்த கட்டமாக, சிவசேனா தலைமையில், தேசியவாத காங்., காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளன. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, முதல்வராக பதவியேற்கவுள்ளார்.

அஜித் பவாரை நம்பி, அவசரப்பட்டு முடிவு எடுத்து, முதல்வராக பதவியேற்ற பட்னவிஸ், நான்கு நாட்களிலேயே ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது, பா.ஜ.,வுக்கு ஏற்பட்ட பின்னடைவாக கருதப்படுகிறது. மஹாராஷ்டிரா சட்டசபையில், பா.ஜ.,வுக்கு, 105 உறுப்பினர்களும், சிவசேனாவுக்கு, 56 உறுப்பினர்களும் உள்ளனர். தேசியவாத காங்கிரசுக்கு, 54 பேரும், காங்கிரசுக்கு, 44 பேரும் உள்ளனர்.

சட்டசபையில், பெரும்பான்மைக்கு, 144 உறுப்பினர்கள் தேவை. சிவசேனா, காங்., தேசியவாத காங்., கட்சிகள் அடங்கிய, 'மஹா விகாஸ் அகாதி' கூட்டணிக்கு, 154 உறுப்பினர்கள் உள்ளனர். தேசியவாத காங்கிரசின் அஜித் பவார், யாருக்கு ஆதரவு அளிப்பார் என்ற தகவல் தெரியவில்லை. இதுதவிர, சில சுயேச்சைகள் மற்றும் இதர கட்சிகளை சேர்ந்த சிலரும், இந்த மூன்று கட்சி கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளனர்.


5 ஆண்டுகளுக்கு முதல்வர்!


அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, உத்தவ் தாக்கரே தான், மஹாராஷ்டிராவின் முதல்வர். இதில் எந்த சந்தேகத்துக்கும் இடம் இல்லை. அஜித் பவார், துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதனால், மீண்டும் சரத் பவார் பக்கம் வந்து விடுவார் என நம்புகிறோம். சஞ்சய் ராவத்மூத்த தலைவர், சிவசேனா


இடைக்கால சபாநாயகர் தேர்வு

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, மஹாராஷ்டிரா சட்டசபையின் இடைக்கால சபாநாயகராக, பா.ஜ., வைச் சேர்ந்தவரும், சபையின் மூத்த உறுப்பினருமான காளிதாஸ் கோலம்ப்கர், நேற்று தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு, கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இதையடுத்து, இன்று காலை, 8:00 மணிக்கு, மஹாராஷ்டிரா சட்டசபையின் சிறப்பு கூட்டத் தொடர் கூடுகிறது. இதில், சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு, இடைக்கால சபாநாயகர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.


'குதிரை பேரம் நடத்த மாட்டோம்'


மஹாராஷ்டிரா முதல்வர் பதவியை ராஜினாமா செய்த தேவேந்திர பட்னவிஸ் கூறியதாவது:சட்டசபை தேர்தல் நடந்து முடிந்ததுமே, குதிரை பேரத்தில் ஈடுபடுவது இல்லை என்பதில் உறுதியாக இருந்தோம். எதிர்காலத்திலும், அது தொடரும். இது தொடர்பாக எதிர்க்கட்சிகள், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை, பா.ஜ., மீது சுமத்துகின்றன. சிவசேனா தான், அது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது.

ஆட்சி அதிகாரத்துக்காக, ஹிந்துத்வா கொள்கையை, காங்., தேசியவாத காங்., கட்சிகளிடம், சிவசேனா அடகு வைத்து விட்டது. பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு தான், மஹாராஷ்டிரா மக்கள் ஓட்டளித்தனர். மக்கள் தீர்ப்பை மதிக்காமல், சிவசேனா தலைவர்கள் செயல்பட்டு வருகின்றனர். சிவசேனாவுக்கு சுழற்சி முறையில் முதல்வர் பதவி அளிப்பதாக, தேர்தலுக்கு முன், எந்த வாக்குறுதியையும், பா.ஜ., அளிக்கவில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.


துணை முதல்வர் யார்?


சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்றால், கூட்டணி கட்சிகளான காங்., மற்றும் தேசியவாத காங்., கட்சிகளுக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. தேசியவாத காங்., கட்சியின் மூத்த தலைவரான அஜித் பவார், கூட்டணி மாறி, குழப்பத்தை ஏற்படுத்தியதால், அவர், கட்சியிலிருந்து ஓரம் கட்டப்பட வாய்ப்புள்ளது. 'தேசியவாத காங்., கட்சியின் மற்றொரு மூத்த தலைவரான ஜெயந்த் பாட்டீல், காங்கிரசின் மூத்த தலைவரான பாலாசாகிப் த்ரோட் ஆகியோருக்கு துணை முதல்வர் பதவி கிடைக்கலாம்' என, மஹாராஷ்டிரா அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.


நாளை பதவியேற்பு


சிவசேனா, காங்., தேசியவாத காங்., கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று இரவு நடந்தது. இதில் இந்த மூன்று கட்சிகளும் இணைந்து 'மஹா விகாஸ் அகாதி' என்ற பெயரில் புதிய கூட்டணியை அமைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டணியை வழிநடத்துவதற்காக ஒருங்கிணைப்பு குழு அமைக்கவும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கூட்டணியின் தலைவராக சிவசேனாவின் உத்தவ் தாக்கரே 59 தேர்வு செய்யப்படுவதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து மும்பையில் உள்ள சிவாஜி பார்க்கில் நாளை உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...