Tuesday, January 14, 2020

தமிழக கூட்டணி கட்சிகள் இடையே 'பொங்கல்!': நேற்று முதல் துவங்கியது அரசியல் சதுரங்கம்.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில், தமிழகத்தில் உள்ள, அ.தி.மு.க., - தி.மு.க., கூட்டணி கட்சிகள், ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டு, 'பொங்கல்' வைக்க துவங்கி உள்ளன. காங்கிரஸ் உடனான உறவு முறியலாம் என, தி.மு.க., முதன்மை செயலர் டி.ஆர்.பாலு சூசகமாக தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், அ.தி.மு.க., தன் கூட்டணியில் உள்ள, பா.ஜ.,வை வெளுத்து வாங்குகிறது. தமிழகத்தில், நேற்று முதல் அரசியல் சதுரங்கம் துவங்கி உள்ளது.

தமிழகத்தில், லோக்சபா தேர்தல் முதல், அ.தி.மு.க., தலைமையில் ஒரு கூட்டணியும், தி.மு.க., தலைமையில் மற்றொரு கூட்டணியும் செயல்பட்டு வருகின்றன. அ.தி.மு.க., கூட்டணியில், பா.ஜ., - பா.ம.க., - தே.மு.தி.க., - த.மா.கா., - புதிய நீதிக்கட்சி போன்றவை இடம் பெற்று உள்ளன. தி.மு.க., கூட்டணியில், காங்கிரஸ் - கம்யூனிஸ்டுகள் - ம.தி.மு.க., - விடுதலை சிறுத்தைகள் - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உட்பட, பல கட்சிகள் உள்ளன. இவ்விரு கூட்டணியிலும், சமீபத்தில் நடந்து முடிந்த, ஊரக உள்ளாட்சி தேர்தல், உரசலை ஏற்படுத்தி உள்ளது.

அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும், பெரியண்ணன் மனப்பான்மையோடு நடந்து கொண்டதாக, கூட்டணி கட்சிகள் புலம்பின. அ.தி.மு.க., கூட்டணியில், பா.ஜ.,வும்; தி.மு.க., கூட்டணியில், காங்கிரசும் தங்களின் மனக்குமுறலை வெளிப்படுத்தி உள்ளன. தை முதல் நாளான இன்று, தமிழர்கள் அனைவரும், பொங்கல் பண்டிகையை கொண்டாடும் நிலையில், தமிழக அரசியல் கட்சிகள், கூட்டணிக்குள் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து, 'பொங்கல்' வைக்க துவங்கி உள்ளனர்.
DMK,ADMK,BJP,Congress,பொங்கல்,திமுக,அதிமுக,திமுக,காங்கிரஸ், கூட்டணி

அ.தி.மு.க., கூட்டணியில் உள்ள, பா.ஜ.,வை சேர்ந்த, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சமீபத்தில், 'பயங்கரவாதிகளின் பயிற்சி கூடாரமாக, தமிழகம் மாறி வருகிறது. தி.மு.க., - காங்கிரஸ் துணையோடு, பயங்கரவாதிகள் கூட்டணி அமைத்து, தமிழகத்தில் செயல்படுகின்றனர்' என்றார். அவரது பேட்டி, அ.தி.மு.க.,வினரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், சென்னையில் நேற்று கூறியதாவது: பொன்.ராதாகிருஷ்ணன் நல்லா இருந்த மனுஷன், ஏன் இப்படி ஆனார் என தெரியவில்லை. ஜெயலலிதா காலத்திலிருந்தே, அரசை குற்றம் சொல்வதை, வாடிக்கையாக வைத்துள்ளார். அவர் கருத்தை, பா.ஜ., கருத்தாக நாங்கள் எடுத்துக் கொள்வதில்லை. ஐந்து ஆண்டுகள் மத்திய அமைச்சராக இருந்த அவர், தமிழகத்திற்கு ஒரு திட்டத்தையும், கொண்டு வரவில்லை. நாங்கள் மத்திய அரசோடு இணக்கமாக இருந்து, தமிழகத்திற்கு நிதிகளை பெற்றுள்ளோம். தமிழகத்தில், சட்டம், ஒழுங்கு சிறப்பாக உள்ளது. பயங்கரவாதிகள் ஒழிக்கப்பட்டுள்ளனர். சட்டம், ஒழுங்கை பராமரிக்க, முதல்வர் எடுத்த முயற்சிக்கு, மத்திய அரசு அங்கீகாரம் கொடுத்து விருது வழங்கியுள்ளது.

தனக்கு, மாநில தலைவர் பதவி கிடைக்காத விரக்தியின் வடிவமாக, பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சை பார்க்கிறோம். எங்கோ காட்ட வேண்டிய கோபத்தை, அவர் எங்கள் மீது காட்டுகிறார். அ.தி.மு.க., ஆட்சியில், பயங்கரவாதம் தலை துாக்காது; வேரோடு வீழ்த்தி விடுவோம். பயங்கரவாதிகளுக்கும், சமூக விரோதிகளுக்கும், தமிழகத்தில் இடமில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.

