Wednesday, March 4, 2020

இப்படியொரு குழு இருக்கிறதா? ரேஷன் கடைகளில் விழிப்புணர்வு!

ரேஷன் கடைகளில் உள்ள, விஜிலென்ஸ் குழு தொடர்பாக, கார்டுதாரர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, புதிய உறுப்பினர்களை தேர்வு செய்ய, உணவுத் துறை முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில், 35 ஆயிரம் ரேஷன் கடைகள் வாயிலாக, 2.05 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, அரிசி, கோதுமை இலவசமாகவும்; சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள், குறைந்த விலையிலும் வழங்கப்படுகிறது. இதற்காக, தமிழக அரசு, ஆண்டுக்கு, 6,000 கோடி ரூபாய் செலவு செய்கிறது. ஒரு ரேஷன் கடையில், 1,200 கார்டுகள் வரைஉள்ளன. தமிழகத்தில், உணவு பாதுகாப்பு சட்டம், 2016 நவம்பரில் அமல்படுத்தப்பட்டது.

இதையடுத்து, 2017ல், ஒவ்வொரு கடைக்கும், தனி விஜிலென்ஸ் குழு ஏற்படுத்தப்பட்டது. ஏழு பேர் வரை உள்ள குழுவில், தலைவர், உறுப்பினர்கள் என அனைவரும், கடையில் பொருட்களை வாங்கும் கார்டுதாரர்கள் ஆவர். அந்த குழு, மாதந்தோறும் கூடி, அனைவருக்கும் பொருட்கள் சரியாக, தரமாக வழங்கப்பட்டனவா; குறித்த நேரத்தில் கடை திறக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்யும். அதில், தவறுகள் இருந்தால், வட்ட, மாவட்ட, மாநில அளவில் உள்ள, விஜிலென்ஸ் குழுக்களில் புகார் அளிக்கலாம்.

வட்ட அளவில், கோட்டாட்சியர்; மாவட்ட அளவில், கலெக்டர்; மாநில அளவில், உணவு வழங்கல் ஆணையர் ஆகியோர் தலைமையில், விஜிலென்ஸ் குழுக்கள் செயல்படுகின்றன. ரேஷன் முறைகேடுகள் வெளியில் தெரியாமல் இருக்க, ரேஷன் கடைகளை நடத்தும் கூட்டுறவு சங்க அதிகாரிகள், தங்களுக்கு வேண்டிய நபர்களை, ரேஷன் விஜிலென்ஸ் குழுக்களில் உறுப்பினர்களாக நியமித்துள்ளனர். இப்படி ஒரு குழு உள்ளது என்ற விபரம், கடையில் பொருட்கள் வாங்கும் பலருக்கு தெரிவதில்லை.

இதனால், கார்டுதாரர்களின் குறைகளை கேட்பதில்லை. இது தொடர்பாக, உணவுத் துறை உயரதிகாரிகளுக்கு, அதிக புகார்கள் சென்றுள்ளன. இதையடுத்து, விஜிலென்ஸ் குழு தொடர்பாக, கார்டுதாரர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, புதிய உறுப்பினர்களை நியமிக்க, அரசு முடிவு செய்து உள்ளது.

 இப்படியொரு குழு இருக்கிறதா? ரேஷன் கடைகளில் விழிப்புணர்வு!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...