நேர்மையான அரசியலின் அடையாளம் ஜீவானந்தம்!ஜீவா' என்று நண்பர்களால் அன்போடு அழைக்கப்பட்ட ப.ஜீவானந்தத்தின் நினைவு நாள் இன்று.
காந்திய கொள்கையைப் பின்பற்றி, பின் பெரியாரோடு களப்பணியாற்றி, இறுதியாக மார்க்சியவாதியானவர் ஜீவானந்தம்.
1907-ம் ஆண்டு ஆகஸ்ட் 21-ந்தேதி நாகர்கோவிலுக்கு அருகேயுள்ள பூதபாண்டியில் பிறந்தவர் ஜீவானந்தம். குலத் தெய்வத்தின் பெயரை ஒட்டி, சொரிமுத்து என்பதே அவரின் இயற்பெயர். பின்னாளில் ஜீவானந்தமானார். தனித்தமிழ் இயக்கத்தின்பால் ஈர்க்கப்பட்டவர் தன் பெயரை உயிர் இன்பன் என மாற்றிக்கொண்டார். ஒருமுறை, மறைமலை அடிகளாரை சந்திக்கச் சென்றபோது, வாசல் கதவைத் தட்டினார். அப்போது மறைமலை அடிகளார், உள்ளிருந்தவாறே, 'யாரது, போஸ்ட் மேனா?' என்றாராம். அந்தச் சந்திப்பின்மூலம் தனித்தமிழ் மீதான பிடிப்பு தளர்ந்து மீண்டும் ஜீவானந்தம் என்றே ஆனார்.
சிறுவயதிலிருந்தே காந்தியக் கொள்கை மீது அதீத பற்று கொண்டவர். சிராவயலில் காந்தி ஆசிரமம் ஒன்றையும் நிறுவினார். அங்கு, காந்தி வரவேண்டும் என விரும்பி, வேண்டுகோள் வைத்தார். காந்தியும் மகிழ்ச்சியுடன் வந்தார். ஆசிரமத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டு, 'ஜீவானந்தம் உங்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது?' என்றார் காந்தி. புன்னகையுடன் ஜீவா, 'இந்தத் தேசம்தான் என் சொத்து' என்றார். அதைக் கேட்டு வியப்படைந்த காந்தி, 'இல்லை ஜீவா, நீங்கள்தான் இந்தத் தேசத்தின் சொத்து' என்றாராம்.
காங்கிரஸ் மாநாடு ஒன்றில் பெரியாரின் நட்பு கிடைக்க, அவரைப் பின் தொடர்கிறார். அப்போது, பகத்சிங் எழுதிய, 'நான் ஏன் நாத்திகனானேன்' எனும் நூலை தமிழாக்கம் செய்கிறார் ஜீவா. அதற்காக அவரை கைது செய்து, கோவை சிறையில் அடைத்தது ஆங்கிலேய அரசு. சிறையில் கடும் இன்னல்களுக்கு உள்ளானார் ஜீவா.
ஜீவாவின் தனிச் சிறப்பு அவரின் மேடைப் பேச்சு. அவரின் பேச்சைக் கேட்க, பல ஊர்களிலிருந்து மக்கள் திரண்டு வருவார்கள். அவரின் பேச்சு இந்திய விடுதலை உணர்வை மக்களிடையே விதைத்தது. இதைக் கவனித்த ஆங்கிலேய அரசு அவரின் பேச்சுக்கு தடை விதித்தது. ஆனால் அதையும் மீறி கோட்டையூரில் அவர் பேசினார். அதனால் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தது. சிறையில் கம்யூனிஸக் கருத்து கொண்டவர்களின் நட்பு கிடைக்க, அதுபற்றி அதிகம் தெரிந்துகொண்டார். கம்யூனிஸம் பற்றிய நூல்களைத் தொடர்ந்து படித்தார். இந்நிலையில், அவரின் பாதை கம்யூனிஸத்தை நோக்கியதாக மாறியது.
1946-ல் கம்யூனிஸ்ட்டு கட்சி தடைச் செய்யப்பட்டதும் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார். இந்திய விடுதலைக்குப் பிறகு, 1952-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றிப்பெற்று, சட்டமன்ற உறுப்பினரானார். அங்கு, தொழிலாளர்களின் பிரச்னைகளை உரக்கப் பேசினார். அவர் சட்டமன்றத்தில் ஆற்றிய உரைகள் பின்னாளில் தொகுக்கப்பட்டு, தனி நூலாக வெளியிடப்பட்டது.
சிங்காரவேலர், வ.உ.சிதம்பரனார், ராஜாஜி, காமராஜர் உள்ளிட்ட பல தலைவர்களுடன் நெருங்கிப் பழகிய ஜீவா, தனது வாழ்நாள் முழுவதும் எளிமையும் நேர்மையும் கொண்டவராக வாழ்ந்தார். அவரின் இறுதி ஆண்டுகளில் சென்னை புற நகரில் குடிசை ஒன்றில் வாழ்ந்தார். அதைப் பார்த்த அன்றைய முதலமைச்சர் காமராஜர், ஜீவாவுக்கு ஒரு வீடு ஒதுக்கி தருவதாக கூறியதை அன்போடு மறுத்துவிட்டார்.
ஜீவா மிகச் சிறந்த எழுத்தாளர். கவிஞர். அவர் எழுதிய 122 கவிதைகள் ஒரே நூலாக தற்போது கிடைக்கிறது. இதுதவிர, 10க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
No comments:
Post a Comment