இதுகுறித்து, பா.ஜ., மாநில பொதுச்செயலர் வானதி சீனிவாசன் கூறியதாவது: தேசிய புலனாய்வு முகமையால் கைது செய்யப்பட்டவர்கள், தமிழகத்தில் தான் அதிகம். காவல் துறை அதிகாரியை சுட்டுக் கொல்லும் அளவிற்கு, பயங்கரவாதிகள் வளர்ந்துள்ளனர். மாநில அமைச்சர், முதலில் அதன் ஆபத்தை புரிந்து கொள்ள வேண்டும். அதை விடுத்து, தனிப்பட்ட முறையில், 'பொன்.ராதாகிருஷ்ணன் அதை செய்தாரா, கூட்டணியில் இருக்காரா...' எனக்கூறுவது நாகரிகமானதல்ல. இவ்வாறு, அவர் கூறினார். இரு கட்சியினரும், மாறி மாறி வசைபாட துவங்கியிருப்பது, அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

காங்., உறவு முறிவு?
அதேபோல, தி.மு.க., - காங்., இடையேயும் மோதல் முற்றியுள்ளது. சில தினங்களுக்கு முன், தி.மு.க.,வை விமர்சித்து, தமிழக காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டார். அது, தி.மு.க.,வினரிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், தமிழக காங்., தலைவர் அழகிரி, நேற்று டில்லி சென்று, காங்., தலைவர் சோனியாவை சந்தித்து பேசினார்.

பின், அழகிரி கூறுகையில், ''தி.மு.க.,வுடன், கூட்டணியில் தான் இருக்கிறோம்,'' என்றார். இவ்வாறு, அழகிரி சமாளித்தாலும், காங்., உடனான கூட்டணி முறியலாம் என்பதை, நேற்று தி.மு.க., சூசகமாக தெரிவித்தது.

தி.மு.க., முதன்மை செயலர் டி.ஆர்.பாலு, சென்னை அறிவாலயத்தில் அளித்த பேட்டி: தமிழக காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டசபை காங்., தலைவர் ராமசாமி ஆகியோர் ஒரு அறிக்கை வெளியிட்டனர். இது குறித்து, தி.மு.க., தொண்டர்கள், ஸ்டாலினிடமும், என்னிடமும், தங்களது சங்கடத்தை தெரிவித்தனர். நம் கூட்டணியில் தான் காங்கிரஸ் இருக்கிறதா என, கேட்டனர். ஆகையால், தி.மு.க., குறித்த அறிக்கையை கே.எஸ்.அழகிரி தவிர்த்திருக்கலாம். அவர்கள் அறிக்கையின்படி, ஸ்டாலின் மீது வைத்த குற்றச்சாட்டாகவே, நாங்கள் அதை பார்க்கிறோம். அதன் அடிப்படையில், டில்லியில், காங்., நடத்திய கூட்டத்தில் பங்கேற்கவில்லை. தி.மு.க., - காங்., கூட்டணி பழைய நிலைக்கு திரும்பியிருக்கிறதா என்பதற்கு, காலம் பதில் சொல்லும்.இவ்வாறு, டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.

தி.மு.க., செயற்குழு கூட்டம், வரும், 21ம் தேதி, சென்னை அறிவாலயத்தில் நடக்க உள்ளது. இந்த கூட்டத்தில், கூட்டணி நிலைப்பாடு குறித்து, தி.மு.க., முக்கிய முடிவு எடுக்கும் என, கூறப்படுகிறது. இவ்வாறு, தமிழகத்தில், அ.தி.மு.க., - தி.மு.க., என, இரண்டு கூட்டணியிலும், கருத்து மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், கட்சிகள் கூட்டணி மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழர் திருநாளான பொங்கல், இன்று கொண்டாடப்படும் நிலையில், தமிழகத்தில், அரசியல் சதுரங்கம், நேற்று முதல் முதல் துவங்கியுள்ளது.

துணை சபாநாயகர் தி.மு..க.,வுக்கு பதவி?


லோக்சபா துணை சபாநாயகர் பதவி, ஏழு மாதங்களாக காலியாகவே உள்ளது. இந்த பதவியை ஏற்க, பா.ஜ., கூட்டணியில் உள்ள சில கட்சிகளும், கூட்டணியில் இல்லாத கட்சிகளும் தயாராக உள்ளன. தற்போது, தி.மு.க., கூட்டணியில் இருந்து, காங்கிரஸ் கழற்றி விடப்படும் சூழல் உருவாகி உள்ளது. இதனால், லோக்சபா துணை சபாநாயகர் பதவியை, தி.மு.க.,வுக்கு ஒதுக்க, பா.ஜ., முன் வருமானால், அப்பதவியை ஏற்க, தி.மு.க.,வும் தயாராக உள்ளது என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...