ஒரு காட்டில் ஒரு முனிவர் வாழ்ந்து வந்தார். அவரிடம் மூன்று செங்கற்கள் மட்டுமே இருந்தன.
தூங்கும் போது, ஒரு கல்லை தலைக்கும், ஒரு கல்லை இடுப்பிற்கும், ஒரு கல்லை காலுக்கும் வைத்துக் கொண்டு, தூங்கி விடுவார். ஏனென்றால், மழை பெய்தால் கூட, அவருக்கு கீழே ஓடி விடும். அளவான தூக்கம் மட்டுமே கொள்வார்.
சாப்பிடும் போது, மூன்று கல்லையும் சேர்த்து வைத்துக் கொண்டு, அதன் மீது உணவினைப் போட்டு சாப்பிடுவார். ஏனென்றால், தரையில் வைத்தால், மண் சோறுடன் கலந்து விடும். மிகவும் குறைவாக உண்ணுவார்.
அமரும் போது, மூன்று கல்லையும் சேர்த்து ஆசனமாக வைத்துக் கொண்டு, அமர்ந்து விடுவார். ஏனென்றால், எந்த ஒரு பூச்சியும், கல்லைச் சுற்றி சென்று விடும்.
இவ்வாறு மூன்று கற்களை மட்டுமே வைத்துக் கொண்டு வாழ்ந்து வந்தார்.
எப்போதும் சந்தோஷமாக இருந்த முனிவரை, தனது கஷ்டங்களுக்கு தீர்வு வேண்டி ஒரு அரசன் அவரை சந்திக்க வந்தான். அப்போது முனிவர் இவ்வாறு மூன்று கற்களுடன் கஷ்டப்படுவதைக் கண்டு, அவரை அரண்மனைக்கு அழைத்துச் செல்ல விரும்பினான். முனிவர் மறுத்த போதும், அரசனின் பிடிவாதம் காரணமாக ஒத்துக் கொண்டார்.
அரசனின் அரண்மனையில், முனிவருக்கு பொன்னால் ஆன, பலகை போடப்பட்டது. தங்க தாம்பாளங்களில் உணவு வைக்கப்பட்டது. முனிவர் முன்னைப் போலவே, செங்கற்களை சேர்த்து வைத்து, அதில் எப்போதும் சாப்பிடும் சோறின் அளவே போட்டுக் கொண்டு உண்டார்.
அரசனின் அரண்மனையில், ஹம்ஸதூளிகா மஞ்சத்தில் முனிவர் உறங்குமாறு கேட்டுக் கொண்டான். முனிவர் முன்னைப் போலவை, மூன்று கற்களை ஹம்ஸதூளிகா மஞ்சத்தில் போட்டு, அதன் மீது படுத்துக் கொண்டு உறங்கினார். அளவான தூக்கத்துடன், காலை எழுந்தார்.
மூன்று செங்கற்களையும் சேர்த்து, ஆசனம் செய்து, தியானத்தில் ஆழ்ந்தார்.
இது சில நாட்கள் தொடரவே, அரசன் முனிவர் காட்டில் வாழும் அதே வாழ்க்கை முறையை அரண்மனையிலும் கடைபிடிப்பதைக் கண்டு, முனிவரிடம் அவர் கேட்டுக் கொண்டபடி, காட்டிலேயே விட்டு விட்டான்.
முனிவர், அரசனிடம் சொன்னார்;
'மன்னா. அனுபோக பொருட்கள் குறைவாக இருக்க, இருக்க நிம்மதி பெருகும். அனுபோக பொருட்கள் பெருக, பெருக துன்பங்கள் பெருகும். எனவே, தேவையைச் சார்ந்து வாழ்க்கையை அமைத்துக் கொள். உன்னுடைய எல்லா துன்பங்களுக்கும் உன்னுடைய தேவைக்கு மீறிய ஆசைகள் தான் காரணம். '
முனிவர் சொன்னதைப் போல், நாம் நமது தேவைகளை சார்ந்து வாழும் போது, அனுபோக பொருட்கள் குறைவாக பயன்படுத்த, எப்போதும் நிம்மதியாக இருக்கலாம். எந்த ஒரு இடத்திலும், நம்மால் முனிவரைப் போல், நிம்மதியாக வாழ முடியும்.
No comments:
Post a Comment